அன்புக்குரிய தோழி!!
ஒரு காலத்தில் , 1983ம் ஆண்டுக்கு பின்னான இந்த நாட்களில் நீ நலமா என்று என்று கேட்டறியும் வழியில்லாமல் இருந்திருக்கிறேன்… இப்போது அநேகமாக ஒவ்வொரு நாளும் ஆசை தீர நீ அலுப்படையும் வரை நலமா நலமா என்று கேட்கும் வழியை தந்த விதியோ கடவுளோ எதுவோ ஒன்றுக்கு நன்றி கூறிக் கொண்டு உனக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சிவசோதி!!
உன்னைத் தேடிக் கண்டு பிடித்த பின் எனது அஞ்சல்கள் எழுதப்படுவது நின்று விடும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அது இனியும் தொடர்வது நல்லது என்றே நினைக்கிறேன்..!
இந்தக் கடிதங்கள் எமக்கிடையிலான நட்பின் அடையாளங்களைக் கொண்ட பதிவுகள். இங்கே எனக்கு உன்னிடம் சொல்ல வேண்டிய கவலைகள் இருக்கும். ஆதங்கம் இருக்கும். கோபங்கள் அடங்கும். என் ஏக்கங்கள் இருக்கும். உனக்கு வர வேண்டிய வாழ்த்துகள் கொட்டிக் கிடக்கும், மொத்தத்தில் உன்னிடம் பகிர வேண்டிய அல்லது பகிரப்பட்ட விசயங்களை எழுத்து வடிவில் பாதுகாத்து ஒரு அஞ்சல் பெட்டகமாக நான் இதை வைத்திருக்கப் போகிறேன்.
ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி என்பார்கள். ஆனால் நான் பிரசவங்கள் தவிர்த்து இரண்டு தடவை மறுபிறவி எடுத்திருக்கிறேனடி. ஒன்று பதினொரு வருடங்களாக காத்திருந்து திருமணம் செய்த போது…இரண்டாவது 1983 ஜூலை 10ல் பிரிந்து போன உன்னை மீண்டும் குரல்வழியாக சந்தித்த போது….!!
வாழ்கையில் எத்தனையோ கடந்து வந்துவிட்டோம்…! துள்ளித்திரிந்த காலங்களில் அறிமுகமாகி, துளிர்விட்ட தனி உலகத்தை நமக்கென்று படைத்துக் கொண்டிருந்த முனைப்பில் காணாமல் போய், இப்போது திரும்பவும் துள்ளவியலாத கடை நேரத்தில் சந்தித்திருக்கிறோம்..! எத்தனையோ இழந்திருக்கிறேன்..எவை எவையோ என்னை விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் கிடைத்த நட்புகள் எதுவும் என்னைக் கைவிடவில்லை. கடந்து போன காலங்களில் கூட ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு சம்பவமோ புகைப்படமோ நினைவுகளோ நம்மிடம் இருந்தது.
சந்திக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆனால் சந்தித்த பின் பிரிய வேண்டுமென்ற நினைப்பு அறுக்கிறது. ஆண்களின் நட்பு நினைத்த நேரத்தில் சந்திக்கவும் , அளவளாவவும், நிச்சயம் அடுத்த தடவை சந்திக்கலாம் என்ற தெளிவோடு திரும்பவும் தொடரும். ஆனால் பெண்களின் உண்மையான நட்பு பள்ளிக் காலங்களோடு முடிந்து போய்விடும். ஆண்களைப் போல் அடிக்கடி பழைய நட்புகளை சந்திக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்காது.
கணவன் என்ற ஒரு உறவு வர முன்பே சந்தித்த தோழி, வாழ்கையின் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளையும் , கனவுகளையும், விசயங்களையும் பகிர்ந்து கொண்ட , சொல்லப் போனால் இரத்த உறவுகளாலும், கணவர் குழந்தைகளாலும் கூட புரிய முடியாத எமது மனநிலையை ஒரு பார்வையில் புரிந்து கொள்ளுமளவுக்கு உயிராக இருக்கும் சிநேகிதி , எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் தினமும் சுற்றித்திரிந்த நண்பி.. அவளுடைய நட்பு பள்ளிப் படிப்போடு மூட்டை கட்டப்பட்டு , மனதின் ஞாபகக் கலங்களுக்குள் பத்திரமாக புதைக்கப்பட்டுவிடுவாள் நினைவுகளாக. அவ்வப்போது பிறந்தநாளுக்கும், விசேச தினங்களுக்கும் மறக்காமல் வாழ்த்து அட்டையும் கடிதமுமாக ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த பாலம் இருவரின் திருமணத்துக்கு பின் அப்படியே தொய்ந்து போய்விடும் ..நட்பு என்ற பயணிப்பை இருவரும் முற்றாக நிறுத்திவிட்டு வேறு பாதைகளில் அவர்கள் பயணம் தொடங்கிய புள்ளிகளில் சிநேகிதிகள் எனப்பட்டவர்கள் நினைவாலே செதுக்கபப்ட்ட சிலைகளாகிவிடுவார்கள்.
அதில் முழுப் பிழையும் பெண்களிடம் தான் இருக்கிறது. திருமணமென்றான பின் என்னமோ எல்லாமும் , எல்லாரும் நம்மைத் தான் நம்பியிருக்கிறார்களென்று ஒரு தேவையில்லாத முட்கிரீடத்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அவர்களை மட்டும் கவனிப்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது, அவர்களை முகம் நோகாமல் , மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள நம்மை விட்டால் வேறு யாருமே இல்லை என்று நாமும் நம்பி அவர்களையும் மூளைச்சலவை செய்து எமக்கான எதையும் நாம் அனுபவிக்காமல் , இரசிக்காமல் , பொழுது செலவிடாமல் நம்மை நாமே முடக்கிவிட்டு , நமக்கு நாமே சுமையாக தெரிகிறோம். எமது நட்புகளை நாமே தொலைக்கிறோம். தொடர்புகளை கழற்றிவிட்டு செக்கு மாடுகளாக உலாவர நம்மை நாம் தான் நியமித்துக் கொள்கிறோம். நமக்காக எப்போதாவது நேரம் ஒதுக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும்பாலான பெண்களின் உள்மனம் ஓலமிட்டு அழும்.
பழைய தோழிகளை சந்திப்பது கூட கணவரின் அனுமதியுடனோ அல்லது அவருடனோ தான் இருக்கும். சந்தித்தால் கூட வீட்டுக்கு போக வேணும், பிள்ளைகளுக்கு சமைக்க வேணும், கணவன் வரும் நேரம் என்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பள்ளிக்காலங்களில் சுற்றித்திரிந்த அந்த சுதந்திரம் இருக்காது.
சந்திக்க வரும் போது கூட புருசன் கூடவே வர வேண்டுமா என்று நான் அவளையோ அவள் என்னையோ கேட்க முடியாது..! என்னை விட்டிட்டு அவரால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது என்று பச்சைப் பொய்யை உற்ற தோழியிடமே சொல்லிக் கொள்ள வேண்டும். ஏனெனில் உரிமை என்பதும் , கடமை என்பதும் , வாழ்கை என்பதும் நட்புக்கோ , தோழிக்கோ இல்லை என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது. நாம் மூன்றாம் இடத்திலோ அல்லது அதற்கும் கீழேயோ தள்ளப்பட்டவர்கள் தான் என்பதை தனது தோழிக்கு திருமணம் நடந்து முடிந்த பின் தான் ஒவ்வொரு பெண்ணும் உணர்வாள்.
என் தோழி சந்தோசமாக இருக்கிறாள், என் தோழி வாழ்கையில் நல்ல நிலையில் இருக்கிறாள் , என் தோழி உயர்ந்திருக்கிறாள் என்ற பூரிப்புடன் பார்ப்பதும், அல்லது அதற்கு நேர்மாறான வாழ்கையை வாழும் ஒரு தோழியைப் பார்த்து மனம் புழுங்கி அழுவதும் தான் நட்பு என்றளவில் தான் பெண்களின் நட்பு இருக்கும்.
அத்தைகைய சூழலில் தான் எனது நட்பு வட்டமும் இருக்கிறது. அடிக்கடி தொலை பேசியில் நலம் விசாரிக்க முடிகிறது. கவலைகளையும் சந்தோஷங்களையும் , கிண்டல் கேலிகளையும் பகிரமுடிகிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் நின்று கொள்கிறோம். ஒருத்தி இலங்கையில், இன்னொருத்தி நோர்வேயில், மற்ற இரண்டு பேர் கனடாவில், இன்னும் இரண்டு பேர் லண்டனில் என்று இண்டர்நேஷனல் லெவலில் எனது நட்பின் விஸ்தாரணம் பரந்து விரிந்திருக்கிறது என்ற தம்பட்டத்தின் அடியில் சந்திக்கவியலாத சோகம் இருக்கிறது. பார்க்க முடியுமா என்ற ஏக்கம் இருக்கிறது. பார்க்காமலே போய் சேர்ந்துவிடுவோமா என்ற பயம் இருக்கிறது.
இத்தனை வருடங்களுக்கும் மேலான பிரிவின் பின்னான சந்திப்பு ஒன்று நிகழுமாயிருந்தால் கூட இரண்டு கிழமையோ 10 நாளோ என்ற நிபந்தனைகளுடன் தான் நிகழும். அதுவும் தனித் தனியாக தான் சந்திப்போம். பள்ளி நாட்களில் ஆறு பேரும் ஒன்றாக சந்தித்து , சுற்றித் திரிந்தது போல் இனிமேல் நம்மால் சந்திக்கவோ திரியவோ முடியாது. பழைய வாழ்கையின் எந்த சுவடும் கிடையாத ஒரு சூழலில் உற்ற தோழியர் கூட இன்னொருவர் போல் நின்று நலம் விசாரித்துவிட்டு விலகிப் போவோமோ என்ற பரிதவிப்பைப் பார்க்கிலும் சந்திக்காமலே இப்படியே இருந்துவிடுவது மேல் என்று தோன்றுகிறது.
சந்திக்கிறோமோ இல்லையோ , உன்னை செல்லமாக சீண்டி , பொய்யாக சண்டை போட்டு, ஓயாமல் சிரித்துக் கொண்டு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புடன் இப்படியே காலங்கள் போய்க் கொண்டிருந்தாலே போதும் இன்னொரு தடவை காணாமல் மட்டும் போய்விடாதே என்ற பிராத்தனைகளுடன் , எங்கிருந்தாலும் எல்லா வளங்களும் நலன்களும் கூடிய வாழ்வில் நீ நல்ல ஆரோக்கியத்துடன் கணவர் பிள்ளைகள் என்ற செல்வங்களுடன் நீண்ட காலம் நல்வாழ்வு வாழ வேண்டுமென்ற நல்வாழ்த்துகளுடன் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளடி !!
நல்வாழ்வு வாழ்க !! நல்வாழ்த்துகள்..!!
அன்புடன்
நான் .
.jpg)





