Wednesday, November 24, 2021

அஞ்சல் - 12


அஞ்சல் - 12.

 

என்றும் என் அன்புத் தோழிக்கு இனிய பிறந்த்நாள் நல்வாழ்த்துகள் !!!

வாழ்கையில் இளமையான பருவங்களில்...., கூட இருந்து பங்கு பெறவும், இன்ப துன்பங்களை பகிரவும் வேண்டிய தருணங்களில் முகவரிகளை தொலைத்துவிட்டு பாரிய சமுத்திரத்தினடியில் விழுந்து ஆழத்தில் புதைந்துவிட்ட புதையலாய் இருந்த இன்னொரு டைட்டானிக்கை முக்குளித்து தேடி எடுத்து வந்த பின் எமக்கான எந்தவொரு தருணங்களையும் எந்தவொரு காரணங்களுக்காகவும் தள்ளி வைக்க மனம் ஒப்புகிறதில்லை...!
இன்று உன் பிறந்த நாள் ! எத்தனையோ ஆபத்தான சூழல்களிலிருந்து மீண்டு உயிர்த்தெழுந்து வந்த இகாரஸ் நீ !
உன்னை இனி மேல் மீண்டும் சந்திக்க முடியுமா என்ற பெருத்த கேள்விக் குறியுடன் நகர்ந்து கொண்டிருந்த வாழ்கையில் திரும்பவும் நீ கிடைத்து ஒரு வருடமாகிவிட்டது... !
இந்த பிறந்த நாளில் , நீ நீண்ட காலம் எல்லா வளங்களோடும் நலங்களோடும் அமைதியாகவும் அரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்ற பிராத்தனைகளுடன் மனம் நிறைந்த்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
சாந்தா
மற்றும் தேவன் & பிள்ளைகள்

Monday, March 22, 2021

அஞ்சல் 11

அன்புள்ள சிவசோதிக்கு! 

நலம் ...! நலமறிய ஆவல்!


 Soul mate..! 
 ஒருவரின் ஆத்மாவின் சரி பாதி இன்னொருவரிடம் தான் இருக்கிறதாம். அந்த இரு பாதிகளும் வாழ்வில் சந்தித்து இணையும் போது மனமொத்த காதலர்களாக..தம்பதியர்களாக வாழ்வில் இணைவார்களாம். அந்த சரிபாதி ஆன்மாவை உணரும் வரை தேடல்கள் தொடரும். என்னுடைய அமெரிக்க சிநேகிதி ஒருவர் சொன்ன விளக்கம் இது.

 வாழ்வில் மனமொத்த தம்பதிகளாக இருப்பது என்பது ஒருசிலருக்கு தான் வாய்த்திருக்கும். அப்படியொரு தம்பதியராக என் உயிர் தோழி சிவசோதியும் அவள் கணவரும் இணைந்து வாழ்வதைப் பார்க்கும் வாய்ப்பை வரமாக தந்த எல்லாம் வல்ல சக்திக்கு நன்றிகள்..!

 பிரிவே வராது என்ற இறுமாப்பில் இணைந்து திளைத்த பள்ளித் தோழமைகளை விதி ஈவிரக்கமேயில்லாமல் ஆளுக்கொரு தேசமாய் பிய்த்து தூர எறிந்த பின்னும் ஒவ்வொன்றாய் தேடி தேடி திரும்பவும் அதே ஆறு புஷ்பங்கள் கோர்த்த மலர் ஆரமாய் எங்கள் தோழமைகள் சேர்ந்திருக்கும் இந்த சந்தோஷத்தை நாங்கள் எங்கள் கடைக் காலம் வரை கொண்டு செல்வோமானால் அது எங்கள் நட்பின் உறுதியில் மட்டுமல்ல எங்கள் வாழ்கை துணைவர்களின் உறு துணையிலும் தான் தங்கியிருக்கிறது. அந்த வகையில் என்னுயிர் தோழியின் கணவரும் மிகவும் இயல்பான அன்புடனும், நட்புடனும் எங்களுடன் ஒரு சகோதரராக நண்பராக இணைந்துவிட்டது எமது அதிர்ஷ்டம் தான். 

 ஒரு பெண் தன் பெற்றோருடன் இருந்த அதே சந்தோசமும், குதூகலத்துடனும் திருமணமான பின்னும் இருப்பாளேயானால் அவளுடைய கணவன் அவளை அவளுடைய பெற்றோருடன் போட்டி போட்டு அன்பில் திளைக்க வைக்கிறான் என்று அர்த்தம். மூச்சுக்கு மூச்சு , பேச்சுக்கு பேச்சு அவர், அவர் என்று தன்னவரின் புகழ்பாடுவதில் சலிப்படையாத என் தோழியிடம் அதை காண்கிறோம். 

 பிரிய மாட்டோம் என்றிருந்தோம்; பிரித்து வைத்தது சூழல்களும் சூழ்நிலைகளும். நம் ஒவ்வொருவரின் வாழ்கையின் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் பங்கு கொள்ள வேண்டியவர்களாயிருந்தும் வாழ்கையின் பாதிக்காலத்தை ஒருவர் எங்கிருக்கிறோம் என்று தெரியாமலே ஒருவரை ஒருவர் தேடிக் கொண்டிருந்தோம். உன் திருமணத்தில் நானிருந்து என் திருமணத்தில் நீயிருந்து கிண்டலும் கேலியுமாய், சந்தோஷமும் கண்கலங்களுமாய் களித்திருக்க வேண்டிய பாக்கியமில்லாமல் கழிந்தாலும் ..இன்று உன் திருமண நாள் ஆண்டுப் பூர்த்திக்கு வாழ்த்து சொல்லவாவது கடவுள் வழி விட்டிருக்கிறார் என்று ஆறுதல் பட்டுக் கொள்கிறேன். 


 இன்று போல் என்றும் , எங்கும் வாழும் இனிய தமிழின் இலக்கணமாயும் இலக்கியமாயும் இணைந்து, எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ என்னாருயிர் தோழியையும் அவளைக் கைபிடித்த அதிர்ஷ்டசாலி அண்ணரையும் மனதார வாழ்த்துகிறோம்.!!! 

 எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் இருவருக்கும்!! இன்று சொல்வது தான் என்றும். ..எம் இதயம் தொட்டவர்களுக்கு என்றும் எங்கள் இதயம் இயங்கும் வரை வாழ்த்துகளாகவே.....!! 

 அன்புடன் 
தேவன், சாந்தா 
அஷ்வத்தாமா & அச்சுதன்.