அஞ்சல் - 1

01.01.2005
அன்புள்ள தோழி சிவசோதிக்கு!
புது வருட வாழ்த்துகள்!
இதை எழுதத் தொடங்கும் 2005ம் ஆண்டின்
முதலாம் நாளான இன்று நான் நலமாயிருக்கிறேன். இன்னும் எத்தனை
காலத்துக்குப் பிறகு நீ இந்தக் கடிதங்களைப் பார்க்கப் போகிறாயோ எனக்குத்
தெரியவில்லை. இவற்றையெல்லாம் நீ படிக்கும் சந்தர்ப்பம்
இல்லாமலே போய்விடுமோ என்பதும் கேள்விக்குறியே! ஆனாலும் அறிவு கேட்கும்
இந்தக் கேள்விகளைப் புறந்தள்ளிவிட்டு நான் உனக்குக் கடிதங்களை எழுதத் தான்
போகிறேன். நிறைய எழுதுவேன்... இந்தக் கடிதங்களை நீ எப்போது படிக்கப்
போறீயோ அன்று நீயும் நலமா?
முன்பு எனக்கும் உனக்கும் இடையிலான நட்பு தொடங்கிய
நாட்களிலிருந்து உனக்குத் தெரியாமல் எது என் வாழ்கையில் நடந்திருக்கிறது?
உன்னுடைய வாழ்கையில் தான் என்ன நடந்தது நானறியாதது..? ஆனால் இன்றைய
சூழலில் இத்தனை வருட காலத்தில் உன் வாழ்கையில் என்னென்ன நடந்தன என்று எனக்கு தெரியாமலே போய்விட்டது. இன்ன இன்ன நடந்தன என்று சிலர் சொன்ன கொடுமையான செய்திகள்
கூட உறுதிப்படுத்த முடியாதவையாக இருக்கின்றன. அவை உறுதிப்படுத்தப்படாமல்
இருக்கும் வரை தான் நானும் என்றாவது நீ இவற்றைப் படிப்பாய் என்ற
நம்பிக்கையுடன் இக் கடிதங்களை உனக்கு எழுதலாம். என்னைப் பற்றியோ, என்
வாழ்கையில் நடந்தேறியிருக்கும் சம்பவங்கள் பற்றியோ நீ அறிந்திருக்க
வாய்ப்புக் கிடைத்ததா? எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்பா இறந்தது,
நாங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வந்தது, என்னுடைய வாழ்கையில்
தேவகுமார் என்ற புது மனிதர் வந்தது, எனக்குக் கல்யாணம் நடந்தது,
பாலாவுக்குக் கல்யாணம் நடந்தது, எனக்கு பிள்ளை பிறந்தது என்று ஏதாவது
அறிந்தாயா? தெரிந்திருக்க நியாயமில்லை. தெரிந்திருந்தால் இந்தத் தகவல்கள்
சொன்னவர்களிடம் எம்மை தொடர்பு கொள்ள விலாசமோ, தொலைபேசி எண்ணோ வாங்கியிருக்க
மாட்டாயா? அல்லது எனக்கு உன்னைப் பற்றி தகவல்கள் சொன்னவர்களிடம் உன்னுடைய
சரியான விலாசமோ அல்லது தொலைபேசி இலக்கமோ என்னால் எடுக்க முடியாதது போல்
உன்னாலும் முடியாமல் போயிருக்குமோ என்னமோ?
உனக்கு
எப்பவோ கல்யாணம் நடந்திருக்கும். பிள்ளைகள் பிறந்திருப்பார்கள். பெரிசாக
வளர்ந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். உன் கணவர் யார்?
அவர் என்ன தொழில் செய்வார்? இப்போது நீ எங்கிருக்கிறாய்? எதுவுமே எனக்குத் தெரியாது. நான்
1991ம் ஆண்டு மும்பாயில் நின்ற போது பரந்தனைச் சேர்ந்த ஒருவரை
சந்தித்தேன். அவர் உங்கள் குடும்பத்தில் எல்லோரையும் தெரிந்து
வைத்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு ஊரின் நிலமை தெரிந்து
கொள்ளக்கூடிய வசதியிருக்கவில்லை. யாரும் ஊரில் இருந்து வருபவர்கள் மூலம்
தான் அவருக்கும் ஈழத்து நடப்புகள் பற்றித் தெரிய வருமாம். அப்படி யாரோ
ஒருவர் மூலம் ஏதோ கேள்விப்பட்ட செய்தியாகத் தான் உன்னைப் பற்றிய
செய்தியையும் சொன்னார். "இந்திய இராணுவம் சின்னைய்யரிண்ட ரெண்டு மகள்மாரில
ஒரு மகளை சுட்டதில பெட்டை செத்துப் போச்சுது". எந்த மகள் என்ற விபரம்
அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல இதில் எந்தளவு உண்மை
இருந்தது என்று அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது சிவசோதி! ஆனால்
அந்தச் செய்தி கேட்டு இரண்டு மூன்று நாட்கள் என்னால் சாப்பிட முடியவில்லை.
அறைக்குள்ளேயே கிழமைக் கணக்கில் முடங்கிக் கிடந்தேன்.
அதே நபர் தான் "சின்னையாவின்
ஒரு மகள் செத்துப் போச்சுது. இன்னொரு மகள் ஜேர்மனியில் இருக்கிறா"
என்றும் சொன்னார். அதுவும் உண்மையா என்பதும், எந்த மகள் அங்கிருப்பது
என்பதும், அந்த மகளின் முகவரியும் கூட தெரிந்திருக்கவில்லை.
இதே போல் இன்னொரு தடவை அமெரிக்காவில் ஒரு பிறந்த நாள் விழாவில்
அருள்நங்கை என்ற பெண்ணை சந்தித்தேன். "நீங்கள் சுண்டிக்குளியில்
படிச்சனீங்களெல்லா? லிட்டரி மீட்டீங்கில் பாட்டுப் பாடுவீங்களெல்லா?" என்று என்னை வந்து விசாரித்த அந்தப் பெண்ணை எனக்குத் தெரிந்திருக்கவில்லை யார் என்று. பத்தாம் வகுப்பில் "C" கிளாசில் படித்தவராம். எனக்கோ அந்தப் பிள்ளையைப் பார்த்த நினைவே இல்லையடி. ஆனாலும் பழைய பள்ளிக்கூடத்துப் பிள்ளையென்றதும் அவருடன் இருந்து உரையாடினேன். எல்லாரைப் பற்றியும் சொன்னார். நீ சொன்ன மாதிரியே அனோஜா
தேவரூபினியின் அண்ணாவைத் தான் கலியாணம் செய்திருக்கிறா. இப்ப கனடாவில்
இருக்கினமாம். மீனலோஜனி டொக்டராம். கொழும்பில் வேலையாம். கேசவவதனியும்
முரளியும் கொழும்பிலாம். அவளுக்கு 2 பொம்பிளப் பிள்ளையளாம். இவ்வளவும்
சொன்ன அருள் தான் சொன்னா "நீயும் கொழும்பில் ஏதோ நர்ஸிங்ஹோமில் நர்ஸா
இருக்கிறாய் என்று..." ஆனால் நர்ஸிங்ஹோமின் பெயரோ தொலைபேசி எண்ணோ
அருளிடமிருந்து கிடைக்கவில்லை. அது என்ன உன்னைப் பற்றிய தகவல்கள் மட்டும்
இப்படி எனக்கு மொட்டையாவே கிடைச்சுக் கொண்டிருக்கெண்டு தான் எனக்கு
விளங்கேலை.
இப்பவும் இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்திலும் எனக்கு
உன்னைப் பற்றிய எந்த விபரமும் தெரியவில்லையடி. நான் கேட்காமலே அனோஜாவின்
கனடா போன் நம்பரை கொடுக்க முடிந்த அவரால் உன்னுடைய நம்பரையோ விலாசத்தையோ
தர முடிந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று நினைச்சு
கவலைப்பட்டன். அனோஜாவுடன் எடுத்து கதைக்க என்ன இருக்கு என்ற சலிப்பு
வந்தது என்னவோ உண்மை தான். ஆனால் உன்னைப் பற்றி ஏதாவது தகவல்கள்
கிடைக்கலாமே என்ற நப்பாசையுடன் போன் எடுத்தேன். எதுவும் கிடைக்கவில்லை.
தேவரூபினியின் அம்மாவுடன் கதைக்க முடிந்தது. அங்கிள் அந்த டிசம்பரில் தான்
செத்துப்போனார் என்று அன்ரி சொன்னார். நாங்கள் சந்தேகப்பட்டது போல்
தேவரூபினியின் அண்ணாவுக்கும் அனோஜவுக்குமிடையில் காதல் தான் கல்யாணத்தில்
முடிந்திருக்கு. இல்லாட்டில் லண்டன் போன அனோஜா அடுத்த மாசமே மெடிக்கல்
எண்டரன்ஸை சாட்டிக் கொண்டு திரும்பி யாழ்ப்பாணம் வந்திருப்பாவே? :)
வந்தும், மெடிக்கல் படிச்சும் பாரன்.. கடைசில கனடா வந்து பார்மஸிஸ்ட்
தான். ஏன் மெடிக்கலை தொடராமல் விட்டிச்சு எண்டு தான் விளங்கேலை. ஆனால்
போனில் அதைக் கேட்க வேண்டுமென்று தோன்றவில்லை.
இண்டைக்கு
புது வருசம்..இண்டையிலிருந்து உனக்கு என்னால் முடியும் நேரங்களிலெல்லாம்,
எனக்கு உன்னோடு கதைக்க வேண்டுமென்று தோன்றுகிற நேரங்களிலெல்லாம் இந்த
ஜேர்னலில் கடிதம் எழுதப் போகிறேன். இந்த ஜெர்னலை வாங்கி மாசக்
கணக்காகிறது. ஆனால் இன்றைக்கு தான் எழுதத் தொடங்குகிறேன். எதற்கும் ஒரு
தொடக்கம் இருக்கத் தானே வேண்டும்? இந்தத் தொடக்கம் உனக்கும்
எனக்குமிடையிலான கால, தூர இடைவெளிகளை கடிதங்களால் நிரப்ப நான் எடுக்கும்
முயற்சிக்கானது. இந்தக் கடிதங்களை நீ படிக்கப் போகும் அந்த நிமிடம் தான்
எமக்கிடையிலான இடைவெளியை அகற்றப் போகும் நேரம். அதுவரை எனது முயற்சிகள்
பாதிக் கிணறு தாண்டிய நிலையில் தான்.
இவள் ஏன் கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறாள் என்று நீ நினைக்கலாம். ஒவ்வொரு வினாடியும் உன் நினைவாகவே இருந்தேன் என்று எவராவது எவருக்காவது சொன்னால் என்னைப் பொறுத்தவரை அது பச்சைப் பொய். பழைய
நினைவுகள் ஏதோ ஒரு காரணத்தால் அல்லது ஏதோ ஒரு தூண்டுதலால் அல்லது ஏதோ ஒரு
சூழ்நிலையில் குளத்தின் அடியிலிருந்து "குபுக்" என்று எழும்பும்
நீர்க் குமிழ் போல் மனதினடியிலிருந்து சட்டென்று வெடிக்கும். அந்த
வெடிப்பின் தாக்கம் ஒரு கணத்தில் மறைந்து போகக் கூடும் அல்லது பல நாட்கள்
அப்படியே அழுத்திக் கொண்டிருக்கவும் கூடும். சட்டென்று ஏதோ ஒரு காரணத்தாலோ
அல்லது ஏதோ ஒரு விளைவாலோ உன்னைப் பற்றி நினைவு வரும் போது மனசு மிகவும்
கனத்துப் போகிறது சிவசோதி. பல சமயம் என்னோடு எனக்கு
பக்கத்திலோ அல்லது நினைத்தவுடன் உன்னோடு பேசக் கூடிய வசதியோ இருந்தால்
எவ்வளவு நல்லா இருக்கும் என்று தோன்றும். சில நேரம் ஏதாவது சம்பவங்கள்
நிகழும் போது "அட இந்த நேரம் அப்பா இங்க இருந்திருந்தால் நல்லா இருக்கும்"
என்றோ வேறு சில நேரங்களில் "சிவசோதி இருந்திருந்தால் எவ்வளவு நல்லா
இருக்கும் "என்றோ மனசு ஏங்கும். அந்த மாதிரியான தருணங்களில் உனக்கு
நான் சொல்ல முடியாமல் போனவற்றை, நீயிருந்திருக்க வேண்டுமென்று நான்
விரும்பிய சந்தர்ப்பங்களைப் பற்றி அப்பப்ப எழுதி வைக்க கடித வடிவம் தான்
எனக்கு தோதுப்பட்டது.
நான்
இப்ப என்னுடைய சொந்த வாழ்கையைப் பொறுத்தவரை சந்தோஷமாகத் தானிருக்கிறேனடி.
ஆனால் நான் சந்தோசமாய் இருக்கிறேன் என்பதை உனக்குத் தெரிவிக்க
முடியவில்லையே என்ற கவலையுடன் இருக்கிறேன். நீ சந்தோசமாயிருக்கிறாயா எனறு
அறிய முடியாத கவலையோடு நானிருக்கிறேன். "கட்டாயமாக நீ சந்தோசமாய்
தானிருப்பாய்; சந்தோசமாயிருக்க வேண்டுமென்ற நினைப்போடு நானிருக்கிறேன். நான்
இப்படி உன்னைப் பற்றி நினைப்பது போல நீயும் என்னைப் பற்றி நினைக்கிறாயா
என்று அடிக்கடி நினைத்தபடி நானிருக்கிறேன். என்னை மறக்குமளவுக்கு உன்
மனநிலை மாறியிருக்காது, அல்லது என்னை மறக்கடிக்குமளவுக்கு உனக்கு எந்த
அசாதாரணமும் நிகழ்ந்திருக்காது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு நானிருக்கிறேன்.
எவ்வளவு தான்
சந்தோசமாக இருந்தாலும் வாழ்கையில் அவ்வப்போது வெறுமையாக உணரும் போது
எனக்கே ஆச்சரியமாக இருக்கின்றது. என்ன இல்லை என்று இந்த வெறுமை? எந்தக்
கவலையின் விம்பமாய் இந்த வெறுமை என்று புரியாத குழப்பம்.
விருப்பப்பட்ட
வாழ்க்கைத் துணை, வேலைக்கு போகாமல் வீட்டிலிருக்கிறேன். அதுவும் ஒரு
வகையில் குறை தான். ஆனாலும் அதே நேரம் இயந்திரத்தனமாக தினமும் வேலைக்கு
போய், வீட்டு வேலை செய்து மாய்ந்து, ஓய்ந்து போகும் பரிதாபத்துக்குரிய
பெண்ணாக இல்லாமல் பிள்ளையோடும், கணனியோடும், என் எழுத்துகளோடு கோலோச்சும்
பெண்ணாக பொழுது போகக் கிடைத்து வைத்ததில் திருப்தி தான். ஆனாலும்.... ஏதோ
ஒரு வெறுமை மனதில் நிழலாக படர்ந்து கொண்டு தானிருக்கிறது.
ஒரு வகையில் பழைய யாழ்ப்பாண வாழ்க்கைக்கான ஏக்கம் கூட இந்த வெறுமைக்குக் காரணமாக இருக்கலாம், அந்த ஏக்கம் எப்பவும் யேசு
நாதரை சிலுவையில் அடித்த ஆணியின் கூர்மை கொண்ட வலியாக மனதில் துருத்திக்
கொண்டு தானிருக்கு. ஊரை விட்டு வந்து இருவது வருசங்களுக்கு மேலாகினாலும்
மனம் மட்டும் இன்னமும் அங்கேயே நிற்கிறது. இது தான் அந்த வெறுமைக்கு
காரணமோ தெரியவில்லை.
என்ன
விஷயமென்றாலும் சொல்வதற்கு, பக்கத்திலிருந்து பகிர்ந்து கொள்வதற்கு ஆளே
இல்லாமல் இருக்கிறேன் என்பது மட்டும் சத்தியம். இருக்கினம் தான்
சிநேகிதிகள் என்ற பெயரில் இரண்டு மூன்று பேர் இங்க. ஆனால் யாரோடும் ஒளிவு
மறைவு இல்லாமல் கதைக்க முடியாது. அவரவர்க்கு அவரவர் குடும்பம். தங்கள்
தங்கள் தேவைகளுக்காக மட்டும் போனில் கூப்பிட்டு கதைத்து பேசும்
அறிமுகங்களாக மட்டுமே தமக்குள் எல்லைகள் வரித்த சிநேகிதிகள். "சாந்தாக்கா
எங்கட பார்ட்டிக்கு வந்து நிண்டு உதவி செய்தவ, அதால நாங்கள் அவவிண்ட
பார்ட்டியில் ஏதாவது செய்ய வேணும்" என்பது போன்ற பண்டமாற்று முறை தான் இங்கத்தைய சிநேகிதம். சுய லாபம் தேடாத, பிரதிபலன் பார்க்காத நட்பை நான் இன்னமும் இங்கு காணவில்லை.
பிரதிபலன்
எதிர் நோக்காத அந்த மாதிரி நல்ல நட்பு பக்கத்தில் தான் இருக்க
வேண்டுமென்றில்லை. எங்கேயிருந்தாலும் எனக்கென்று ஒரு நட்பு இருக்கிறதே என்ற
ஆறுதல் போதுமே, நினைத்தவுடன் போனில் கதைத்தால் அல்லது ஒரு வரியில் கடிதம்
பார்த்தால் போதுமே..?! அப்படியெல்லாம் நினைப்பு வரும் போது, ஏக்கப் படும்
போதும் என்னால் வேறு யாரை நினைக்க முடியும் உன்னைத் தவிர? சொல்லு
பார்க்கலாம். அந்த ஏக்கம் தான் இந்தக் கடிதங்களை நான் எழுதுவதற்கான
பரிதாபமான காரணம்.
எல்லாவற்றையும்
எல்லாரிடமும் சொல்லிவிட முடியாது. ஆனால் நான் எதையும் உன்னிடம் சொல்லாமல்
இருந்ததில்லையே? 1983ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் , இனக்கலவரம் வெடித்த
அந்த நாளின் பகல் பொழுதில் என் அம்மம்மாவின் மரண நிகழ்வுக்காக உன்
அம்மாவுடன் வந்திருந்தாய். அன்றைக்கு தான் நானும் நீயும் சந்தித்த கடைசி
நாள். அதற்குப் பிறகு இத்தனை வருசங்களாக எதையும் உன்னிடம் பகிர்ந்து
கொள்ள முடியாமல் பொய்விட்டது. அதற்குப் பரிகாரமாக இது இருக்கட்டுமேன்.
உன்னோடு கதைக்க வேணும்மென்று நினைக்கிற ஒவ்வொன்றையும், உன்னோடு கதைக்க வேணுமெண்டு நினைக்கிற ஒவ்வொரு கணத்திலும், உன்னோட கதைக்க முடியேலையேண்ட என்னுடைய ஏக்கங்களையும் இந்தக் கடிதங்களில் எழுதி வைத்துவிட்டுப் போகிறேனே.!? நீ திரும்ப பதில் சொல்லாவிட்டாலும் கூட உன்னிடம்
எதையும் மறைக்காமல் தெரிவித்து விட்ட, கதைச்ச மனத் திருப்தியாவது
எனக்குக் கிடைக்கட்டுமேன்.?! பாரன்.. என்னுடைய வடிகால்களை எப்படியெல்லாம்
தேடுகிறேன் எண்டு பார்த்தியா?
ஒரு
வகையில் இந்த கடித வடிகால்கள் என்னுடைய கோபங்களை அல்லது சந்தோசங்களை,
துயரங்களை, அனுபவங்களை பதிந்து வைக்க ஏதுவாக இருக்கப் போகிறது.
இரண்டு
மாதத்திற்கு முன்பே இந்த மடல் தொகுப்பை வாங்கி வைத்திருந்தேன். புது
வருசம் பிறக்கட்டும்.. எழுதத் துவங்குவோம் என்று காத்திருந்து சரியா New
Year count down ஐ தொலைக்காட்சியில் பார்த்து முடிந்ததும் வீட்டில் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, இந்த தொகுப்பின் முதல் தாளில் முதல்
இரண்டு வரிகளும் தான் எழுத முடிந்தது. அதுக்கு பிறகு இருப்பவை எல்லாம்
நாலு நாளைக்குப் பிறகு எழுத வாய்ப்புக் கிடைத்தவை. இந்தக் கடிதம் முடிய
எத்தனை நாளாகுமென்றும் என்னால் சொல்ல முடியாது..எப்படியும் இன்றைக்கு
முடித்துவிடுவேன் என்று தான் நினைக்கிறேன். :))
இந்த
முதல் கடிதத்திலேயே நீ ஏன் சலிப்படைய வேண்டும்? இருபது வருட
காலங்களுக்கும் மேலான கதைகளும், தற்கால நிகழ்வுகளும் என்று நிறைய இருக்கு.
ஒவ்வொன்றாகத் தான் உனக்குச் சொல்ல முடியும். ஒழுங்கு முறையில்
சொல்லாவிட்டாலும் நினைவில் வரும் ஒவ்வொன்றையும் அப்பப்ப வந்து எழுதி
வைத்துவிடலாமென்று நினைக்கிறன். பாப்பம்... எந்தளவுக்கு இதை என்னால்
சாதிக்க முடியுதெண்டு. இப்பிடித் தான் நான் தாயாகியதை
உணர்ந்த முதல் கணத்தில் என் மகனுக்கு எதையாவது எழுதி வைக்க வேண்டுமென்று
தோன்றியது. அப்படி எனக்கு ஒரு எண்ணம் வர காரணம் ஒரு எழுத்தாளர் தான்.
தொலைக்காட்சியில் பார்த்தேன் அவரை. பெயர் வாய்க்குள் வரவில்லை. 3 வயதில்
ஒரு மகன் இருக்கிறார் அவருக்கு. சடுதியில் இந்த எழுத்தாளருக்கு புற்றுநோய்
என்றும், அவர் தன்ர கடைசி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்றும்
அவருக்கு தெரிய வந்த பின் அவர் எடுத்த முடிவு இது. தன்னுடைய
மகனுக்கு மகனையிட்டு தனக்கிருந்த கனவுகளையும், எண்ணங்களையும், அந்த மகனை
தான் எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்று விரும்பியதையும் எழுதி தான்
இல்லாமல் போனாலும் தன்னுடைய அன்பு அந்த புத்தக வடிவில் தன் மகனுடன்
இருக்கும் என்றதால் எழுதத் தொடங்கினாராம். அது என் மனதை மிகவும்
பாதித்துவிட்டது சிவசோதி.
மரணம்
என்ற நிரந்தரப் பிரிவின் பின்னாலும் எழுத்துகள் மூலம் தமது
அன்புக்குரியவர்களுடன் ஒன்றிப் போயிருக்கலாமே என்ற அவருடைய எதிர்பார்ப்பு
என்னை மிகவும் கவர்ந்தது... அதன் பின் நானும்
அஷ்வத்தாமாவுக்காக எழுதத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய கவலையெல்லாம்..
அஷ்வத்தாமாவுக்கு நான் தமிழில் எழுதியதை வாசித்து உணரக் கூடிய
அளவுக்காகவது தமிழ் தெரிந்திருக்க வேண்டுமே என்பது தான்.. :) அவருக்கு
நான் எழுதத் தொடங்கியது கூட இப்படித் தான் இடைக்கிடை தற்காலிகமாக இடையில்
நின்றுவிடுகிறது. பல சமயம் எழுத மறந்து விடுகிறேன். பெரும்பாலானா
சமயங்களில் என்னத்தைத் தான் எழுதுறது எண்டு மனச்சலிப்பு வந்து விடுகிறது.
ஆனாலும் இந்த முயற்சியால் எனக்கு நன்மையே. நானும் நினைவுகளை திரும்பவும்
ஓரு தடவை அசை போடலாம். அதிலேயே ஆழ்ந்து போகலாம். அப்படியே பிரபஞ்சத்தின்
ஒரு துளியாய் உறைந்து மீள எழாமல் போனாலும் பரவாயில்லை... ஆனாலும் நான்
கட்டாயம் மீள வர வேண்டும். நிறைய எழுத வேண்டுமே... அதற்காக. :):)
சரி
இந்தக் கடிதத்திற்கான வியாக்கியானம் இந்தளவு போதுமெண்டு நினைக்கிறன்.
வழமையாக நீயனுப்பும் கடிதங்களின் கடைசியில் இரண்டு வரியாவது நட்பைப்
பற்றிய பொன் மொழியாகவோ , பாடல் வரிகளாகவோ எழுதுவாயே.. நினைவிருக்கா??
இண்டைக்கு எனக்கு நினைவில் வந்தது நீ எழுதின இந்த வரிகள் தான்...
"காலங்கள் மாறலாம்; காட்சிகள் மாறலாம்;
நம் நட்பின் ஆழம் மட்டும் மாறாது!"
ஞாபகமிருக்கா இந்த வரிகள்? எனக்கு எப்பவும் நினைவிலிருக்கும் இந்த வரிகள்.
இப்படிக்கு,
உன் அன்பு மறவாத தோழி
சாந்தா







