Wednesday, October 12, 2022

அஞ்சல் 14

 அன்புள்ள தோழிக்கு!

வாழ்கைத் துணை !

என்னைப் பொறுத்தவரை கடைசி வரை எம்முடன் யாரும் பயணிக்கப் போவதில்லை. ஏதோ ஒரு முனையில் ஒவ்வொருவரும் எம்மை விட்டுப் பிரியத் தான் போகிறார்கள். பெற்றோர், உடன் பிறப்புகள், உறவுகள், பிள்ளைகள் என்று எல்லாருமே ....  ஒரு வகையில் எம்மோடு அதிக காலம் தொடர்ந்து வரும் உறவு என்றால் எமது வாழ்கையில் இடையில் எம்முடன் ஒட்டிக் கொள்ளும் எமது வாழ்கைத் துணை தான். 


உன்னைக் காணாமல் தேடி அலைந்த இந்த 37 வருடங்களில் நீ இருக்கிறாயா இல்லையா என்ற கேள்விக்கு அடுத்து , இருந்திருந்தால் உனக்கு திருமணமாகியிருக்கும் என்ற யதார்த்தம் உறுத்தும் போதெல்லாம்  காரணமேயில்லாமல் கோவப்பட்ட, பொறாமைப்பட்ட  கிட்டத்தட்ட திட்டிய ஒரு பிறவி என்றால் அது உனது கணவராகத் தான் இருக்கும். திட்டும் போது கூட நினைப்பேன் ஏன் இத்தனை வன்மம், முகம் தெரியாத அந்த நபர் மீது என்று. என்னவோ உன்னை என்னிடமிருந்து பிரித்து வைத்திருக்கும் வில்லனாக தான் மனம் அவரை உருவகப்படுத்தியிருந்தது.  சிநேகிதி படத்தில் தபு சொல்வது போல் பெண்களைப் பொறுத்தவரை பள்ளித் தோழமை என்பது பள்ளி முடியும் போதே முற்றுப் பெற்றுவிடும் அத்தியாயம். அதன் பின் பழைய  ஆட்டோகிராப்பிலும், புகைப்படங்களிலும் கண்ணீருடன் கழிந்துவிடும் நினைவுகளாக மட்டுமே இருக்கும் என்பதை எனக்கு விதியாகக் கிடைக்கக் காரணமே நம் இரண்டு பேரின் கணவர்மார் தான் என்று கூட நினைத்து கோபப்பட்டிருக்கிறேன். 


நாட்டில் போர் நடக்காமல் இருந்திருந்தால் எமக்கு இந்த பெரிய இடைவெளி வந்திருக்காது. இத்தனை மைல்களுக்கப்பால் வெவ்வேறு திக்குகளில் எமது வாழ்கையை பிடுங்கிப் போட்டிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. வெளி நாடு வந்த பின் எத்தனையோ திருமண விழாக்களுக்கு போகும் போதெல்லாம் மனதை அரிக்கும் உனது திருமணக் கோலத்தை காணக் கிடைக்கவில்லையே, என்னுடைய திருமணத்தில் நீ இல்லையே என்ற உறுத்தல். 

ஆனால்...எல்லாம் முடிந்து வாழ்கையின் கடைசிப் பாகங்களில் திரும்பவும் உன்னுடைய தொடர்பு கிடைத்திருக்கிறது. இரண்டு பேரின் வில்லன்களுமே இத்தனை வெகுளிகளாக இருப்பார்கள் , இத்தனை அன்பானவர்களாக இருப்பார்கள், நான் போன் செய்யாவிட்டால் என்னவரோ நீ எனக்கு போன் செய்தாயோ என்று உன்னவரோ அக்கறையாக விசாரிக்கிறார்கள் பார்... வாழ்கையில் ஏதோ புண்ணியம் செய்திருக்கிறோம் என்றே உணர வைக்கிறது.

அதுவும் உனது கணவர் ....

இத்தனை காலம் வில்லனாக  எனது மனதில் இருந்த ஒரு நபர்...முதல் முதல் பேசிய அந்த ஒரு கணத்தில்.....அப்படியே தலைகீழாக உருமாறி உட்கார்ந்ததை நினைக்கும் போது ....சந்தோசமும் , ஆச்சரியமும் கலந்த கலவையான உணர்வு போராட்டம்..!! இன்று வரை எத்தனை கிண்டல், எத்தனை கிரந்தம் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்......எவ்வளவு இலேசாக எவ்வளவு இயல்பாக....??  அண்ணா அண்ணா என்று நாங்கள் 3 தோழியரும் அவரிடம் பாசம் கொள்ள வைத்துவிட்டார்...!! எந்த நக்கலுக்கும் வீடே அதிரும்படி அவர் சிரிக்கும் குழந்தைத்தனமான சிரிப்பை கேட்கும் போதெல்லாம் என் தோழி பாக்கியசாலி என்று நிம்மதியான உணர்வு கிடைக்கிறது.

அவரை விட்டுட்டு எப்பிடி நான் வாறது என்று கேட்கும் போது..என்னவோ கைக்குழந்தையை தனிய விட்டுவிட்டு வர முடியாமல் தவிக்கும் தாய் மாதிரி தான் உன்னை பார்க்கிறேன்..ஆனால் கிண்டல் செய்யாமல் என்னால் இருக்க முடிவதில்லை,. ! 


உன்னைக் காணாத நாட்களில் நீ இருக்கிறாயா இல்லையா என்ற கவலை ஒரு புறம் இருந்தால் உன் கணவர் உன்னை எப்படி நடத்துகிறார் நீ சந்தோசமாக இருக்கிறாயா இல்லையா என்றெல்லாம் நினைத்து நினைத்து மாய்ந்து போயிருக்கிறேன். இப்போது அண்ணாவுடன் பேசிய பின் ஐயோ பாவம் இந்த மனுசன் உன்னிடம் என்ன கஷ்டப்பட்டாரோ என்று யோசிக்க வைத்துவிட்டார்.   :) 

இன்று உன்னவருக்கு பிறந்த நாள்...! இன்று இத்தனை சந்தோசமாகவும் , சிரிப்பும் குதூகலமாயும் நீ இருக்கிறாயென்றால் அது நிச்சயம் நிம்மதியான வாழ்கையை நீ வாழ்வதால் மட்டுமே...  !  தன் மனைவியை சக மனுசியாக , கௌரவமாக  நடத்த தெரிந்த கணவனால் மட்டுமே ஒரு பெண் நிம்மதியான , குதூகலமான வாழ்கையை பயணிக்க முடியும். உனக்கு அப்படியான வாழ்கை கிடைத்திருக்கிறது. இந்த வாழ்கை உனக்கு என்றைக்குமே நிலைக்க வேண்டுமென்று  அண்ணா நீண்ட காலம் எல்லா வளமும் நலனும் பெற்று , ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமெறு அவருடைய பிறந்தநாளான இன்று மனம் நிறைந்த நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்.

அண்ணா ! என்றைக்கும் எங்கள் தோழி இதே சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்ற முக்கிய காரணத்தாலும், எங்கள் தோழியின் அன்புக்குரிய காதல் கணவனாக நீங்கள் இருப்பதாலும் உங்கள் பிறந்தநாளான இன்று எங்கள் மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் பல!! 

I didn't get you a Birthday present, Because you already have it all - My friend Sivasothy!! Happy Birthday அண்ணா !!