Monday, July 25, 2016

அஞ்சல்- 7

அன்புள்ள சிவசோதி!
நீ அங்கு நலமாயிருப்பாய் என்ற நம்பிக்கையில்  நான் நலம் .

சிவசோதி!
.பல வருடங்களின் பின்னான சந்திப்புகள் மனதை அப்படியே புரட்டிப் போட்டுவிடுகின்றன. பழைய நாட்களின் சாயங்கள் இன்னமும் மாறாமல்  மனதின் அடியில் பத்திரமாக மடிந்திருக்கும். அவ்வப்போது ஏதேனும் ஒரு பாடல் அல்லது ஒரு வார்த்தை, அல்லது ஏதேனும் ஒரு புத்தகம் சம்மந்தமேயில்லாமல் மடிந்திருக்கும் நினைவுக்களை தனக , பழைய ஞாபகங்கள் குபுக்கென்று நிமிர்ந்து நலம் விசாரிக்கும்.. திடீரென்று ஒரு நாள் அந்த மடிந்திருக்கும் ஞாபகபக்கங்களின் கர்த்தாகள் ”ஏய் எப்படி இருக்கிறாய்...என்னை நினைவிருக்கா” என்று முன்னால் வந்து நின்றாலோ, போனில் கூப்பிட்டாலோ  அந்த தருணத்தின் தாக்கத்தை தாங்கும் பலம் இல்லாமல் மனம் கனத்துப் போய்விடுகிறது.

இன்றைக்கும் அப்படித் தான்...!

சுண்டிக்குளி மகளிர் கல்லூரியை விட்டு , வேம்படி மகளிர் பாடசாலைக்கு போன போது அந்த புதிய சூழலில் பழைய பள்ளியின் வாசனையை இழந்த சோகத்தினூடாக நட்பு என்று யாரையுமே கொண்டாட மனம் வராமல் சும்மா ஒப்புக்காக முகம் பார்த்தவர்களிடம் சிரித்துவிட்டு படிப்புக்காக புத்தகங்களுக்குள் தலையை புதைத்துக் கொண்டிருந்த நாட்களில் என்னைப் போலவே ரஜனியும் வந்து சேர்ந்தாள். இரண்டு பேரும் ஒரே மாதிரி புதிய சூழலில் நம்மை நாமே பொருந்திக் கொள்ள வகை தெரியாமல் இருந்த சூழலின் ஒற்றுமையே எங்கள் இருவரையும் ஒருவருக்கொருவருடன் சிநேகமாக்கிவிட்டிருந்தது.

வேம்படி பள்ளிக்கூடம் மட்டும் எனக்கு புதியதாய் இல்லை.. அப்போது தான் பழைய பள்ளியில் உயிர் தோழியாக என்னோடு கூடித் திரிந்த நீயும் பிரிந்து உன் சொந்த ஊருக்கு போய்விட்ட நேரம் அது. உன்னுடைய இடம் வெற்றிடமாக ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் ரஜனி வந்து ஒட்டிகொண்ட காலம் அது...!

உனக்கும் அவளை தெரியும். ஒரு தடவை என்னை நீ வேம்படியில் சந்திக்க வந்திருந்தாய்.. அப்போது ரஜனியை உனக்கு அறிமுகப்படுத்தினேன். கிளிநொச்சியில் உனக்கு தெரிந்த ஒரு மாணவியை  (கோகிலாவோ கோமதியோ ) ரஜனிக்கும் தெரிந்திருந்ததே...நினைவிருக்கா??

ரஜனியின் வீடு நல்லூர்க் கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் இருந்தது. கொஞ்ச நாட்களிலேயே இருவரும் நல்ல தோழிகளாக பழகிவிட்டோம். சைக்கிளில் ரஜனி வீட்டுக்கு நான் போவதும் என் வீட்டுக்கு ரஜனி வருவதும், இருவரும் சேர்ந்து வாசுகி வீட்டுக்கு போவதும்...ஐயர் மாஸ்டரிடம் ஸ்போக்கின் இங்கிலீஷ் படிக்க போகும் நாட்களில் வகுப்பு முடிந்த கையோடு ரஜனி வீட்டுக்கு போய்விடுவதும்.... எவ்வளவு அழகான நாட்கள்...? அப்போது இலங்கை இராணுவத்தின் ஆதிக்கம் இருந்த காலம்.. இராணுவ வண்டிகளுக்கு பயந்து பயந்து வீதிகளில் போய் வந்த காலம் ...ஆனாலும்  என் தாய் நாட்டில் நான் சந்தோஷமாக இருந்த கடைசிக் காலக்கட்டங்களில் என்னோடு பறந்து திரிந்த ஒரு குட்டிக் குருவி தான் அவள்..! :)

என்னைவிட என் சிநேகிதிகள் மிகவும் பக்குவப்பட்டவர்களாகவே எனக்கு எப்போதும் தெரிவார்கள். எனக்கு தோழிகள் என்று நிறைய இருந்ததில்லை. உயிர் தோழி என்று நீ சிவசோதி...நெருங்கிய தோழிகள் என்று கேசா, சுகந்தி, துஷித்தா,,! ஆனாலும் சிவசோதிக்கு அடுத்து பொஸஸிவ்வாக எனக்கு மட்டுமான  தோழியாக கருதியது என்றால் ரஜனியை தான்...!! :)  நீயும் ரஜனியும் என்னுடன் எந்த ஒரு எதிர்பார்ப்போ அல்லது முன்னறிமுகமோ இல்லாமல் சந்தித்த கணத்திலேயே மனதுக்குப் பிடித்துப் போனவர்கள்.

ஏதோ ஒன்று எப்படியோ எதற்காகவோ உங்கள் இரண்டு பேரையுமே  அடிக்கடி நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். யாரையும் திரும்ப காணமுடியாத ஏக்கங்களோடு வெறும் கற்பனைகளையும், இணையத்தில் திரிவதையுமே பெரும்பாலான வாழ்கையாகிப் போனது எனக்கு. புதிதாக எத்தனை பேரை சந்தித்துவிட்டேன். ஓரிருவரோடு நட்பாக பழகிக் கொண்டுமிருக்கிறேன். ஆனால் ஒரு ஒட்டுதல் இல்லாத நட்பாகவே அவர்கள் தெரிவதும் , பழைய நட்புகளுக்காகவே மனம் ஏங்குவதும் ....என்ன வாழ்கை இது??

வெறும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருப்பதிலேயே வாழ்கையை முடித்துக் கொள்ளும் துர்பாக்கியசாலிகளாக தான் பெரும்பாலான பெண்கள் அதுவும் குறிப்பாக புலம் பெயர்ந்த பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படியொரு பாதையில் தான் நானும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் கொஞ்சம் புத்துயிர் கொடுக்க இன்று ரஜனி என்னை அடையாளம் கண்டு பிடித்திருக்கிறார். மனதுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஒரு நல்ல தோழியின் வெற்றிடத்தின் சோகத்தை ஆற்ற அப்போதும் இதே ரஜனி தான் வந்தாள்.  இப்போதும் எந்த நட்பின் தொடர்புமில்லாத நிலையில் அதே ரஜனி தான் வந்திருக்கிறாள். :)

1984ம் வருடம் ஈழத்தையும் , எல்லாவற்றையும் விட்டு வெளிக்கிட்டு..... இத்தனை வருடங்களின் பின் இன்று உள்பெட்டியில் ரஜனியின் மடல்..அவளை மறக்காத என்னிடம்  தன்னை ஞாபகப்படுத்தி நினைவிருக்கா என்று மடல் மூலம் கேட்கிறாள்.. :)

போன் நம்பர்கள் பரிமாறிக் கொண்டுள்ளோம். நாளைக்கு போனில் ரஜனியோடு பேச வேண்டும் என்று மனதுக்குள் ஆவல் இருக்கிறது. ஆனால் பேசுவேனா என்று தெரியவில்லை.

கடந்து வந்த இத்தனை வருடங்களின் சுவடுகளும் வெறும் இலேசான கதைகளோடு என்னுடன் பயணிக்கவில்லை. என்னுடைய இழப்புகள், எனக்கான சோகங்கள்,நான்  பறிகொடுத்தவை,என்னிடமிருந்து  பறிக்கப்பட்டவை என்று கொடூரமான வலிகளை நாளைக்கு அவளுடன் பேசும் போது விவரிக்க வேண்டி வரலாம். என்னைப் போலவே அவளிடமும் நிறைய பக்கங்களுடன் அவளுடைய வாழ்கைக் கதையும் என்னிடம் சொல்லப்படவென்று இருக்கலாம். இரண்டையும் எதிர்கொள்ளும் வலிமை என்னிடம் இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரிவதாலேயே எனக்கு சந்தேகமாக இருக்கிறது ..அவளுடன் என்னால் பேச முடியுமா என்று.  :(

எப்படியாவது இந்த ஃபேஸ்புக்கை விட்டு விலக வேண்டுமென்று நினைத்து நினைத்து , எப்படி விலகலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருக்க.,  இன்று எப்போதோ முகவரி தொலைத்த என்னுடைய பழைய நட்பை எனக்கு கண்டுபிடித்து தந்திருக்கிறது அதே ஃபேஸ்புக்...!
சிவசோதி உன்னையும் இப்படி காண முடிந்தால்....??

அன்புடன்
நான்.!

புதன், 5 மார்ச், 2014)

அஞ்சல்- 6

அஞ்சல்- 6                                           02-3-2005

அன்பு மறவாத தோழிக்கு!

நீயும் , உன்னை சார்ந்தவர்களும் நலமாக
இருக்கிறீர்களா? இப்போதெல்லாம் கடவுளை வேண்டுகிறேன் என்றோ , பிராத்திக்கிறேனென்றோ சொல்வதில் எனக்கு விருப்பமில்லை; அப்படியே சிலரிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது மனதுக்குள் குற்ற உணர்ச்சி தான் மேலோங்குகிறது. கடவுள் மீதான நம்பிக்கை மெல்ல மெல்ல கரைந்து போய் கிட்டத்தட்ட 20 வருடங்களாகிறது..! நம்பாத கடவுளிடம் எப்படி பிராத்தனை வைப்பது?? பிராத்தனை விட்டுப் போன பின் ஒருவரின் நலனுக்காக பிராத்திக்கிறேன் என்று எப்படி பொய் சொல்வது??

எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அல்லது விரும்புகிறேனோ எனக்கு என்ன வேண்டுமென்று நான் நினைக்கிறேனோ அதை நானே போராடிப் பெற்றுக் கொள்ளப் பழகிவிட்டேன். போராடியும் கிடைக்கவில்லையென்றால் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரும் முனைப்புக்கு நான் தயாராக இருக்கிறேன்.என்னைச் சார்ந்தவர்கள் அல்லது நான் சார்ந்திருப்பவர்கள் எல்லோரும் நல்லா இருக்க வேன்ண்டுமென்ற முனைப்பான விருப்பத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறேன். அதையும் மீறி இல்லாததாக நான் நினைக்கும் கடவுளிடம் எனக்கு இதை தாரும் பதிலுக்கு நான் அதை தருகிறேனென்ற நேர்த்தியை எனது பாசையில் சொல்வதென்றால் கடவுளுக்கான லஞ்சப் பட்டியலை தயாரிக்கும் சிறுபிள்ளைத் தனம் இப்போது என்னிடம் இல்லை.

ஒவ்வொரு வெள்ளியும் வைரவர் கோவிலுக்கு போன, நால்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் திருவிழாக்காலத்திலும் விரதமிருந்து அடியழிக்கிற, கந்தசட்டிக்கு உபாவாசமிருந்து சூரன் போர் பார்த்து அடுத்த நாள் பாறனை முடிக்கிற , திருவெம்பாவைக்கு கோலம் போட்டு விரதமிருக்கிற சாந்தாவா இதை எழுதுறாள் என்று இந்த கணம் உன் மனதில் பழைய நினைவுகள் வலம் வரலாம் என்பது எனக்கு தெரியும்.. ஆனாலும் அதே சாந்தா தான் உண்மையில் இதையும் எழுதுகிறேன்.

"கடவுள்" என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி அல்லது சந்தேகம் சிலருக்கு குறிப்பிடத் தக்க சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்து வலுவானதாகிறது. அப்போது தான் பகுத்தறிவு பல ஆராய்ச்சிகளை செய்யத் தொடங்கும். அதே சந்தர்ப்ப சூழ்நிலைகள் தாக்கினாலும் பெரும்பாலானோருக்கு அந்தச் சந்தேகம் வருவதில்லை, காரணம் அவர்கள் முன்னாள் வினைப்பயனின் காரணமாகவே இந்நாள் வாழ்கையும் சம்பவங்களுமென்று நம்புகிறவர்கள் அவர்கள். அதிர்ஷ்டவசமா அல்லது துரதிஷ்டவசமா என்று தெரியவில்லை..எனக்கு அந்த சந்தேகம் தான் வலுத்ததே தவிர முற்பிறப்பு பற்றியெல்லாம் யோசிக்க வரவில்லை.

அண்டைக்கு ஒரு நாள்  சென்னையில் செண்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் ஒரு பிச்சைக்காரர் குப்பைத் தொட்டியைக் கிளறி எடுத்து சாப்பிட்டதை பார்த்த போது தான் பிச்சைக்காரர்களின் நிலமையின் தாக்கம் மனசை தாக்கினது. ஈழத்தில்  வீடு வீடா வந்து சாப்பாடு கேட்கிறவையாயும், சாப்பாட்டுக்காக  எங்கட வீட்டில் விறகு வெட்டி தந்திட்டு சாப்பாடு வாங்கிட்டு போறவையாயும் அல்லது பஸ் தரிப்பிலோ ரெயினுக்குள்ளேயோ பாட்டுப் பாடி பால் டின்னைக் குலுக்கி காசு கேட்கிறவையாயோ தான்  பிச்சைக்காரர்களாய் பார்த்த எனக்கு இது தான் என்ன கடவுள் என்று யோசிக்க வைச்ச முதல் வெறுப்பு என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் குறிப்பா சென்னை  எனக்கு வாழ்கையின்  முக்கிய  பாடங்களை படிப்பிச்சிருக்கெண்டு தான் சொல்ல வேண்டும்.  ஈழத்தில் வளந்ததும், படித்ததும், பார்த்த உலகமும் வேறு...இங்கே தமிழ் நாட்டில் நான் பார்த்து படித்த உலகம் வேறு.. கடவுள் நம்பிக்கைக்கும், பக்திக்கும் கோவிலுக்கும் வரலாறு வைத்திருந்த ஒரு திருநாட்டில் தான் நான் கடவுளைப் பற்றிய மாற்றுச் சிந்தனைகளை படிக்கத் தொடங்கிய விநோதம் நடந்தது.
ஈழத்தின் நிகழ்வுகளும் சரி , என் வாழ்கையின் பல முக்கியமான நிகழ்வுகளும் சரி மனதை ரணமாக்கிய அத்தனை  வாழ்கையின் மாற்றங்களும் ஒவ்வொரு அனுபவமாக  சென்னையில்  வாழத் தொடங்கிய பின் தான் எனக்கு நிகழ்ந்தது. ஈழத்தில் அப்பா அம்மா என்ற இருவரின் பொறுப்பில் வீட்டின் சமர்த்து பிள்ளையாக பள்ளி போவதும், விளையாடுவதுமாயிருந்த இளவரசி வாழ்கை சென்னை மண்ணில் மாறிப் போயிற்று.  வீட்டின் பல விசயங்களை நான் பொறுப்பெடுக்க வேண்டிய சூழலும், எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமுமாய் அப்போது தான் நான் என்னை வளர்க்கத் தொடங்க வேண்டிய கட்டாயத்திலிருந்ததால் ஒவ்வொரு நிகழ்வுகளும் எனக்கு ஒரு படிப்பினையாகப் போயிட்டுது. பல படிப்பினைகள் துயரமான முடிவுகளைக் காட்டிச் சென்றது.

"கடவுள்" என்ற அந்த வார்த்தை மீதான விருப்பம் எங்கட மக்கள் இலங்கையில் கொத்து கொத்தாக இலங்கை இராணுவத்திடம் சிக்கி சின்னா பின்ன பட்ட போதும், அமைதி காக்கிறேன் பேர்வழி என்று I.P.K.F வந்து பின் அவர்களும் அதே கைங்கரியத்தை செய்யத் தொடங்கிய போதும் கழறத் தொடங்கி இப்ப நம்பிக்கையின்மை கலந்த கோபமாகவும் வெறுப்பாகவும் போன பின் சாமி அறைப் பக்கமே போகப் பிடிக்கவில்லை.  கடவுள் என்பவர்  சோதிக்கலாம்; ஆனால் சாகடிக்கலாமோ?? அதுவும் கொடூரமாக சித்ரவதை செய்து , மானபங்கப்படுத்தி ஒரு உயிரை  இன்னொரு மானுடம் கொல்ல எப்படி அனுமதிக்கலாம்?? அதை தடுக்காமல் எப்படி இருக்கலாம்?? தடுக்க முடியாது என்றால் கடவுள் என்ற தகுதி எதற்கு??  எங்களுக்கு நேரடியாக இந்தக் கொடூரங்கள் நடப்பதால் இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டியதாகிவிட்டது. எதுவும் நடக்காமலிருந்திருந்தால் வழமை போல் கோவில் போய் விரதமிருந்து , உபவாசமிருந்து கடவுளை கும்பிட்டுக் கொண்டிருந்திருப்பேனோ என்னமோ??

எப்படி ஒரு எதிரியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் சந்திக்கும் சந்தர்ப்பங்களை தவிர்க்க விரும்புகிறேனோ அதே அளவு கோவிலுக்கு போவதையும் தவிர்க்க பாடுபடுகிறேன். அதுவும் லீலா மாமியும் அவவோடு சேர்ந்து அந்த 1988ம் ஆண்டின் தீபாவளி நாளண்டு எங்கள் அயலில் I.P.K.F ஆல் கொல்லப்பட்ட 32 பேரின் மரணச் செய்தியின் பின் கடவுளாவது ஒன்றாவதென்று வெறுப்பு மூண்டுவிட்டது. அந்த வெறுப்பு தனிப்பட்ட ரீதியில் எனக்குள் எரிமலையாக வளர்ந்திருக்கே தவிர குறைய வில்லை. லீலா மாமி , நடேஸ், அப்பா என்று எதிர்பாராத இழப்புகள், தாங்கவியலாத மரணங்கள் தந்த வலி வாழ்கையில் இன்னொருவிதமான பாடத்தை படிப்பிக்க தொடங்கியிருக்கிறது எனக்கு.


மரணம் என்பது தெரிந்த ஒரு முடிவு தான்! அதை எதிர் கொண்டு தானாக வேண்டும். இல்லையென்று சொல்ல வில்லை. ஆனால் ஒருவரின் மரணம் உயிரோடு இருப்பவர்களை வாழ் நாள் முழுவதும் நடைபிணங்களாக திரியவைக்குமளவுக்கு இருக்குமேயானால் , உலகின் அத்தனை ஜீவராசிகளுக்கும் சம ஆளவில் கருணை பாலிக்கும் , தாயுமானவனானவன் தந்தையுமானவன் என்ற கடவுளின் தராசு தட்டில் தளும்பல் அல்லவா தெரிகிறது. எந்த தாய்க்கு அல்லது தாய்க்கு தன் பிள்ளைகள் துடிக்க துடிக்க சித்திரவதை செய்து தான் தங்கள் மரணங்களை வாங்க வேண்டுமென்று சொல்ல மனம் வரும்? எந்த கருணையுள்ள ஒருவர் தன் மகள்  பலரின் கையில் கசக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட வேண்டுமென்று விதி எழுத மனம் வரும்?? அப்படி தான் விதி உனக்கு இது தான் நடக்குமென்று அவன் எழுதினது தான் வாழ்கை என்றால் ,  ஜீவராசிகளின் விருப்பு வெறுப்புகளைப்பற்றிய அக்கறையில்லாமல் எவனோ ஒருவனால் எழுதப்பட்ட விதி தான் உன் வாழ்கை என்றால் அவனை கடவுள் என்று நாம் ஏன் கொண்டாட வேண்டும்??? அதனால் என்ன பயன்?? அவனை நான் ஏன் எனக்கு எந்த வகையிலும் தீங்கு நினைக்காத என் அப்பா அம்மாவுக்கு ஒப்பானவனாகப் பார்க்க வேண்டும்..??


கடவுள் இருக்குதா இல்லையா என்று நான் ஆராயப் போவதில்லை; இருந்தால் இருக்கட்டும்; அப்படி இல்லையென்றாலும் நான் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை; என்னுடைய வாழ்கையை நான் நடத்தும் வரை எனக்கு கடவுள் தேவையில்லை;

கடவுள் இருக்கிறான், கைவிட மாட்டான் என்று நம்பிய எந்தவொரு தருணத்திலும் அந்த நம்பிக்கைகள் காப்பாற்றப்படாமல் பொய்த்து போன பின் , இனி எந்த தருணத்திலும் எது நடப்பினும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை எனக்குள் உருவாக்கிக் கொள்ள பழகிவிட வேண்டியது தான். 

ஒருவரின் மரணமா..சரி எதிர் கொள்வோம்?? மிஞ்சி மிஞ்சி போனால் அந்த மரணத்திற்காக என்னால் என்ன செய்ய முடியும்..?? கவலைப்பட முடியும்?? கண்ணீர் விட முடியும்?? காலப் போக்கில் கண்ணீர் நின்று விடும்; மனதினடியில் அந்த வலியும் துயரமும் முடங்கிப் போயிருக்கும். அவ்வப்போது ஏதோ ஒரு காரணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து திரும்ப திரும்ப வலிக்க வைத்துவிட்டு பழையபடி போய் முடங்கிக் கொள்ளும். அவ்வளவு தானே?? சரி விடு நான் அதை பழகிக் கொள்கிறேனே...!


எனக்கு என்ன வேண்டுமென்றோ , வேண்டாமென்றோ தீர்மானிக்க வேண்டியவளாய் நானே இருக்க வேண்டுமென்றால் கடவுள் என்ற மாயையை நோக்கி என் கைகள் பிச்சை கேட்கக் கூடாது. அதனால் இப்போதெல்லாம் நானெந்த நேர்த்திக்கடனும் வைப்பதில்லை. :):)


ஆனால் உனக்கு தான் தெரியுமே என்ர அம்மாவைப் பற்றி?? உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் , என்ன கஷ்டம் வந்தாலும் உடன யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பருக்கு  நேர்த்தி வைச்சிடுவா..!:):) முனியப்பரே இப்ப ஆமிக்காரரிடம் நேர்த்தி வைக்கிற விதியில சீரழிஞ்சு போய்க்கிடக்கிறார் என்று அம்மாவுக்கு மறந்து போச்சுப் போல...  :):)


இப்பவும் எனக்காகவும் என்ர வயித்தில இருக்கிற பிள்ளைக்காகவும் , டியூமருக்காகவும் கூட காசு நேர்ந்து முடிஞ்சு சாமி அறைக்குள் வைத்திருக்கிறா. உந்த மாதிரி  காசு நேர்ந்து முடிஞ்சு வைச்சிருக்கிற சின்ன சின்ன வெள்ளைப் பொட்டணிகள் ஒரு அம்பாரம்  இந்த சாமியறைக்குள் ஒரு பெட்டி நிறையக் கிடக்கு தெரியுமே?? அந்த அம்பாரங்கள் அத்தனையும் அம்மா முனியப்பருக்கு ஆசை காட்டி வைச்சிருக்கும் லஞ்சப் பணம் தான். 

 முனியப்பர் அம்மாவிடம் வாங்கிய லஞ்சங்களில் பெரும்பாலான நேர்த்திகளைக்  கவனிக்காமல் , கிடப்பில் தூக்கி எறிஞ்சிட்டார். அம்மா தன்ர நேர்த்தியில் பலனளிக்காதவைக்கு குடுத்த லஞ்சப்பணத்தை திரும்ப எடுப்பதும் இல்லை ..அவ்வளவு பயம் முனியப்பரிடம் அம்மாவுக்கு..:):)


சலிப்படைந்த தருணங்களின் கூட்டுத் தொகையாக வாழ்கை போகத் தொடங்கிவிட்டது. இனி வயிற்றிலிருக்கும் குழந்தையும் அதன் வளர்ச்சியும், கவனிப்புமென்று என்னுடைய  இயல்பிலிருந்து இன்னொரு தடவை விலகி நடக்க வேண்டிய கட்டாயம்  எனக்கு. பத்தாக் குறைக்கு  கொசுறாக  உடலுக்குள் இரண்டொரு கட்டிகளையும் சேர்த்து பராமரிப்புப் பார்க்க வேண்டும்,,,


"நீ போன பிறப்பில என்ன கருமம் செய்தியோ...இப்ப இந்த மாதிரி அனுபவிக்கிறாய்..பிறந்த நாள் தொட்டு நோயும் நொடியுமா...உனக்கெண்டு இப்பிடி விதி எழுதியிருக்கு பார்"  இது பெரியம்மாவோட நேற்று போன்ல கதைக்கேக்கில  பெரியம்மாவின் அங்கலாய்ப்பு.  

எத்தனை இலகுவாக  போன பிறப்பின் என்னுடைய குணதிசயம், நடத்தை எல்லாம் இந்தப் பிறப்பில் எனக்கு வரும் இடர்களையும், வருத்தங்களையும், நோய் நொடிகளையும் வைத்து கணிக்கக் கூடியதாக இருக்கிறது என்று ஒரு நிமிசம் யோசித்துப் பார்.....சிரிப்பு சிரிப்பா வரேலையா உனக்கு??  :):)  இந்தப் பிறப்பை விட போன பிறப்பில் நான் அதிக பாவம் செய்தவளாக இருந்திருக்கிறேனா  அல்லது அடுத்த பிறப்பில் எனக்கு இதை விட கொடூரமான  நோய் எல்லாம் வருமோ??  :):) `



என்ன இவள் இப்பிடியெல்லாம் யோசிச்சிருக்கிறாளே என்று நினைக்கிறாயா?? இவளா  ஐந்தாம் வகுப்பு படிக்கேக்கிலயே சாமி மேல பாட்டெல்லாம் எழுதினாள் என்று சந்தேகப்படுகிறியாக்கும்...எனக்கும் சில நேரம்  அப்படித் தான் இருக்கும்.. என்னுடைய பழைய நாட்களுக்கான அடையாளங்கள் பல என்னைவிட்டு கழண்டு போய்க் கொண்டிருக்கின்றன என்பது எனக்கு தெரிகிறது. அதை ஒன்றும் செய்ய முடியாது. எப்பிடி அஞ்சு வயசில போட்ட சட்டை வடிவாக இருக்கிறது எண்டுறதுக்காக இருபது வயசுலயும் அதை போட வேணுமெண்டு நினைக்கிறது  நகைப்புக்குரியதோ  அது மாதிரி தான் இந்த மாதிரி தெளிவுகள் அல்லது மன மாற்றங்கள்...அவை சரியானவையாக இருந்தாலும் சரி பிழையானவையாக இருந்தாலும் சரி ....!

வேற என்னடி??   வாழ்கையில் ஒவ்வொரு நிலையிலும் நிகழும் ஒவ்வொரு மாற்றங்களும் எம்முடைய ஒவ்வொரு பிம்பங்களாய் நிறுவப்பட்டு விடுகின்றன. எனக்குள் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் பிம்மம் பற்றிய விளக்கம் தான் இது. உனக்கும் இத்தனை காலத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். எப்படி எப்படியோ வாழ்கை பாதை மாறிப் போயிருக்கலாம்; உறவுகளின் இழப்புகளும் , புதிய உறவுகளின் மலர்வுகளுமாய் உன் வாழ்கையின் விதானம் விரிந்திருக்கலாம். என்ன நடந்தது என்ன நிகழ்ந்தது என்ற யூகித்தலுக்கான திறன் கூட இல்லாமல் எல்லாவற்றுக்கும் மேலாக உன்னுடைய முகத்தையும்,  பழைய நட்பின் நினைவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு இந்த மூலையிலிருந்து நான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த கணம் என்னை நானே பரிதாபத்துடன் பார்த்துக் கொள்கிறேன். வேதனையான வேடிக்கை இது...  :(

மீண்டும் இன்னொரு கடிதத்தில் உன்னை சந்திக்கும் வரை ......

“Good friends are like stars.... You don't always see them, but you know they are always there”

இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.

--(

திங்கள், 20 செப்டம்பர், 2010

எதிர்வினைகள்: 
2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள் )

அஞ்சல்- 5

02.06.2010

அன்பு மறவாத சிவசோதிக்கு!

நீ நலமாயிருக்க வேண்டுமென்ற பிராத்தனையுடன் தான் இம் மடலையும் எழுதத் தொடங்குகின்றேன். நான் நலம் என்று இனிமேல் எப்ப எழுத முடியுமென்று எனக்கு தெரியவில்லை. இப்போதைக்கு என்னிடம் அந்த வாசகத்திற்கு அர்த்தமில்லை என்று வைத்துக் கொள்வோம். :):) வேற என்ன..வழமை போல் எனக்கு ஏதாவது உடம்புக்கு ஏதாவது ் வந்திருக்குமென்று இந்தக் கடிதத்தை வாசிக்கும் போஒது நீ நினைப்பாய் என்று என்னால் இப்போதே உணரமுடிகிறது...

நீ நினைப்பதும் சரி தான்..நான் எப்ப தான் நோயில்லாமல் இருந்திருக்கிறன்?? பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே இப்படித் தானே...ஒரு மாசத்தில் இரு தடவையாவது ஏதாவது ஆகாமல் நான் இருந்தேன் என்றால் ஆச்சரியம் தான்..என்ன?? :):) நான் வாங்கி வந்த வரங்களில் அதுவும் ஒன்று தானே?? :):)

வாழ்கை வயதுகளை விழுங்க விழுங்க நோய்வாய்படலின் தகுதிகளும் தாக்கங்களும் அதிகரித்துக் கொண்டு தான் போகின்றன. தடிமன், காய்ச்சல், ஆஸ்துமா விலிருந்து தொடங்கிய என் நோய்வாய்ப்படல்...அப்பாவின் மறைவுக்கு பின் மன அழுத்தம் என்று ஒரு புதிய புதினமான சொல்லாடலோடு என்னை வந்து ஒட்டிக் கொண்டது. இங்கே துக்கத்தில் அழுவதை கூட மனநோயாக்கிவிடுகிறார்கள். கவுன்ஸிலிங் போ, தெரபியை பார் என்று ஆலோசனைகளும் அப்பாயிண்ட்மெண்டுமாய்..... இவர்கள் சொல்வதைப் பார்த்தால் எங்கட இனத்தில இருக்கிற அத்தனை பெண்களும் இவர்களுடைய மனநோயகத்தில் தான் இருக்க வேண்டும் போலகிடக்கு... :):)

இப்ப கொஞ்ச நாளா கண்டறியாத வயிற்று வலியொன்று வந்திருக்கு. எந்த வலியெண்டாலும் எனக்கு கை குடுக்கிறது இங்க தைலனோல் என்ற மருந்துக் குளிசை தான். யாழ்ப்பாணத்து பனடோல் மாதிரி. டிஸ்பிரின், அஸ்பிரின் எதுவும் எனக்கு சரி வருதில்லை. அவற்றை பாவித்தால் ஒவ்வாமை நோய் வந்துவிடுகிறது. முகமெல்லாம் தடிச்சு, சிவந்து, கடிக்கத்தொடங்கிவிடுகிறது.
இப்ப வந்திருக்கிற இந்த வயிற்றுவலி கொஞ்சம் வித்தியாசமா தான் தெரியுது. மாத்திரைகளுக்கு அவ்வளவு லேசில் ஆறமாட்டேன் எண்டு அடம் பிடிக்குது. குளிசை போட்டால் கூட கன நேரம் தாக்குப் பிடிக்குதில்லை. இங்க ஆஸ்பத்திரிக்கு போகவும் எனக்கு மனமில்லை. அங்க போனாலும் இதே தைலனோலை தான் தந்து அனுப்பிவிட்டு பின்னால ஆயிரக் கணக்கில் பில் அனுப்புவாங்கள்.

நல்ல வேளை இந்த வயிற்று வலியை பாராமல் என்ர மகனின் பிறந்த நாள் பார்ட்டியையும், பிரேமாவின் பேபி ஷவரையும் ஒரு மாதிரி செய்து முடிச்சன். அரும்பட்டு நேரத்தில் ..இல்லாட்டில் தை மாதம் 25ம் திகதி பிறக்க வேண்டிய பிள்ளை 7ம் திகதியே பிறந்திட்டார் பிரேமாவுக்கு, நல்ல வேளை நான் 2ம் திகதியே பார்ட்டியை ஒரு மாதிரி செய்து முடிச்சிட்டன். அண்டைக்கு தான் உந்த வயிற்று வலி உக்கிரமாயிருந்தது, என்ன செய்தும் கேட்கேலை...!

நானும் அதுக்குப் பிறகு மருமகனாரின் வருகையிலும், வந்த கையோடு புது வீட்டுக்கு அவை குடி போன மனக் கஷ்டத்திலும், பொங்கல்,...அது இது என்று வந்ததில் கொஞ்சம் அலட்சியமாகவும் , நிறைய வலியை சகித்துக் கொள்(ல்)வதுமாய் இருந்துவிட்டேன்... ஆனால் இப்ப ஒரு கிழமையாய் முடியாமல் போக எமர்ஜென்ஸிக்கு இழுத்துக் கொண்டு போய்ட்டார் என்னவர். அதன் பலனாக தொடர்ந்து டாக்டர் அப்பாயின் மெண்ட் , ஸ்கேனிங் அது இது எண்டு எல்லாம் செய்து முடிச்ச பின்னால ஒரு சந்தோஷமான செய்தியும் கூடவே கெட்ட செய்தியாயும் சினிமா டாக்டர் சொல்வது போல் சொல்லிட்டினம். சந்தோசமான செய்தி இரண்டாவது தடவையாக நான் தாயாகியிருக்கிறேன். கெட்ட செய்தி எண்டால் குழந்தையோடு சேர்ந்து பலோப்பியன் குழாயில் சிஸ் வளருதாம்...! :(:( இப்ப அது தான் எனக்கு நெஞ்சிடி!

அஷ்வத்தாமா ஒருவரே போதுமென்று தான் மனதுக்குள் விருப்பமிருந்தாலும் அதை நடைமுறைப்படுத்த நாங்கள் எதுவும் முனையவில்லை ..காரணம் தேவனுக்கு பொம்பிள்ளைப் பிள்ளை ஆசையிருந்ததால் ..he is the baker; I’m only the oven.. But we don’t know who decide the cake type. :):) எப்படியோ இன்னொரு பிள்ளை உருவா(க்)கியாச்சு..! பலோப்பியன் குழாயில் கட்டி உருவாகியிருப்பதால் குழந்தைக்கு ஆபத்து வருமோ என்ற பயம் ஒரு புறம். இந்தக் கட்டியின் வளர்ச்சி புற்றுநோய்க்கு அறிகுறியோ என்ற நடுக்கம் இன்னொரு புறம். இப்பாடியொரு இக்கட்டான சூழ்நிலையில் என் வாழ்கையும், ஆயுளும் இப்போது எனக்கு முன்னால் பெரியதொரு கேள்விக்குறியாகவே இருக்கிறது!

டொக்டர் உள்பட எத்தனை தான் எல்லாரும் பயப்பிட வேண்டாமென்று சொன்னாலும் , இவர்களுடைய மருத்துவ விளக்கங்களும் விண்ணானங்களும் எனக்கு அடிமுடி விளங்காததாலும் எதுவும் என்னுடைய கவலையை தீர்க்கக் கூடிய வல்லமையோடில்லை. சினிமா படங்களில் வரும் கான்ஸர் கதாநாயகன்களும், கதாநாயகிகளும் தான் மனக்கண்ணில் வந்து வந்து போகினம்.

அதொண்டுமில்லை;; சிஸ் வேற டியூமர் வேற..பயப்பிடாதை என்று தேவன் சொன்னால் ஆத்திரம் வருது; என்னை சமாதானப்படுத்த பொய் சொல்லுறாரா அல்லது நான் செத்துப் போனால் பரவாயில்லை என்று நினைக்கிறாரா என்றெல்லாம் விபரீதமான சந்தேகமெல்லாம் வருது. :/

இந்தக் கட்டியை இப்பவே அகற்றினால் கருவாயிருக்கும் பிள்ளையை அழித்துவிடுவினம். இந்தக் கட்டியை நீக்குவதென்றால் பலோப்பியன் குழாயையும் வெட்டி விடுவார்களெனிலலினியொரு குழந்தைக்கு வழியில்லை..ஆக இப்போது ஒருவாகியிருக்கும் இந்தக் குழந்தையை நான் எப்படியாவது பெற்றெடுக்கத் தான் வேண்டும். எனக்குள்ள வளருகிற என்ர பிள்ளையை கொன்று எனக்கு உயிர் கொடுக்க வேணுமே சொல்லு பார்ப்பம்??

கட்டியை அகற்றும் பட்சத்தில் இந்தக் குழந்தையை அழிக்க வேணுமென்ற்ல் கடைசிவரை பிள்ளை பிறக்கும் வரை கட்டியை அகற்றுவதில்லை என்று முடிவோடு தான் நாளைக்கு கிளினிக் போய் டொக்டரிடம் சொல்லப் போறேன். அநேகமாக குழந்தையையும், கட்டியையும் சேர்த்தே 9 மாசம் வயிற்றில் வளர்க்கப் போகிறேன் என்று தான் நினைக்கிறேன். அது தான் என்னுடைய பயமும் கூட...!

இந்தப் பிள்ளை பிறக்கும் வரைக்கோ அல்லது பிறந்த பிறகோ எனக்கு ஏதும் ஆகாமல் இருக்க வேண்டுமென்பது அடுத்த என்னுடைய கவலை. எனக்கொன்று ஆச்சென்றால் பாவம் இந்தப் பிள்ளையை தாயை தின்னி என்று எங்கட குடும்பத்தார் பழி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நான் இருந்து என்ர பிள்ளைகளை கவனிக்கிறது போல வேற யாரும் பாப்பினமே என்ற கேள்வி இன்னொரு பெரிய கவலை..! பெற்ற பிள்ளைக்காகவும், பிறக்கப் போகும் பிள்ளைக்காகவும் கவலைப்படுவதா அல்லது மரண பயத்திலிருக்கும் என்னை பார்த்து நானே கவலைப்படுறதா எண்டு எனக்கு விளங்கேலை.. !

வீணாக கவலைப்படுறன் என்று அறிவு சொன்னாலும் மனது அதை கேட்க தயாராயில்லை. இப்ப தான் விளங்குது மனுசருக்கு சாவு திகதி தெரியாமல் இருப்பது எத்தனை நல்ல விசயமெண்டு. ஒரு மனுசன் தன்னுடைய மரணத்துக்காக தானே அழும் கேவலமும் பரிதாபமும் போல் வேற எதுவுமிருக்காது சிவசோதி. இதை என்ர சொந்த அனுபவத்தில உனக்கு எழுதிறன்.

அழுவதே கேவலம்; அதை விட செத்துவிடுவோமோ என்ற பயத்தில் , சுய இரக்கத்தில் கவலைப்படுதையும் கண்ணீர் விடுவதையும் மிக மிக கேவலமாக உணர்கிறேன்.. அந்த உணர்வில் தான் என்னுடைய பயங்களையெல்லாம் அப்படியே இந்தக் கடிதத்தில் கொட்டிவிட்டிருக்கிறேன். கவலை தீர்ந்ததா இல்லையாவெண்டு எனக்கு விளங்கேலையடி...ஆனால் என்னவோ ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைச்ச மாதிரியிருக்கு.

எப்படியோ இந்தச் சூழ்நிலையில் எனக்கு என்ன நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி ..அதை நீ அறியப் போகும் விதியிருந்தால் எல்லாம் முடிந்திருக்கும் ....ஒன்று நான் அல்லது எனது கட்டி..!

வேறு என்ன ?? மிச்ச விசயத்தை நாளைக்கு டொக்டரிடம் போய் வந்த பின் என்னுடைய மனநிலையைப் பொறுத்து ஆறுதலாக (முடிந்தால்) கடிதம் எழுதுவன்.

குள்ளே வளரும் கட்டி..!
என்ன ??
"A real friend is one who walks in when the rest of the world walks out."
இங்ஙனம்
அன்புடன்
சாந்தா.



திங்கள், 6 செப்டம்பர், 2010

அஞ்சல் - 8

அன்புள்ள சிவசோதி!
எப்படியிருக்கிறாய்? முன்பெல்லாம் கடிதம் எழுதும் போது உன்னுடைய இருத்தலை நிகழ்தகவாக வைத்து தான் எழுதியிருக்கிறேன்.
ஆனால் இன்று நீ உயிருடன் இருப்பதை வசந்தகுமாரி உறுதிபடுத்திய சந்தோசத்துடனும் , வார்த்தைகளால் விளக்கப்படுத்தவியலாத உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் இந்த கடிதத்தை உனக்கு  எழுதுகிறேன்.

நான் இன்று மிக மிக அதியுச்சமான முனைப்பில்  ஏறி நின்று வானத்தை தொட்டுப் பார்த்தது போன்ற களிப்பில்  இருக்கிறேன் நீ இருக்கிறாய் என்ற அந்த ஒரு வரி தகவல் கிடைத்ததில்..அதுவே போதுமடி..!

இன்று 83ம் ஆண்டுக்கு  பிறகு வசந்தகுமாரியுடனும் அனுஷியா இராஜசிங்கத்துடனும் போனில் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது...!
வாற மாதம் கனடாவுக்கு இலண்டனிலிருந்து வசந்தகுமாரியும் அனுஷியா இராஜசிங்கமும் வருகினம். கனடாவிலிருக்கும் பள்ளித் தோழிகளை தொடர்பு கொண்ட போது என்னை  விசாரித்து தேவறூபினி மூலம் எனது நம்பர் கிடைத்து...வசந்தகுமாரியும் அனுஷியா இராஜசிங்கமும் போனில் கதைத்தார்கள் சிவசோதி! கனடாவில் நிறைய பிளானோடு ரீயூனியன் சந்திப்புக்கு வரும் வ்சந்தகுமாரி என்னுடைய பேசிய அந்த தருணத்திலேயே கனடா பிளானை தலை கீழாக மாற்றிவிட்டு கனடா வந்திறங்கும் அன்றே இங்கே என்னிடம் வர பஸ் எடுக்கப் போகிறாள்...

அவர்கள் இருவரும் சாந்த கௌரி, சாந்த கௌரி என்று மாத்தி மாத்தி கூப்பிடத் தான் எனக்கே என் பெயர் ஞாபகத்துக்கு வந்தமாதிரி இருந்தது சிவசோதி. இத்தனை காலமாக சுவாதி, சுவாதி என்று அமிழ்ந்து போன என்னுடைய சுயம் பழைய படி சுண்டிக்குளி மாணவி சாந்தகௌரியாக மாற்றிவிட்டிருக்கிறது..
“அடியேய் சாந்தகௌரி....எத்தினை வருசமாடி உன்னை தேடுறன்...எனக்கு கனடா புரோகிராம் பெரிய விசயமே இல்லை...உன்னை பாக்க வேணுமடி...பழையபடி எங்கட அந்த ப்பப்ப சங்கேத பாஷைல கதைக்க வேணுமடி...நீ கவலைப்படாதையடி...சிவசோதியை கண்டு பிடிச்சு உன்னோட கதைக்க வைக்கிறது என்ர பொறுப்படி...அவளை நான் ஒரு 5 வருசத்துக்கு முன்னம் சந்திச்சனானடி...அப்பிடியே வடிவா அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறாள் . 4 பிள்ளையளாமடி”  வசந்தகுமாரி சொல்ல சொல்ல மனதுக்குள் நான் அழுது கொண்டிருந்தேன்..உன்னைப் பற்றி இப்படி எவர் எவரிடமோ எல்லாம் விசாரித்து விசாரித்து சின்ன சின்ன தகவல்களாக ஒன்றுக்கு ஒன்று ஒட்டிப் பொருத்திப் பார்க்க முடியாத மர்மக் கதையாக போய்க் கொண்டிருக்கிறது என்னுடைய தேடுதல். ஆனால் ஒரு பெரிய நிம்மதி...சந்தோஷம்...5 வருசத்துக்கு முன்னால் உன்னை வசந்தகுமாரி சந்தித்திருக்கிறாள் என்றால்....இந்தியன் ஆமியின் ஷெல் அடியில் உனக்கு ஏதும் ஆகவில்லை என்பதில்...ஆனால் இன்னொரு பக்கம் சோகம்...ஷெல்லடியில் சின்னையரின் மகளில் ஒருத்தி இறந்தது தெரியும்..ஆனால் மூத்ததா இளையதா எண்டு தெரியாது எண்டு கிடைத்த தகவலின் அடிப்படையில்...நீ இருப்பது நிரூபணமாகிவிட்டதால் இறந்தது உன் தங்கை அல்லவா? :(
கடந்து வந்த வாழ்கை பாதை எத்தனையையோ இழக்கச் செய்திருக்கிறது. புதிதாக எதையெல்லாமோ கிடைக்க வழி செய்திருக்கிறது. ஆனாலும் மனம் மட்டும் பழையவற்றையும், இழந்தவற்றையும் சுற்றியே , திரும்பக் கிடைக்காது என்று அறிவு சொல்லிக் கொடுத்தாலும் தேடிக்கொண்டிருக்க வைக்கிறது.
இண்டைக்கு இந்த கடிதத்தை உனக்கு எழுத வசந்தகுமாரி மட்டும் காரணமல்ல. ஃபேஸ்புக்கில் நண்பராக இருக்கும் ராஜன் சபாபதி ஐயாவும் தான்...

சில குறிப்பிட்ட பாடல்கள் மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கும்; இது என்ன பாட்டு? இதெல்லாம் ஒரு பாட்டா என்று சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் அது நமக்கு மிகவும் பிடித்திருக்கும்..எத்தனை தரம் கேட்டாலும் இன்னொரு தடவை கேட்க வேண்டும் போல் இருக்கும்.
சில பாடல்கள் எமது பழைய நாட்களின் நினைவுப் பக்கங்களிலிடையே சொருகி வைத்துவிட்ட  Book mark ஆக  இருக்கும்...அப்படியொரு Book mark ஐ இன்று ராஜன் சபாபதி ஐயா என்னுடைய நினைவிலிருந்து இழுத்துவிட்டார் சிவசோதி.
”நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை- உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை.”
எனக்கு இந்தப் பாடல் ஒரு முக்கியமான Book mark ஏன் என்றால் இந்தப் பாடலை நீ பாடிக் கொண்டிருந்த போது தான் நான் உன்னை முதல் முதல் பார்த்தது.  என்னுடைய வாழ்கையில் எத்தனையோ பேரை  சந்தித்து இருந்தாலும் நீயும் இன்னும் ஒரு சிலரும் தான் என்னுடைய ஞாபக நூலகத்தில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உனக்கு இந்தப் பாட்டோ அல்லது அன்றைய தினமோ நினைவுக்குள் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை சிவசோதி. என்னையிட்ட உனக்கான முதல் நினைவு அதாவது உன்னுடைய ஞாபகங்களின் நூலகத்தில் என்னுடைய  புத்தகம் எத்தனை பக்கங்களுடன் அதில் எங்கே உன்னுடைய  Book markஐ சொருகி வைத்திருக்கிறாய் என்று உன்னிடம் கேட்க ஆசையாக இருக்கிறது. சாந்தகௌரி என்ற ஒரு ஒல்லியான  புத்தகம் பக்கங்கள் கிழிக்கப்படாமலோ அல்லது செல்லரித்துப் போகாமலோ பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்க விருப்பப்படுகிறேன்.
உனக்கு தாரிணியை நினைவிருக்கிறதா சிவசோதி? எனக்கு அவளையும் மறக்க முடியாது. அவள் ஒன்றும் எனக்கு உற்ற தோழி அல்ல. வகுப்பில் சக மாணவி தான். ஆனால் அவள் தான் என்னுடைய கவனத்தை உன் பக்கம் திரும்ப வைத்தவள். 
அந்த வருடம் எனக்குக் கிடைத்த வகுப்பும் சரி, ஆசிரியர்களும் சரி எனக்கு முதலில் பிடிக்கவில்லை. வருடக் கணக்காக 2ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை ஒரே கூட்டத்தினருடன் இருந்து படித்த எனக்கு இண்ட்அ வருடம் அந்தக் கூட்டத்திலிருந்து பிய்த்து எறியப்பட்டது போல் உங்களுடைய வகுப்பில் என்னை எறிந்துவிட்டார்கள் என்ற உணர்வில் ஒரு வாரமாக வேண்டா வெறுப்பாகவே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தேன். 

அந்த ஒரு வாரத்தில் வகுப்பில் நடந்த எந்த பாடத்திலும் எனக்கு ஈர்ப்பே வரவில்லை.. எனது பழைய வகுப்பு தோழிகள் எல்லாரும் இன்னொரு வகுப்பில் இருக்க நான் இங்கு ஒரு தனித்த தீவு போல் அனாதையாக உட்கார்ந்திருப்பதாகவே எனக்கு தோன்றியது. தமிழ் வகுப்பில் கம்பராமாயணம் அப்போது தான் முதல் முதல் தொடங்கியிருந்தது. கௌரி மிஸ் தான் தமிழ் ஆசிரியை. பாடத்தில் கவனம் செலுத்தாத என்னை எழுப்பி வைத்து காரணம் கேட்டார். எனக்கு இந்த வகுப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த பாடம் முழுக்க என்னை நிற்க சொல்லி பணிஷ்மெண்ட். அதுவும் தொடர்ந்து இரண்டு பீரியட்ஸும் தமிழ் வகுப்பு. இரண்டு வகுப்பிலும் கால் கடுக்க நின்ற போதே கௌரி மிஸ்ஸுடன் மனதுக்குள் சண்டையும் சவாலும் போட்டு தீர்த்துவிட்டேன்.
“இவவுக்கு என்னை பற்றி என்ன தெரியும்? இத்தனை வருசத்தில் எந்த மிஸ் என்னை எழுப்பி எனக்கு பணிஷ்மெண்ட் தந்திருக்கிறா? அதுவும் தமிழ் டீச்சர்ஸ் என்னை தலையில் வைச்சு கொண்ட்டாடுவினம்.. பேச்சு போட்டு கட்டுரை போட்டி என்டு நான் வெண்டு கொண்டு வந்தால் இவ என்னை எழுப்பிவிட்டிருக்கிறாவா? இருக்கட்டும்..அடுத்த சோதினை வரட்டும்...சாந்தகௌரி யார் எண்டு இவவுக்கு காட்டுறன்” 
அன்று எதிர்பார்த்தமாதிரியே  கம்ப இராமாயணத்தின் “முதல் பாடம்...மாடு நின்ற அம்மணி மலர் சோலை மருவி” பாடல் பொழிப்புரை, விளக்கம் அர்த்தம் எல்லாவற்றிலும் அடுத்த கிழமை டெஸ்ட் எண்ட்டாச்சு. அன்றிலிருந்து அடுத்த கிழமை வரை கம்ப இராமாயணமும் கையும் தான்...ஆனால் வகுப்பில் பாடத்திட்டத்துக்கு தந்த இராமாயணத்தை நான் தொடவே இல்லை. பண்டிதரான பெரியப்பாவிடம் போய் வகுப்பில் நடந்ததை சொல்லி அவரிடமிருந்த கம்பராமாயணத்தை வாங்கி , அதிலிருந்த விளக்கம் பொழிப்புரை எல்லாவற்றையும் படித்துவிட்டு பள்ளிக்கு போனேன்,...
வகுப்பில் நுழையும் போதே தாரிணி, விஜித்தா, துஷித்தா, அஜந்தா என்று  ஒரு கூட்டம் உன்னை சுற்றி இருந்தது . அப்ப தான் நீ எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா பாட்டு பாடி முடித்துக் கொண்டிருந்தாய். அந்த மாணவிகளின் கூட்டம் எனக்கு அப்போது பரிச்சயமானவர்களாயிருக்கவில்லை. அதனால் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஆரம்பத்தில்
எப்படா இடைவேளை மணி அடிக்கும் எனது பழைய வகுப்பு மாணவிகளுடன் போய் உட்காரலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பேன்; மணி அடித்ததும் உடனே அவர்களிடம் ஓடிவிடுவேன்.. வழமையாக போன வருடங்களில் என்னோடு இடைவேளைகளையும் , விளையாட்டுகளையும் கழித்த அவர்களுக்கு  என்னுடைய இடத்தை நிரப்ப வேறு மாணவிகள் கிடைத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலும் நான் அந்நியமாக உணர தொடங்கினேன். அப்போது தான் உணர்ந்தேன்  ”அவர்கள்  என்னோடு பொழுது கழிக்கவில்லை...நான் தான் அவர்களுடன் பொழுதைக் கழித்திருக்கிறேன் என்று...
இரண்டு வகுப்பு மாணவிகளுடனும் ஒட்டவியலாமல் தனித்து என்னை நானே ஒதுக்கி கொண்ட அந்த ஒரு வாரத்தில் இந்த வகுப்பில் யாரையும் சிநேகிதியாக நினைத்து உறவாடக் கூடாது...தனித்திருந்து  படிக்க வேணும்...கௌரி மிஸ்ஸுக்கும் என்னை புறந்தள்ளிய பழைய நண்பிகளுக்கும் என்னை நான்  யார் என்று காண்பிக்க வேணும் என்று  காரணமே இல்லாமல் எனக்குள் ஒரு வஞ்சம் புகுந்திருந்தது.
அந்த நேரத்தில் தான்  பள்ளி தொடங்கி  10 நாட்களின் பின்  நீ
ஊரிலிருந்து  வந்திருந்து  சமா வைத்துக் கொண்டிருந்தாய். நான் இருந்த மேசை தாரிணி இருந்த மேசை வரிசைக்கு பக்கத்தில் தாரிணியின் மேசைக்கு அருகில் இருந்தது.
ஒவ்வொருவருக்காகவும் அவரவர் கேட்ட பாடல்களை பாடிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. இப்போது தாரிணியின்  முறை.. அவள் விருப்பப் பாடலாக தான் நீ இந்த  ”நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை- உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை.”  பாடலை பாடினாய்.
வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நீ பாடியது மிகவும் இனிமையாகவும் அருமையாகவும் இருந்தது எனக்கு. அதே நேரம் பொறாமையாகவும் இருந்தது. அதுவரை லிட்டரி மீட்டிங்க்ஸில் பாடல்கள் பாடுவது நான் தானே? அதனால் எனக்குள் ஒரு கர்வம்..என்னை விட்டால் இங்க பாட ஆரும் இல்லை என்ற தைரியத்தில் சில வேளைகளில் பாடச் சொல்லிக் அவர்கள் கெஞ்சினாலும் பாட முடியாது என்று பிகு பண்ணிவிட்டு போய்விடுவேன்.. ஆனால் உன்னுடைய குரலைக் கேட்ட அந்த நிமிசத்தில் எனக்கே என் மேல் சைக் என்று வெறுப்பு வந்துவிட்டது சிவசோதி! எத்தனை அழகாக இவ பாடுறா எண்டு தான் எனக்குள் மலைப்பும் பொறாமையும் வந்தது.
பாடசாலை பிரேயர் மணி அடிக்க எல்லாரும் மண்டபத்துக்கு போக எழும்பும் போது தான் மேரி ஜெபறூபி கேட்டா “ இண்டைக்கு கம்ப இராமாயணத்தில் டெஸ்ட் எல்லா? படிச்சீங்களாடி” எண்டு.
அதை யார் படிக்கிறது? ஆரையும் பார்த்து எழுத வேண்டியது தான் எண்டு தாரிணி சொல்ல
ஐயோ நான் படிக்கேலை எண்டு, நானும் படிக்கேலை எண்டு கோரஸாக ஒவ்வொருத்தரா சொல்ல , எல்லாரும் படிக்கேலை  கஷ்டமா இருக்கு எண்டு சொல்லி டைம் கேப்பம் மிஸ்ஸிட்ட என்று இன்னொருத்தி ஐடியா கொடுக்க எனக்கு சீ எண்டு போட்டுது... ஐய்ய..அப்ப நான் மட்டும் தான் மினக்கெட்டு படிச்சிருக்கிறனா என்று எனக்கே என்னைப் பாக்க பரிதாபமாக இருந்தது. ஒன்றுமில்லாத விசயத்துக்கு பண்டிதரிண்ட புத்தகத்தை வாங்கி படிச்சிருக்கிறனே எண்டும் நகைப்பாய் இருந்தது.
“சாந்தகௌரி நீர் படிச்சிட்டீரா?” எண்டு தாரிணி கேட்க “ம்ம்ம்...படிச்சிட்டன்” என்று நான் சொல்லும் போதே சுரத்தில்லை எனக்கு.
நீ சிரித்தாய்....எனக்கு உன் மேல் கோபம் வந்தது. ஆனால் நீ சொன்னாய்” எல்லாரும் படிச்சிட்டு நான் படிக்கேலை எனக்கு ஒண்டும் விளங்கேலை; ஒண்டும் தெரியாது” எண்டு சொல்லுறது தான் சுண்டிக்குளி கேர்ள்ஸின் ஸ்டைல்.. பாவம் இவ அப்படி ஃபஸ் அடிக்காமல் படிச்சத படிச்சன் எண்டு ஒப்புக் கொள்ளுறா...எனக்கு இவவை பிடிச்சிருக்கு”
கன நேரமா நீ சொன்னது தான் எனக்கு மனதுக்குள் சந்தோசத்தைக் குடுத்தது. அந்த நிமிசத்தில் இருந்து நீயும் நீ பாடிய பாட்டும்  உன்னை அந்த பாட்டை பாடச் சொல்லி ஆக்கினைப்படுத்திய தாரிணியும்  என் ஞாபக நூலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் உன் புத்தகத்தின் Book mark காகிவிட்டது.
எல்லாரும் என்ன கெஞ்சியும் கௌரி மிஸ் பொருட்படுத்தாமல் அன்றைக்கு டெஸ்ட் நடத்தியதும், அந்த சோதினையில் எனக்கு 97 மார்க்ஸ். தாரிணிக்கு 20 மார்க்ஸ். சோதினையை திருத்தி மார்க்ஸ் எல்லாம் போட்டு விட்டு அடுத்த நாள் தமிழ் வகுப்புக்குள் நுழையும் போதே கவனித்தேன் கௌரி மிஸ் கையில் என்னுடைய கொப்பி தான் இருந்தது. “ஆர் அது சாந்தகௌரி? “ என்று கேட்டுக் கொண்டு தான் வந்தா... எழும்பி நிண்டன்..  அவவிண்ட முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி அல்லது வியப்பு...”நல்லா செய்திருக்கிறீர்..பிறகேன் சாகக் குடுத்த மாதிரி வகுப்பில கவனம் எடுக்காமல் இருக்கிறீர்? ஒரு கிளாஸில இருந்து இன்னொரு கிளாஸுக்கு மாறிட்டால் என்ன? வாழ்கையே முடிஞ்சு போட்டுதா? இங்கயும் ஃபிரண்ட்ஸ் பிடிக்கலாம்.ட்ரை பண்ணும்” என்று அவ சொன்னது அட்வைஸா அல்லது படிக்கிற பிள்ளையை சோர்வான நேரத்தில் பணிஷ் பண்ணிட்டன் என்ற குற்ற உணர்வில் சொல்லப்பட்ட ஆதரவான வார்த்தைகளா...எதுவோ.....ஆனால் அது சரியான வார்த்தைகளாக தான் அமைந்தது எனக்கு...
எனக்கும் ஒரு சிநேகிதி கிடைத்தாள் ..அந்த வகுப்பில்...சிவசோதி எண்டு...!

அன்று எனக்குக் கிடைத்த சிவசோதியின் அறிமுகமும்அவளால் இன்னும் ஆறு சிநேகிதிகள் கேசா, வசந்தகுமாரி,சுகந்தி , துஷிதா, அஜந்தா, அனுஷியா எண்டு கிடைத்த சம்பவங்களும், எங்கள் இருவரையும் உட்கார வைத்து பாட்டு பாடச் சொல்லி இரசித்த தாரிணியுமாய்....அதன் பின் அந்த 2 வருட பாடசாலை வாழ்கை இனிமையாகவே அமைந்தது. இடையில் தாரிணி இறந்து போன அதிர்வுடன் 10ம் வகுப்பு சோதனை எழுதிய கையுடன் அவரவர் பிரிந்துவிட்டாலும் நீ என்னுடனேயே   இருந்தாய். வசந்தகுமாரியும் தொட்ர்ந்து வந்தாள். பின்பு தான் வாழ்கை நம்மை  சிதிலமாக்கிவிட்டது...

இவர்களை எல்லாம் நான் இன்றுவரை முயற்சி எடுத்து தேடியதேயில்லை சிவசோதி! உன்னை மட்டும் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் ஒரு சிலர் என்னையும் ஒரு தோழியாக நினைத்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் போது மனது சந்தோஷிக்கத் தான் செய்தது. என்னைக் கூட நினைவில் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்களே என்று.....அதில் ரஜனி ஒருத்தி...! ரமா என்று இன்னொருத்தி..!
1983ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி என்னுடைய அம்மம்மாவின் செத்தவீட்டுக்கு வந்துவிட்டு போனாய். அதன் பின் உன்னை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் இன்றுவரை கிடைக்கவில்லை.  இலக்கம் 6 . தர்மபுரம் வீதி, பரந்தன் என்ற அந்த மூன்று வரி முகவரியுடனும் உன்னுடையதும் உன் குடும்பத்தாரின் அடையாளங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை வருடங்களாக போவோர் வருவோரிடமெல்லாம் விசாரிக்கிறேன்.  நீ கிடைக்கவில்லை..! எனக்குள் இப்ப சில நாட்களாகவே ஒரு கேள்வி அரிக்கத் தொடங்கியிருக்கிறது...” என்னை நீ இத்தனை வருடத்தில் ஒரு தடவையாவது தேடியிருப்பியா?” என்று..! 


இதுவும் உன்னுடைய வரிகள் தான் ..இப்பவும் இதே பாடலை நீ பாடுகிறாயா?
“எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? - என்னை
விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா?” 
அன்புடன்
நான்.