அன்புள்ள சிவசோதிக்கு!
நான் எழுதுவது கடிதமல்ல….! நட்பு !!
இத்தனை வருடங்களில் என்றாவது ஒரு நாள் திரும்பவும் சந்திப்பேனா என்ற நிகழ்தகவில் நான் பாதுகாத்து வைத்திருந்த நட்பிற்குடியவளை தேடிக் கண்டு பிடித்துவிட்ட மகிழ்வில் …………..
அத்தனை வருட இடை வெளிகளின் பின் திரும்பவும் அவள் குரல் கேட்ட நிம்மதியில்………..
இந்த வினாடி அவளுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து மடலாக இம்மடலை எழுதும் வரமளித்த இறைவனுக்கும், என் தோழியை நான் தேடி தேடி துவண்ட நேரமெல்லாம் கவலைப்படாதே ...கண்டு பிடித்துவிடலாம் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்த என் கணவரிலிருந்து பள்ளித்தோழிகள் அத்தனை பேருக்கும் ….
அவளுக்காக என்னைத் தேடிய அவளுடைய துணைவருக்கும் முதற்கண் என் மனம் நிறைந்த நன்றிகள்!!
வாழ்கையில் இத்தனை வருட காலம் பிரிந்திருக்க நேரும் எந்த உறவும் திரும்ப சந்திக்கும் போது அதே உறவாகவோ அதே உணர்வுகளுடனும், அன்புடனுமோ இருக்குமா என்பது சந்தேகம் தான்.. ஆனால் தோழமை என்பது எப்போது சந்தித்தாலும் அதே கனத்துடன் தான் இருக்கும் என்பதை இந்த பிரிவும் சந்திப்பும் நிரூபித்திருக்கிறது எனக்கு.
இத்தனை காலத்தின் பின் பேச சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட தயக்கமாகவே இருந்தது அவளுடன் பேச….அப்போது எப்படி இருந்தாளோ அவளை தான் இப்போதும் என் மனதில் வைத்திருக்கிறேன். அதே அவளாக தான் இப்போதும் அவள் என்னோடு பேசுவாளா பழகுவாளா என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. சுவாரஸ்யமில்லாமல் சுரத்தே இல்லாமல் நீயா எப்பிடி இருக்கிறாய் என்ற கேள்வியுடன் அவள் உரையாடல் இருக்குமோ என்ற கவலை இருந்தது….
ஆனால் இரவு முழுவதும் எனது தொலை பேசி அழைப்புக்காக தலையணக்கு பக்கத்தில் அலை பேசியை வைத்துக் கொண்டிருந்த அவளும் சரி, எப்போது விடியும் அவளுடன் பேசலாம் என்று காத்திருந்து, விடிந்த பின்பும் கூட பேச தயங்கிய நானும்…… பிரிந்தவர் மீண்டு சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்ற வரிகள் எல்லாம் அதீத பொய்கள் என்று நினைத்த எனக்கே அப்படி ஒரு நிமிடங்களை அனுபவத்தில் தந்த அந்த நிமிடங்களும் ...எனக்கு விளக்கிச் சொல்ல தெரியவில்லை…!
இத்தனை காலம் உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , என்னால் சந்திக்க முடியாவிட்டாலும் , உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் நீ நலமாக இருக்க வேண்டும், நல்ல துணைவரும், கொள்ளை கொள்ளும் அன்பான குழந்தைகளுமாய் நீ நிறைவான வாழ்கை வாழ வேண்டும் என்று வாழ்த்துவேன் மனதுக்குள். ஆனால் இன்று என்னுடைய அத்தனை வருட வாழ்த்துகளையும் இந்த ஒரு மடலில் அர்ப்பணிக்கும் திறமையில்லாமல் அதியுன்னதமான கவித்துவமான வார்த்தைகளைத் தேடுகிறேன்,
.
வித்தியாசமான வாழ்த்துகள், அற்புதமான சொற்தொடர்கள் என்றெல்லாம் சோடனையாக வாழ்த்து எழுத எனக்கு தெரியாதடி…! மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு தான் சரியான வார்த்தைகளை தேடுகிறேன். !! துயரத்தை , பிரிவை எல்லாம் வர்ணிக்க தெரிந்த எனக்கு உன்னை திரும்பக் கிடைத்த குதூகலத்தை, உன்னோடு பேசக் கிடைத்த மகிழ்ச்சியை வர்ணிக்க தெரியவில்லை.
என்றைக்கும் நீ இதே மகிழ்வுடனும், புன்னகை மாறாத முகத்துடனும் சந்தோசமாக இருக்க வேண்டும். தளும்பலற்ற பூரண நிறைகும்பம் போன்ற குடும்ப வாழ்வும், இணைபிரியாத துணையும், ஈடு இணையற்ற மக்களுமாய் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நீ நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோமடி !!
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்!
தமிழ் பாடும் நல்வார்த்தைகள் யாவும் உனக்கான பாடல்கள்!!
குயில் பாடும் இசையும், கிளி பேசும் மொழியும் உன் கதை சொல்லும்
உயிர்வாழும் பொழுது வரை உன் தோழமையுடன் என் கதை போகும்!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழி!!
அன்புடன்
உன் தோழி சாந்தா




