அன்பான உனக்கு நான் எழுதுவது என்னவென்றால்...!!
கடந்த காலங்களில் உன்னுடைய ஞாபகம் வரும் போதெல்லாம் என் அடிவயிற்றில் ஒரு அசுரன் தன் பாரிய கரங்களினால் உயிர் நாடி நரம்புகளை நசுக்கிப் பிசைவது போன்ற வேதனை ஏற்படும். இனிமையான உணர்வுகளை தர வேண்டிய நினைவுகள் வாள் மாதிரி இதயத்தை அறுக்கும் . அப்போதெல்லாம் உன்னையும் உன் குடும்பத்தாரையும் நினைத்து ஏதேதோ பயங்கரமன அல்லது வேதனையான கற்பனைகள் மனக் கண்ணில் ஓடும்.
நீ எங்கே இருக்கிறாய் என்பது தெரியாது. இருக்கிறாயா இல்லையா என்று கூட தெரியாமல் மனதுக்குள் நவம்பர் 24 களில் உனக்கான பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்லிக் கொள்வேன். நீ எங்கே இருந்தாலும் என்னுடைய வாழ்த்து ஏதோ ஒரு வகையில் உன் மனதில் ஒரு நினைவையோ அல்லது ஒரு சிலிர்ப்பையோ உருவாக்கும் என்று நம்பினேன்.
அவரவர் வாழ்கையின் திசைகள் எப்படியெல்லாம் மாறிப் போகுமோ என்ற யோசனையே இல்லாத அல்லது தெரியாத பருவத்தில் உருவான நட்பு ஒன்று முகவரி தொலைந்து போய் இத்தனை அல்லல் பட வைக்கும் என்று அன்று நீ கடைசியாக பரந்தனுக்கு சென்ற போது கூட தோன்றவில்லை. பள்ளிக்கூட வாழ்கையின் அத்தனை சந்தோசங்களையும் பிரட்டிப் போட்டு ஒவ்வொருத்தியும் திசைக்கு ஒன்றாய் தொலைந்து போய் தேடிக் கொண்டிருப்போம் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை...!!
ஆனால் எப்படியோ இன்று அத்தனை பேரும் தொடர்பு கொண்டு பேசுமளவுக்கு கண்டு பிடிக்கப்பட்டுவிட்டோம் என்பது என்னவோ மனதுக்கு பெரிய நிம்மதியாக இருக்கிறது.
இத்தனை காலம் பிரிந்திருந்தது என்னவோ நீ செய்த தவறு போல் அவ்வப்போது உன்னோடு சண்டை போடுகிறேன். எங்களை பிரித்தவர்கள் என்று எங்கள் கணவர்மார் மேல் பொறாமைப்படுகிறேன். ஏன் இப்படி ஒரு விசர் தனமான மனநிலை என்று புரியவில்லை. பிரிவுக்கு காரணம் ஏதோ ஒரு காரணியாக இருக்க ஏதோ ஒன்றை காரணம் காட்டும் பக்குவமற்ற மனநிலை என்னமோ இந்த நட்பு விசயத்தில் மட்டும் தான் வருகிறது.
அதன் காரணம் உன் பிறந்தநாளை தவிர உன்னுடைய எந்த விசேசமும் பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. அதே போல் என் இன்ப துன்ப நிகழ்வுகள் எதிலும் நீயும் பங்கு கொள்ள முடியவில்லை. உன் குழந்தைகளில் ஒரு குழந்தையை தன்னும் இந்தக் கைகளால் வாரி தூக்கி விளையாடும் வரம் கிடைக்கவில்லை.. என்ற ஆதங்கம் தான் ..!!
சரி விடு... ஒவ்வொரு விசயத்தையும் மடலாக எழுதி வைத்துவிடுகிறேன். வரும் காலத்தில் நட்பை நெஞ்சில் சுமந்து , கழுத்தில் தாலி கட்டிவிட்ட ஒரு காரணத்தால் மனைவி என்பவள் தங்கள் உடமைகள் என்றும் தங்களைத் தவிர மனைவிமாரின் மனதில் இன்னொருவர் இருக்க மாட்டார்கள் என்ற மமதை கொண்ட கணவர்மார்கள் பொறாமைப்படுமளவுக்கு பெண்களிடம் ஒரு நட்பு இருக்குமா என்று கூகிளில் ஆரேனும் தேடினால் ஏன் இல்லை அப்படி நட்பு இருந்திருக்கிறது என்பதை நிரூபிக்க இந்தக் கடிதங்கள் அவர்களுக்கு ஆதாரங்களாக கிடைக்கட்டும். எங்கள் ஆறு பேரின் நட்பையும் , எங்களை யாரென்றே அறியாத அவர்கள் சிலாகிக்கட்டும். பெண்களாலும் நட்பை உயிருள்ளவரை பேணிக் காப்பாற்ற முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு உதாரணாமாக இருக்கிறோம். எங்களுக்கும் வாழ்கை இருக்கிறது. நாங்கள் எலிசபெத் மஹாராணிகளாக இருக்கவில்லை. சாதாரண மனுஷிகளாக அன்றாட வாழ்கையின் படிக்கட்டுகளாக தாங்கி பிடித்து எங்கள் குடும்பத்தை ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கும் சுமைகற்களாக தான் இருக்கிறோம். ஆனாலும் நாங்கள் தொலைபேசியில் ஒன்று சேரும் போதெல்லாம் அதே சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் ஜீ.ஸி. இ ஓ/எல் வகுப்பு மாணவிகளாக, மரத்தடி கச்சான் ஆச்சியிடம் வாங்கும் கச்சானை ஆறு பங்காக பங்கிட்டு சாப்பிட்ட அதே 16 வயது பிராய சிறுமிகளாக , எந்தவொரு டைம் மெஷினும் இல்லாமலேயே அந்த நாட்களுக்குள் புகுந்துவிடுகிறோம். இதெல்லாம் சும்மா ஹாய் பாய் சொல்லிவிட்டு போகும் கிளாஸ்மேட்களுக்கு கிடைக்காது. உண்மையான நட்போடு ஒருவரை ஒருவர் யாரிடமும் விட்டுக் கொடுக்காமல் சிநேகித்த தோழமைகளிடம் மட்டும் தான் வாய்க்கும்.
நான்!!


