Monday, November 23, 2020

அஞ்சல் - 10

 

அன்புள்ள  சிவசோதிக்கு!



நான் எழுதுவது கடிதமல்ல….! நட்பு !!


இத்தனை வருடங்களில் என்றாவது ஒரு நாள் திரும்பவும் சந்திப்பேனா என்ற நிகழ்தகவில்  நான் பாதுகாத்து வைத்திருந்த நட்பிற்குடியவளை தேடிக் கண்டு பிடித்துவிட்ட  மகிழ்வில் …………..

அத்தனை வருட இடை வெளிகளின் பின் திரும்பவும் அவள் குரல் கேட்ட நிம்மதியில்………..

இந்த வினாடி அவளுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து மடலாக இம்மடலை எழுதும்  வரமளித்த இறைவனுக்கும், என் தோழியை நான் தேடி தேடி துவண்ட நேரமெல்லாம் கவலைப்படாதே ...கண்டு பிடித்துவிடலாம் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்த என் கணவரிலிருந்து பள்ளித்தோழிகள் அத்தனை பேருக்கும் ….

அவளுக்காக என்னைத் தேடிய அவளுடைய துணைவருக்கும் முதற்கண் என் மனம் நிறைந்த நன்றிகள்!!





வாழ்கையில் இத்தனை வருட காலம் பிரிந்திருக்க நேரும் எந்த உறவும் திரும்ப சந்திக்கும் போது அதே உறவாகவோ அதே உணர்வுகளுடனும், அன்புடனுமோ இருக்குமா என்பது சந்தேகம் தான்.. ஆனால் தோழமை என்பது எப்போது சந்தித்தாலும் அதே கனத்துடன் தான் இருக்கும் என்பதை இந்த பிரிவும் சந்திப்பும் நிரூபித்திருக்கிறது எனக்கு. 


இத்தனை காலத்தின் பின் பேச சந்தர்ப்பம் கிடைத்த போதும் கூட தயக்கமாகவே இருந்தது அவளுடன் பேச….அப்போது எப்படி இருந்தாளோ அவளை தான் இப்போதும் என் மனதில் வைத்திருக்கிறேன். அதே அவளாக தான் இப்போதும் அவள் என்னோடு பேசுவாளா பழகுவாளா என்ற தயக்கம் எனக்குள் இருந்தது. சுவாரஸ்யமில்லாமல் சுரத்தே இல்லாமல் நீயா எப்பிடி இருக்கிறாய் என்ற கேள்வியுடன் அவள் உரையாடல் இருக்குமோ என்ற கவலை இருந்தது….




ஆனால் இரவு முழுவதும் எனது தொலை பேசி அழைப்புக்காக தலையணக்கு பக்கத்தில் அலை பேசியை வைத்துக் கொண்டிருந்த அவளும் சரி, எப்போது விடியும் அவளுடன் பேசலாம் என்று காத்திருந்து, விடிந்த பின்பும்  கூட  பேச தயங்கிய நானும்…… பிரிந்தவர் மீண்டு சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி என்ற வரிகள் எல்லாம் அதீத பொய்கள் என்று நினைத்த எனக்கே அப்படி ஒரு நிமிடங்களை அனுபவத்தில் தந்த அந்த நிமிடங்களும் ...எனக்கு விளக்கிச் சொல்ல தெரியவில்லை…!


இத்தனை காலம் உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் , என்னால் சந்திக்க முடியாவிட்டாலும் , உலகத்தின் எங்காவது ஒரு மூலையில் நீ நலமாக இருக்க வேண்டும், நல்ல துணைவரும், கொள்ளை கொள்ளும் அன்பான குழந்தைகளுமாய் நீ நிறைவான வாழ்கை வாழ வேண்டும் என்று வாழ்த்துவேன் மனதுக்குள். ஆனால் இன்று என்னுடைய அத்தனை வருட வாழ்த்துகளையும் இந்த ஒரு மடலில் அர்ப்பணிக்கும் திறமையில்லாமல் அதியுன்னதமான கவித்துவமான வார்த்தைகளைத் தேடுகிறேன், 

.

 வித்தியாசமான வாழ்த்துகள், அற்புதமான சொற்தொடர்கள் என்றெல்லாம் சோடனையாக வாழ்த்து எழுத  எனக்கு தெரியாதடி…! மனதில் தோன்றும் உணர்வுகளுக்கு தான்  சரியான வார்த்தைகளை தேடுகிறேன். !!  துயரத்தை , பிரிவை எல்லாம் வர்ணிக்க தெரிந்த எனக்கு உன்னை திரும்பக் கிடைத்த குதூகலத்தை, உன்னோடு பேசக் கிடைத்த மகிழ்ச்சியை வர்ணிக்க தெரியவில்லை.


என்றைக்கும் நீ இதே  மகிழ்வுடனும், புன்னகை மாறாத முகத்துடனும் சந்தோசமாக இருக்க வேண்டும். தளும்பலற்ற பூரண நிறைகும்பம் போன்ற குடும்ப வாழ்வும், இணைபிரியாத துணையும், ஈடு இணையற்ற மக்களுமாய் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று பல்லாண்டு காலம் நீ நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறோமடி !!


நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்!

தமிழ் பாடும் நல்வார்த்தைகள் யாவும் உனக்கான பாடல்கள்!!

குயில் பாடும் இசையும், கிளி பேசும் மொழியும் உன் கதை சொல்லும்

உயிர்வாழும் பொழுது வரை உன் தோழமையுடன் என் கதை போகும்!!


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தோழி!!


அன்புடன் 

உன் தோழி சாந்தா


Friday, November 13, 2020

அஞ்சல் 9

அஞ்சல் 9 



 அன்புள்ள சிவசோதிக்கு!

நலம் நலமறிய ஆவல்....!

இப்போது தான் இந்த வார்த்தைகளுக்கான வடிவமும் அர்த்தமும் கிடைக்க வழி கிடைத்திருக்கிறது சிவசோதி..
கடைசியில் இத்தனை வருட இடைவெளிக்குப் பின் “எப்பிடியடி இருக்கிறாய் ”என்று உன்னிடமே குசலம் விசாரிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பரந்தன் கிளிநொச்சி என்று ஆராவது பேசினாலே உனது வீட்டு முகவரியையும், உன் குடும்பத்தினரின் பெயரையும் சொல்லி நீ எங்கே இருக்கிறாய் என்று விசாரித்து விசாரித்து , வகை வகையான் தகவல்கள் கிடைத்து, கலங்கி, அழுது, எத்தனை விதமான மன உளைச்சல்களுடன் உழன்று கொண்டிருந்த எனக்கு இன்று உன்னிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நான் உனோடு பேசப் போகிறேன். இது கனவல்ல..உண்மை தான் !!  

 இதுவரை நீயோ நானோ சந்திக்காத முகம் தெரியாத இணைய நண்பர்களிலிருந்து  எனது வாழ்விடப் பகுதியில் என்னுடன் நெருங்கிப் பழகும் தோழிகள் , என்னுடைய உறவினர் என்று பலருக்கும் உன்னைப் பற்றி தெரியும் இந்த மடல்கள் மூலமாயும், என்னுடைய விசாரிப்புகளாலும்,.,,! என் கணவர் மிகவும் ஆவலாக எமது பள்ளி வாழ்கை கதைகளை எல்லாம் கேட்பார். ஊரில் கிளிநொச்சிக்கு ட்ரெயிலர் ஓடும் சிலரிடம் கூட உன் குடும்பத்தினரின் பெயர்களை சொல்லி அங்கு போய் வரும் போது விசாரிக்க சொல்லியிருக்கிறார்.  யாருமே நான் எதிர்பார்த்த தகவல்களை தரவில்லை. 

கிட்டத்தட்ட 2 கிழமைக்கு முன்னம் நீயும் நானும் சேர்ந்து எடுத்த படம் கேசா மூலம் உலகம் சுற்றி கடைசியில் எனக்கு கிடைத்தது. இன்று குமுதினி மூலம் நீயிருக்கும் இடமும், உனது தொலைபேசி இலக்கமும் கிடைத்திருக்கிறது. 

உன்னை நான் கடைசியாக பார்த்தது எனது அம்மம்மாவின் மரணச்சடங்கின் போது, 1983, ஜூலை 10ம் திகதி. அன்றைக்கு பின் உன்னை திரும்ப சந்திக்கும் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை., இந்த வினாடி வரை...அதாவது 37 வருட நீண்ட  வாழ்கையின் என் பக்கத்து அத்தியாயங்களில் உனக்கு சொல்லவென்று நிறைய கதைகள் இருக்கின்றன.. அதே போல் உன்னிடமும் இருக்கும்..ஆனால்  முன்பு போல் சகலதும் பகிர்ந்து கொள்ளும் உன்னுடைய நெருங்கிய தோழியின் இடத்தில் தான் நான் இன்னமும் இருக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. 

வாழ்கையின் திருப்பு முனைகள் என்னை நிறையவே வீழ்த்தி, எழுப்பி, தத்தளிக்க வைத்து நடக்கவிட்டிருக்கின்றன. அதே போல் உன்னுடைய முனைகளிலும் பல திருப்பங்கள் நேர்ந்திருக்கலாம். சொல்லிப் பரிமாற வேண்டிய நெருக்கமான சூழலிலிருந்து நான் மிகவும் தொலைவில் போயிருக்கக் கூடும். 

 பள்ளிப் பருவ வாழ்கையிலிருந்து திருமண வாழ்கைக்குள் திணிக்கப்பட்ட பின் பெண்களின் ப்ழைய தோழமைகள் பெரும்பாலும்  நினைவு பொதிகளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டுவிடுகிறது. ஆண்கள் பழைய தோழர்களுடன் தொடர்பிலிருப்பது போல் பெண்களால் முடிவதில்லை. வாழ்கையில் எத்தனை பெரிய நல்ல கணவன் கிடைத்தாலும் சரி, நினைத்தது போல் வாழ்கை அமைந்தாலும் சரி திருமணத்தின் பின்னாலான வாழ்கையிலிருந்து பள்ளித் தோழமைகள்  தொலைவில் வைக்கப்படுவது என்னவோ வலி மிகுந்த யதார்த்தம்.  

இலேசான சிறகுகளுடன் பறந்து திரிந்த பறவைகளின் இறகுகளில் பாரங்களை கட்டி விட்டு பெற்றவர்களும் சொந்தங்களும் தள்ளி நின்று வேவு பார்க்கும் வாழ்கையில் அடியெடுத்து வைத்த பின் என் வாழ்கை , என் கணவன், என் பிள்ளைகள், வேலை வெட்டி சமையல் என்று வாகனத்தின் சாரதி இடத்தில் நான் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்தலை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்கிறோமோ என்று அடிக்கடி தோன்றும்... நமது வாழ்கை என்றான பின் எனது நட்பு எனது தோழி எல்லாம் எப்படி புகாருக்குள் மறந்து போன நிலவுகளாகின்றன என்று புரியவில்லை. 

அதே சூழலில் நீயும் சிக்குண்டிருக்கலாம்.  காலச் சுழல் எல்லாவற்றையும் தள்ளி பெருஞ்சுழிக்குள் நீ அமிழ்ந்து போயிருக்கலாம். என்றாலும் என்றாவது ஒரு வினாடி என் நினைவு வந்து போயிருக்காதா என்ற நப்பாசை  வராமல் இல்லை..! அன்று கேசாவிடம் கேட்டதை தான் உன்னிடமும் கேட்க ஆவலாக இருக்கிறது....என்னை நீ தேடினாயா??  தேடுமளவுக்கு எனது தோழமை உனக்கு முக்கியத்துவமாயிருந்ததா ?? நான் நினைவிலிருந்தேனா?? இப்படி எத்தனையோ கேள்விகள் கொட்டிக்கிடக்கின்றது .

நாளைக்கு உன்னுடன் தொலை பேசியில் பேசப் போகிறேன் என்ற கட்டத்திற்கு வந்திருக்கிறேன். இருக்கிறாயா இல்லையா என்ற என்னுடைய துடிப்புகளுக்கு விடை கிடைத்து உன்னுடைய இருப்பும், உனது பிள்ளைகளுடன் நீ நிற்கும் படங்களும், உன் தொடர்பு எண்ணும் கையில் கிடைத்த வினாடியிலிருந்து பிரம்மை பிடித்து  ஒருவிதமான உறை நிலையில் என் உணர்வுகள் தேங்கி இறுகிப் போயிருக்கின்றன.  

இந்தா சாந்தா உன் தோழியின் படங்கள்....இதோ அவளுடைய போன் நம்பர்... என்று குமுதினி போட்டிருந்த  எழுத்துகளை இப்பவும் நம்ப முடியாமல் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய குரலையாவது கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று இத்தனை வருடங்கள் நான் காத்திருந்ததற்கு இன்றைக்கு வடிகாலாக தேவதை போல் குமுதினி வந்து உன்னைப் பற்றிய விபரங்களை எனக்கு தந்திருக்கிறாள். உன்னை பார்க்காமலே உன்னுடன் பேசாமலே செத்துப் போய்விடுவேனோ என்று கூட அடிக்கடி பயந்திருக்கிறேன்.. ஆனால் நாளைக்கு உன் குரலை கேட்கலாம். உன்னோடு பேசலாம். 1983 ஜூலைக்கு பின்னாலிருந்து இன்று வரை நடந்தவற்றை எல்லாம் உன்னிடம் சொல்லிக் கொட்டலாம்....இல்லையா?  அல்லது எதுவுமே சொல்ல முடியாமல் விக்கித்து போவேனோ? அல்லது போனே எடுக்காமல் இருந்துவிடுவேனோ....?? எதையும் இந்த வினாடி என்னால் அறுதியாக சொல்ல முடியவில்லை.

இனிமேல் இந்தக் கடிதங்களை எழுத வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கும் போது மனதுக்குள் கொஞ்சம் அழுத்தமாக தான் இருக்கிறது.

யாருக்கு தெரியும்....திரும்பவும்...தொடர வேண்டிய சூழல் ஏதும் நிகழுமோ என்னவோ...!!

விடியட்டும்.....!!!

அன்புடன்

நான்!