அஞ்சல் 9
நலம் நலமறிய ஆவல்....!
கிட்டத்தட்ட 2 கிழமைக்கு முன்னம் நீயும் நானும் சேர்ந்து எடுத்த படம் கேசா மூலம் உலகம் சுற்றி கடைசியில் எனக்கு கிடைத்தது. இன்று குமுதினி மூலம் நீயிருக்கும் இடமும், உனது தொலைபேசி இலக்கமும் கிடைத்திருக்கிறது.
உன்னை நான் கடைசியாக பார்த்தது எனது அம்மம்மாவின் மரணச்சடங்கின் போது, 1983, ஜூலை 10ம் திகதி. அன்றைக்கு பின் உன்னை திரும்ப சந்திக்கும் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை., இந்த வினாடி வரை...அதாவது 37 வருட நீண்ட வாழ்கையின் என் பக்கத்து அத்தியாயங்களில் உனக்கு சொல்லவென்று நிறைய கதைகள் இருக்கின்றன.. அதே போல் உன்னிடமும் இருக்கும்..ஆனால் முன்பு போல் சகலதும் பகிர்ந்து கொள்ளும் உன்னுடைய நெருங்கிய தோழியின் இடத்தில் தான் நான் இன்னமும் இருக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை.
வாழ்கையின் திருப்பு முனைகள் என்னை நிறையவே வீழ்த்தி, எழுப்பி, தத்தளிக்க வைத்து நடக்கவிட்டிருக்கின்றன. அதே போல் உன்னுடைய முனைகளிலும் பல திருப்பங்கள் நேர்ந்திருக்கலாம். சொல்லிப் பரிமாற வேண்டிய நெருக்கமான சூழலிலிருந்து நான் மிகவும் தொலைவில் போயிருக்கக் கூடும்.
பள்ளிப் பருவ வாழ்கையிலிருந்து திருமண வாழ்கைக்குள் திணிக்கப்பட்ட பின் பெண்களின் ப்ழைய தோழமைகள் பெரும்பாலும் நினைவு பொதிகளாக மட்டுமே பாதுகாக்கப்பட்டுவிடுகிறது. ஆண்கள் பழைய தோழர்களுடன் தொடர்பிலிருப்பது போல் பெண்களால் முடிவதில்லை. வாழ்கையில் எத்தனை பெரிய நல்ல கணவன் கிடைத்தாலும் சரி, நினைத்தது போல் வாழ்கை அமைந்தாலும் சரி திருமணத்தின் பின்னாலான வாழ்கையிலிருந்து பள்ளித் தோழமைகள் தொலைவில் வைக்கப்படுவது என்னவோ வலி மிகுந்த யதார்த்தம்.
இலேசான சிறகுகளுடன் பறந்து திரிந்த பறவைகளின் இறகுகளில் பாரங்களை கட்டி விட்டு பெற்றவர்களும் சொந்தங்களும் தள்ளி நின்று வேவு பார்க்கும் வாழ்கையில் அடியெடுத்து வைத்த பின் என் வாழ்கை , என் கணவன், என் பிள்ளைகள், வேலை வெட்டி சமையல் என்று வாகனத்தின் சாரதி இடத்தில் நான் தான் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயப்படுத்தலை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்கிறோமோ என்று அடிக்கடி தோன்றும்... நமது வாழ்கை என்றான பின் எனது நட்பு எனது தோழி எல்லாம் எப்படி புகாருக்குள் மறந்து போன நிலவுகளாகின்றன என்று புரியவில்லை.
அதே சூழலில் நீயும் சிக்குண்டிருக்கலாம். காலச் சுழல் எல்லாவற்றையும் தள்ளி பெருஞ்சுழிக்குள் நீ அமிழ்ந்து போயிருக்கலாம். என்றாலும் என்றாவது ஒரு வினாடி என் நினைவு வந்து போயிருக்காதா என்ற நப்பாசை வராமல் இல்லை..! அன்று கேசாவிடம் கேட்டதை தான் உன்னிடமும் கேட்க ஆவலாக இருக்கிறது....என்னை நீ தேடினாயா?? தேடுமளவுக்கு எனது தோழமை உனக்கு முக்கியத்துவமாயிருந்ததா ?? நான் நினைவிலிருந்தேனா?? இப்படி எத்தனையோ கேள்விகள் கொட்டிக்கிடக்கின்றது .
நாளைக்கு உன்னுடன் தொலை பேசியில் பேசப் போகிறேன் என்ற கட்டத்திற்கு வந்திருக்கிறேன். இருக்கிறாயா இல்லையா என்ற என்னுடைய துடிப்புகளுக்கு விடை கிடைத்து உன்னுடைய இருப்பும், உனது பிள்ளைகளுடன் நீ நிற்கும் படங்களும், உன் தொடர்பு எண்ணும் கையில் கிடைத்த வினாடியிலிருந்து பிரம்மை பிடித்து ஒருவிதமான உறை நிலையில் என் உணர்வுகள் தேங்கி இறுகிப் போயிருக்கின்றன.
இந்தா சாந்தா உன் தோழியின் படங்கள்....இதோ அவளுடைய போன் நம்பர்... என்று குமுதினி போட்டிருந்த எழுத்துகளை இப்பவும் நம்ப முடியாமல் திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னுடைய குரலையாவது கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா என்று இத்தனை வருடங்கள் நான் காத்திருந்ததற்கு இன்றைக்கு வடிகாலாக தேவதை போல் குமுதினி வந்து உன்னைப் பற்றிய விபரங்களை எனக்கு தந்திருக்கிறாள். உன்னை பார்க்காமலே உன்னுடன் பேசாமலே செத்துப் போய்விடுவேனோ என்று கூட அடிக்கடி பயந்திருக்கிறேன்.. ஆனால் நாளைக்கு உன் குரலை கேட்கலாம். உன்னோடு பேசலாம். 1983 ஜூலைக்கு பின்னாலிருந்து இன்று வரை நடந்தவற்றை எல்லாம் உன்னிடம் சொல்லிக் கொட்டலாம்....இல்லையா? அல்லது எதுவுமே சொல்ல முடியாமல் விக்கித்து போவேனோ? அல்லது போனே எடுக்காமல் இருந்துவிடுவேனோ....?? எதையும் இந்த வினாடி என்னால் அறுதியாக சொல்ல முடியவில்லை.
இனிமேல் இந்தக் கடிதங்களை எழுத வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கும் போது மனதுக்குள் கொஞ்சம் அழுத்தமாக தான் இருக்கிறது.
யாருக்கு தெரியும்....திரும்பவும்...தொடர வேண்டிய சூழல் ஏதும் நிகழுமோ என்னவோ...!!
விடியட்டும்.....!!!
அன்புடன்
நான்!

No comments:
Post a Comment