Monday, July 25, 2016

அஞ்சல் - 8

அன்புள்ள சிவசோதி!
எப்படியிருக்கிறாய்? முன்பெல்லாம் கடிதம் எழுதும் போது உன்னுடைய இருத்தலை நிகழ்தகவாக வைத்து தான் எழுதியிருக்கிறேன்.
ஆனால் இன்று நீ உயிருடன் இருப்பதை வசந்தகுமாரி உறுதிபடுத்திய சந்தோசத்துடனும் , வார்த்தைகளால் விளக்கப்படுத்தவியலாத உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் இந்த கடிதத்தை உனக்கு  எழுதுகிறேன்.

நான் இன்று மிக மிக அதியுச்சமான முனைப்பில்  ஏறி நின்று வானத்தை தொட்டுப் பார்த்தது போன்ற களிப்பில்  இருக்கிறேன் நீ இருக்கிறாய் என்ற அந்த ஒரு வரி தகவல் கிடைத்ததில்..அதுவே போதுமடி..!

இன்று 83ம் ஆண்டுக்கு  பிறகு வசந்தகுமாரியுடனும் அனுஷியா இராஜசிங்கத்துடனும் போனில் கதைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது...!
வாற மாதம் கனடாவுக்கு இலண்டனிலிருந்து வசந்தகுமாரியும் அனுஷியா இராஜசிங்கமும் வருகினம். கனடாவிலிருக்கும் பள்ளித் தோழிகளை தொடர்பு கொண்ட போது என்னை  விசாரித்து தேவறூபினி மூலம் எனது நம்பர் கிடைத்து...வசந்தகுமாரியும் அனுஷியா இராஜசிங்கமும் போனில் கதைத்தார்கள் சிவசோதி! கனடாவில் நிறைய பிளானோடு ரீயூனியன் சந்திப்புக்கு வரும் வ்சந்தகுமாரி என்னுடைய பேசிய அந்த தருணத்திலேயே கனடா பிளானை தலை கீழாக மாற்றிவிட்டு கனடா வந்திறங்கும் அன்றே இங்கே என்னிடம் வர பஸ் எடுக்கப் போகிறாள்...

அவர்கள் இருவரும் சாந்த கௌரி, சாந்த கௌரி என்று மாத்தி மாத்தி கூப்பிடத் தான் எனக்கே என் பெயர் ஞாபகத்துக்கு வந்தமாதிரி இருந்தது சிவசோதி. இத்தனை காலமாக சுவாதி, சுவாதி என்று அமிழ்ந்து போன என்னுடைய சுயம் பழைய படி சுண்டிக்குளி மாணவி சாந்தகௌரியாக மாற்றிவிட்டிருக்கிறது..
“அடியேய் சாந்தகௌரி....எத்தினை வருசமாடி உன்னை தேடுறன்...எனக்கு கனடா புரோகிராம் பெரிய விசயமே இல்லை...உன்னை பாக்க வேணுமடி...பழையபடி எங்கட அந்த ப்பப்ப சங்கேத பாஷைல கதைக்க வேணுமடி...நீ கவலைப்படாதையடி...சிவசோதியை கண்டு பிடிச்சு உன்னோட கதைக்க வைக்கிறது என்ர பொறுப்படி...அவளை நான் ஒரு 5 வருசத்துக்கு முன்னம் சந்திச்சனானடி...அப்பிடியே வடிவா அப்ப பார்த்த மாதிரியே இருக்கிறாள் . 4 பிள்ளையளாமடி”  வசந்தகுமாரி சொல்ல சொல்ல மனதுக்குள் நான் அழுது கொண்டிருந்தேன்..உன்னைப் பற்றி இப்படி எவர் எவரிடமோ எல்லாம் விசாரித்து விசாரித்து சின்ன சின்ன தகவல்களாக ஒன்றுக்கு ஒன்று ஒட்டிப் பொருத்திப் பார்க்க முடியாத மர்மக் கதையாக போய்க் கொண்டிருக்கிறது என்னுடைய தேடுதல். ஆனால் ஒரு பெரிய நிம்மதி...சந்தோஷம்...5 வருசத்துக்கு முன்னால் உன்னை வசந்தகுமாரி சந்தித்திருக்கிறாள் என்றால்....இந்தியன் ஆமியின் ஷெல் அடியில் உனக்கு ஏதும் ஆகவில்லை என்பதில்...ஆனால் இன்னொரு பக்கம் சோகம்...ஷெல்லடியில் சின்னையரின் மகளில் ஒருத்தி இறந்தது தெரியும்..ஆனால் மூத்ததா இளையதா எண்டு தெரியாது எண்டு கிடைத்த தகவலின் அடிப்படையில்...நீ இருப்பது நிரூபணமாகிவிட்டதால் இறந்தது உன் தங்கை அல்லவா? :(
கடந்து வந்த வாழ்கை பாதை எத்தனையையோ இழக்கச் செய்திருக்கிறது. புதிதாக எதையெல்லாமோ கிடைக்க வழி செய்திருக்கிறது. ஆனாலும் மனம் மட்டும் பழையவற்றையும், இழந்தவற்றையும் சுற்றியே , திரும்பக் கிடைக்காது என்று அறிவு சொல்லிக் கொடுத்தாலும் தேடிக்கொண்டிருக்க வைக்கிறது.
இண்டைக்கு இந்த கடிதத்தை உனக்கு எழுத வசந்தகுமாரி மட்டும் காரணமல்ல. ஃபேஸ்புக்கில் நண்பராக இருக்கும் ராஜன் சபாபதி ஐயாவும் தான்...

சில குறிப்பிட்ட பாடல்கள் மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கும்; இது என்ன பாட்டு? இதெல்லாம் ஒரு பாட்டா என்று சிலர் கேட்கவும் செய்வார்கள். ஆனால் அது நமக்கு மிகவும் பிடித்திருக்கும்..எத்தனை தரம் கேட்டாலும் இன்னொரு தடவை கேட்க வேண்டும் போல் இருக்கும்.
சில பாடல்கள் எமது பழைய நாட்களின் நினைவுப் பக்கங்களிலிடையே சொருகி வைத்துவிட்ட  Book mark ஆக  இருக்கும்...அப்படியொரு Book mark ஐ இன்று ராஜன் சபாபதி ஐயா என்னுடைய நினைவிலிருந்து இழுத்துவிட்டார் சிவசோதி.
”நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை- உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை.”
எனக்கு இந்தப் பாடல் ஒரு முக்கியமான Book mark ஏன் என்றால் இந்தப் பாடலை நீ பாடிக் கொண்டிருந்த போது தான் நான் உன்னை முதல் முதல் பார்த்தது.  என்னுடைய வாழ்கையில் எத்தனையோ பேரை  சந்தித்து இருந்தாலும் நீயும் இன்னும் ஒரு சிலரும் தான் என்னுடைய ஞாபக நூலகத்தில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உனக்கு இந்தப் பாட்டோ அல்லது அன்றைய தினமோ நினைவுக்குள் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை சிவசோதி. என்னையிட்ட உனக்கான முதல் நினைவு அதாவது உன்னுடைய ஞாபகங்களின் நூலகத்தில் என்னுடைய  புத்தகம் எத்தனை பக்கங்களுடன் அதில் எங்கே உன்னுடைய  Book markஐ சொருகி வைத்திருக்கிறாய் என்று உன்னிடம் கேட்க ஆசையாக இருக்கிறது. சாந்தகௌரி என்ற ஒரு ஒல்லியான  புத்தகம் பக்கங்கள் கிழிக்கப்படாமலோ அல்லது செல்லரித்துப் போகாமலோ பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்க விருப்பப்படுகிறேன்.
உனக்கு தாரிணியை நினைவிருக்கிறதா சிவசோதி? எனக்கு அவளையும் மறக்க முடியாது. அவள் ஒன்றும் எனக்கு உற்ற தோழி அல்ல. வகுப்பில் சக மாணவி தான். ஆனால் அவள் தான் என்னுடைய கவனத்தை உன் பக்கம் திரும்ப வைத்தவள். 
அந்த வருடம் எனக்குக் கிடைத்த வகுப்பும் சரி, ஆசிரியர்களும் சரி எனக்கு முதலில் பிடிக்கவில்லை. வருடக் கணக்காக 2ம் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை ஒரே கூட்டத்தினருடன் இருந்து படித்த எனக்கு இண்ட்அ வருடம் அந்தக் கூட்டத்திலிருந்து பிய்த்து எறியப்பட்டது போல் உங்களுடைய வகுப்பில் என்னை எறிந்துவிட்டார்கள் என்ற உணர்வில் ஒரு வாரமாக வேண்டா வெறுப்பாகவே பாடசாலைக்கு வந்து கொண்டிருந்தேன். 

அந்த ஒரு வாரத்தில் வகுப்பில் நடந்த எந்த பாடத்திலும் எனக்கு ஈர்ப்பே வரவில்லை.. எனது பழைய வகுப்பு தோழிகள் எல்லாரும் இன்னொரு வகுப்பில் இருக்க நான் இங்கு ஒரு தனித்த தீவு போல் அனாதையாக உட்கார்ந்திருப்பதாகவே எனக்கு தோன்றியது. தமிழ் வகுப்பில் கம்பராமாயணம் அப்போது தான் முதல் முதல் தொடங்கியிருந்தது. கௌரி மிஸ் தான் தமிழ் ஆசிரியை. பாடத்தில் கவனம் செலுத்தாத என்னை எழுப்பி வைத்து காரணம் கேட்டார். எனக்கு இந்த வகுப்பு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். அந்த பாடம் முழுக்க என்னை நிற்க சொல்லி பணிஷ்மெண்ட். அதுவும் தொடர்ந்து இரண்டு பீரியட்ஸும் தமிழ் வகுப்பு. இரண்டு வகுப்பிலும் கால் கடுக்க நின்ற போதே கௌரி மிஸ்ஸுடன் மனதுக்குள் சண்டையும் சவாலும் போட்டு தீர்த்துவிட்டேன்.
“இவவுக்கு என்னை பற்றி என்ன தெரியும்? இத்தனை வருசத்தில் எந்த மிஸ் என்னை எழுப்பி எனக்கு பணிஷ்மெண்ட் தந்திருக்கிறா? அதுவும் தமிழ் டீச்சர்ஸ் என்னை தலையில் வைச்சு கொண்ட்டாடுவினம்.. பேச்சு போட்டு கட்டுரை போட்டி என்டு நான் வெண்டு கொண்டு வந்தால் இவ என்னை எழுப்பிவிட்டிருக்கிறாவா? இருக்கட்டும்..அடுத்த சோதினை வரட்டும்...சாந்தகௌரி யார் எண்டு இவவுக்கு காட்டுறன்” 
அன்று எதிர்பார்த்தமாதிரியே  கம்ப இராமாயணத்தின் “முதல் பாடம்...மாடு நின்ற அம்மணி மலர் சோலை மருவி” பாடல் பொழிப்புரை, விளக்கம் அர்த்தம் எல்லாவற்றிலும் அடுத்த கிழமை டெஸ்ட் எண்ட்டாச்சு. அன்றிலிருந்து அடுத்த கிழமை வரை கம்ப இராமாயணமும் கையும் தான்...ஆனால் வகுப்பில் பாடத்திட்டத்துக்கு தந்த இராமாயணத்தை நான் தொடவே இல்லை. பண்டிதரான பெரியப்பாவிடம் போய் வகுப்பில் நடந்ததை சொல்லி அவரிடமிருந்த கம்பராமாயணத்தை வாங்கி , அதிலிருந்த விளக்கம் பொழிப்புரை எல்லாவற்றையும் படித்துவிட்டு பள்ளிக்கு போனேன்,...
வகுப்பில் நுழையும் போதே தாரிணி, விஜித்தா, துஷித்தா, அஜந்தா என்று  ஒரு கூட்டம் உன்னை சுற்றி இருந்தது . அப்ப தான் நீ எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா பாட்டு பாடி முடித்துக் கொண்டிருந்தாய். அந்த மாணவிகளின் கூட்டம் எனக்கு அப்போது பரிச்சயமானவர்களாயிருக்கவில்லை. அதனால் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

ஆரம்பத்தில்
எப்படா இடைவேளை மணி அடிக்கும் எனது பழைய வகுப்பு மாணவிகளுடன் போய் உட்காரலாம் என்று பார்த்துக் கொண்டிருப்பேன்; மணி அடித்ததும் உடனே அவர்களிடம் ஓடிவிடுவேன்.. வழமையாக போன வருடங்களில் என்னோடு இடைவேளைகளையும் , விளையாட்டுகளையும் கழித்த அவர்களுக்கு  என்னுடைய இடத்தை நிரப்ப வேறு மாணவிகள் கிடைத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலும் நான் அந்நியமாக உணர தொடங்கினேன். அப்போது தான் உணர்ந்தேன்  ”அவர்கள்  என்னோடு பொழுது கழிக்கவில்லை...நான் தான் அவர்களுடன் பொழுதைக் கழித்திருக்கிறேன் என்று...
இரண்டு வகுப்பு மாணவிகளுடனும் ஒட்டவியலாமல் தனித்து என்னை நானே ஒதுக்கி கொண்ட அந்த ஒரு வாரத்தில் இந்த வகுப்பில் யாரையும் சிநேகிதியாக நினைத்து உறவாடக் கூடாது...தனித்திருந்து  படிக்க வேணும்...கௌரி மிஸ்ஸுக்கும் என்னை புறந்தள்ளிய பழைய நண்பிகளுக்கும் என்னை நான்  யார் என்று காண்பிக்க வேணும் என்று  காரணமே இல்லாமல் எனக்குள் ஒரு வஞ்சம் புகுந்திருந்தது.
அந்த நேரத்தில் தான்  பள்ளி தொடங்கி  10 நாட்களின் பின்  நீ
ஊரிலிருந்து  வந்திருந்து  சமா வைத்துக் கொண்டிருந்தாய். நான் இருந்த மேசை தாரிணி இருந்த மேசை வரிசைக்கு பக்கத்தில் தாரிணியின் மேசைக்கு அருகில் இருந்தது.
ஒவ்வொருவருக்காகவும் அவரவர் கேட்ட பாடல்களை பாடிக் கொண்டிருந்தாய் போலிருக்கிறது. இப்போது தாரிணியின்  முறை.. அவள் விருப்பப் பாடலாக தான் நீ இந்த  ”நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை - உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை- உன்னை
கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை.”  பாடலை பாடினாய்.
வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் நீ பாடியது மிகவும் இனிமையாகவும் அருமையாகவும் இருந்தது எனக்கு. அதே நேரம் பொறாமையாகவும் இருந்தது. அதுவரை லிட்டரி மீட்டிங்க்ஸில் பாடல்கள் பாடுவது நான் தானே? அதனால் எனக்குள் ஒரு கர்வம்..என்னை விட்டால் இங்க பாட ஆரும் இல்லை என்ற தைரியத்தில் சில வேளைகளில் பாடச் சொல்லிக் அவர்கள் கெஞ்சினாலும் பாட முடியாது என்று பிகு பண்ணிவிட்டு போய்விடுவேன்.. ஆனால் உன்னுடைய குரலைக் கேட்ட அந்த நிமிசத்தில் எனக்கே என் மேல் சைக் என்று வெறுப்பு வந்துவிட்டது சிவசோதி! எத்தனை அழகாக இவ பாடுறா எண்டு தான் எனக்குள் மலைப்பும் பொறாமையும் வந்தது.
பாடசாலை பிரேயர் மணி அடிக்க எல்லாரும் மண்டபத்துக்கு போக எழும்பும் போது தான் மேரி ஜெபறூபி கேட்டா “ இண்டைக்கு கம்ப இராமாயணத்தில் டெஸ்ட் எல்லா? படிச்சீங்களாடி” எண்டு.
அதை யார் படிக்கிறது? ஆரையும் பார்த்து எழுத வேண்டியது தான் எண்டு தாரிணி சொல்ல
ஐயோ நான் படிக்கேலை எண்டு, நானும் படிக்கேலை எண்டு கோரஸாக ஒவ்வொருத்தரா சொல்ல , எல்லாரும் படிக்கேலை  கஷ்டமா இருக்கு எண்டு சொல்லி டைம் கேப்பம் மிஸ்ஸிட்ட என்று இன்னொருத்தி ஐடியா கொடுக்க எனக்கு சீ எண்டு போட்டுது... ஐய்ய..அப்ப நான் மட்டும் தான் மினக்கெட்டு படிச்சிருக்கிறனா என்று எனக்கே என்னைப் பாக்க பரிதாபமாக இருந்தது. ஒன்றுமில்லாத விசயத்துக்கு பண்டிதரிண்ட புத்தகத்தை வாங்கி படிச்சிருக்கிறனே எண்டும் நகைப்பாய் இருந்தது.
“சாந்தகௌரி நீர் படிச்சிட்டீரா?” எண்டு தாரிணி கேட்க “ம்ம்ம்...படிச்சிட்டன்” என்று நான் சொல்லும் போதே சுரத்தில்லை எனக்கு.
நீ சிரித்தாய்....எனக்கு உன் மேல் கோபம் வந்தது. ஆனால் நீ சொன்னாய்” எல்லாரும் படிச்சிட்டு நான் படிக்கேலை எனக்கு ஒண்டும் விளங்கேலை; ஒண்டும் தெரியாது” எண்டு சொல்லுறது தான் சுண்டிக்குளி கேர்ள்ஸின் ஸ்டைல்.. பாவம் இவ அப்படி ஃபஸ் அடிக்காமல் படிச்சத படிச்சன் எண்டு ஒப்புக் கொள்ளுறா...எனக்கு இவவை பிடிச்சிருக்கு”
கன நேரமா நீ சொன்னது தான் எனக்கு மனதுக்குள் சந்தோசத்தைக் குடுத்தது. அந்த நிமிசத்தில் இருந்து நீயும் நீ பாடிய பாட்டும்  உன்னை அந்த பாட்டை பாடச் சொல்லி ஆக்கினைப்படுத்திய தாரிணியும்  என் ஞாபக நூலகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் உன் புத்தகத்தின் Book mark காகிவிட்டது.
எல்லாரும் என்ன கெஞ்சியும் கௌரி மிஸ் பொருட்படுத்தாமல் அன்றைக்கு டெஸ்ட் நடத்தியதும், அந்த சோதினையில் எனக்கு 97 மார்க்ஸ். தாரிணிக்கு 20 மார்க்ஸ். சோதினையை திருத்தி மார்க்ஸ் எல்லாம் போட்டு விட்டு அடுத்த நாள் தமிழ் வகுப்புக்குள் நுழையும் போதே கவனித்தேன் கௌரி மிஸ் கையில் என்னுடைய கொப்பி தான் இருந்தது. “ஆர் அது சாந்தகௌரி? “ என்று கேட்டுக் கொண்டு தான் வந்தா... எழும்பி நிண்டன்..  அவவிண்ட முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி அல்லது வியப்பு...”நல்லா செய்திருக்கிறீர்..பிறகேன் சாகக் குடுத்த மாதிரி வகுப்பில கவனம் எடுக்காமல் இருக்கிறீர்? ஒரு கிளாஸில இருந்து இன்னொரு கிளாஸுக்கு மாறிட்டால் என்ன? வாழ்கையே முடிஞ்சு போட்டுதா? இங்கயும் ஃபிரண்ட்ஸ் பிடிக்கலாம்.ட்ரை பண்ணும்” என்று அவ சொன்னது அட்வைஸா அல்லது படிக்கிற பிள்ளையை சோர்வான நேரத்தில் பணிஷ் பண்ணிட்டன் என்ற குற்ற உணர்வில் சொல்லப்பட்ட ஆதரவான வார்த்தைகளா...எதுவோ.....ஆனால் அது சரியான வார்த்தைகளாக தான் அமைந்தது எனக்கு...
எனக்கும் ஒரு சிநேகிதி கிடைத்தாள் ..அந்த வகுப்பில்...சிவசோதி எண்டு...!

அன்று எனக்குக் கிடைத்த சிவசோதியின் அறிமுகமும்அவளால் இன்னும் ஆறு சிநேகிதிகள் கேசா, வசந்தகுமாரி,சுகந்தி , துஷிதா, அஜந்தா, அனுஷியா எண்டு கிடைத்த சம்பவங்களும், எங்கள் இருவரையும் உட்கார வைத்து பாட்டு பாடச் சொல்லி இரசித்த தாரிணியுமாய்....அதன் பின் அந்த 2 வருட பாடசாலை வாழ்கை இனிமையாகவே அமைந்தது. இடையில் தாரிணி இறந்து போன அதிர்வுடன் 10ம் வகுப்பு சோதனை எழுதிய கையுடன் அவரவர் பிரிந்துவிட்டாலும் நீ என்னுடனேயே   இருந்தாய். வசந்தகுமாரியும் தொட்ர்ந்து வந்தாள். பின்பு தான் வாழ்கை நம்மை  சிதிலமாக்கிவிட்டது...

இவர்களை எல்லாம் நான் இன்றுவரை முயற்சி எடுத்து தேடியதேயில்லை சிவசோதி! உன்னை மட்டும் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் ஒரு சிலர் என்னையும் ஒரு தோழியாக நினைத்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் போது மனது சந்தோஷிக்கத் தான் செய்தது. என்னைக் கூட நினைவில் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்களே என்று.....அதில் ரஜனி ஒருத்தி...! ரமா என்று இன்னொருத்தி..!
1983ம் ஆண்டு ஜூலை 11ம் திகதி என்னுடைய அம்மம்மாவின் செத்தவீட்டுக்கு வந்துவிட்டு போனாய். அதன் பின் உன்னை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் இன்றுவரை கிடைக்கவில்லை.  இலக்கம் 6 . தர்மபுரம் வீதி, பரந்தன் என்ற அந்த மூன்று வரி முகவரியுடனும் உன்னுடையதும் உன் குடும்பத்தாரின் அடையாளங்களையும் மட்டும் வைத்துக் கொண்டு இத்தனை வருடங்களாக போவோர் வருவோரிடமெல்லாம் விசாரிக்கிறேன்.  நீ கிடைக்கவில்லை..! எனக்குள் இப்ப சில நாட்களாகவே ஒரு கேள்வி அரிக்கத் தொடங்கியிருக்கிறது...” என்னை நீ இத்தனை வருடத்தில் ஒரு தடவையாவது தேடியிருப்பியா?” என்று..! 


இதுவும் உன்னுடைய வரிகள் தான் ..இப்பவும் இதே பாடலை நீ பாடுகிறாயா?
“எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா? - என்னை
விட்டு உன் நினைவை பிரிக்க முடியுமா?” 
அன்புடன்
நான்.

No comments:

Post a Comment