நலம்! நீயும் மற்ற என்னுடைய தோழிகள் அனைவரும் என்றைக்கும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகின்றேன்.
இந்த வருடம் ஆகஸ்ட் 3ம் திகதி தான் International Friendship Day. அதற்கு தகுந்தாற் போல் எங்களை வைத்து ஒரு குறுங்கதை அல்லது சிறுகதை எழுதியிருக்கிறேன். அதை இங்கே கீழே இணைத்திருக்கிறேன்.
அதன் முடிவு உனக்கோ மற்றவர்களுக்கோ பிடிக்காமல் இருக்கலாம். என்னுடைய கற்பனையில் இந்தக் கதைக்கு இப்பிடி முடிவு இருந்தால் எப்படி இருக்கும் என்று அறிய ஆவல். அதனால் இதை நான் இன்று பதிவேற்றப் போகிறேன். எனக்கு தெரியும் என்னுடைய கதையின் முடிவை மாற்றி எழுதும் வல்லமை கேசா ஒருத்திக்கு தான் இருக்கிறது. சூழலும் நேரமும் கிடைத்து அவள் எழுதினாள் என்றால் எனக்கு சந்தோசம். பார்ப்போம் அப்படி அவள் எழுதினாளென்றால் என்ன முடிவு எழுதுகிறாள் என்று..
உனது தோழி.
வாழ்கையில் எத்தனையோ கடந்து வந்துவிட்டோம்…! துள்ளித்திரிந்த காலங்களில் அறிமுகமாகி, துளிர்விட்ட தனி உலகத்தை நமக்கென்று படைத்துக் கொண்டிருந்த முனைப்பில் காணாமல் போய், இப்போது திரும்பவும் துள்ளவியலாத கடை நேரத்தில் சந்தித்திருக்கிறோம்..!
எத்தனையோ இழந்திருக்கிறேன்..எவை எவையோ என்னை விட்டுப் போயிருக்கின்றன. ஆனால் கிடைத்த நட்புகள் எதுவும் என்னைக் கைவிடவில்லை. கடந்து போன காலங்களில் கூட ஒருத்தரை ஒருத்தர் நினைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு சம்பவமோ புகைப்படமோ நினைவுகளோ நம்மிடம் இருந்தது.
சந்திக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ஆனால் சந்தித்த பின் பிரிய வேண்டுமென்ற நினைப்பு அறுக்கிறது. ஆண்களின் நட்பு நினைத்த நேரத்தில் சந்திக்கவும் , அளவளாவவும், நிச்சயம் அடுத்த தடவை சந்திக்கலாம் என்ற தெளிவோடு திரும்பவும் தொடரும். ஆனால் பெண்களின் உண்மையான நட்பு பள்ளிக் காலங்களோடு முடிந்து போய்விடும். ஆண்களைப் போல் அடிக்கடி பழைய நட்புகளை சந்திக்கும் வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்காது.
கணவன் என்ற ஒரு உறவு வர முன்பே சந்தித்த தோழி, வாழ்கையின் ஒவ்வொரு சின்ன சின்ன நிகழ்வுகளையும் , கனவுகளையும், விசயங்களையும் பகிர்ந்து கொண்ட , சொல்லப் போனால் இரத்த உறவுகளாலும், கணவர் குழந்தைகளாலும் கூட புரிய முடியாத எமது மனநிலையை ஒரு பார்வையில் புரிந்து கொள்ளுமளவுக்கு உயிராக இருக்கும் சிநேகிதி , எந்தவொரு பிரதிபலனும் எதிர்பாராமல் தினமும் சுற்றித்திரிந்த நண்பி.. அவளுடைய நட்பு பள்ளிப் படிப்போடு மூட்டை கட்டப்பட்டு , மனதின் ஞாபகக் கலங்களுக்குள் பத்திரமாக புதைக்கப்பட்டுவிடுவாள் நினைவுகளாக.
அவ்வப்போது பிறந்தநாளுக்கும், விசேச தினங்களுக்கும் மறக்காமல் வாழ்த்து அட்டையும் கடிதமுமாக ஊசலாடிக் கொண்டிருக்கும் அந்த பாலம் இருவரின் திருமணத்துக்கு பின் அப்படியே தொய்ந்து போய்விடும் ..நட்பு என்ற பயணிப்பை இருவரும் முற்றாக நிறுத்திவிட்டு வேறு பாதைகளில் அவர்கள் பயணம் தொடங்கிய புள்ளிகளில் சிநேகிதிகள் எனப்பட்டவர்கள் நினைவாலே செதுக்கபப்ட்ட சிலைகளாகிவிடுவார்கள்.
அதில் முழுப் பிழையும் பெண்களிடம் தான் இருக்கிறது. திருமணமென்றான பின் என்னமோ எல்லாமும் , குடும்பத்தினர் எல்லாரும் நம்மைத் தான் நம்பியிருக்கிறார்களென்று ஒரு தேவையில்லாத முட்கிரீடத்தை நமக்கு நாமே சூட்டிக் கொள்கிறோம். அவர்களை மட்டும் கவனிப்பது அவர்களுக்கு பணிவிடை செய்வது, அவர்களை முகம் நோகாமல் , மனம் கோணாமல் பார்த்துக் கொள்ள நம்மை விட்டால் வேறு யாருமே இல்லை என்று நாமும் நம்பி அவர்களையும் மூளைச்சலவை செய்து எமக்கான எதையும் நாம் அனுபவிக்காமல் , இரசிக்காமல் , பொழுது செலவிடாமல் நம்மை நாமே முடக்கிவிட்டு , நமக்கு நாமே சுமையாக தெரிகிறோம். திரிகிறோம். எமது நட்புகளை நாமே தொலைக்கிறோம். தொடர்புகளை கழற்றிவிட்டு செக்கு மாடுகளாக உலாவர நம்மை நாம் தான் நியமித்துக் கொள்கிறோம். நமக்காக எப்போதாவது நேரம் ஒதுக்கிறோமா என்று சிந்தித்துப் பார்த்தால் பெரும்பாலான பெண்களின் உள்மனம் ஓலமிட்டு அழும்.
பழைய தோழிகளை சந்திப்பது கூட கணவரின் அனுமதியுடனோ அல்லது அவருடனோ தான் இருக்கும். சந்தித்தால் கூட இத்தனை மணிக்குள் வீட்டுக்கு போக வேணும், பிள்ளைகளுக்கு சமைக்க வேணும், கணவன் வரும் நேரம் என்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். பள்ளிக்காலங்களில் சுற்றித்திரிந்த அந்த சுதந்திரம் இருக்காது.
சந்திக்க வரும் போது கூட புருசன் கூடவே வர வேண்டுமா என்று நான் அவளையோ அவள் என்னையோ கேட்க முடியாது..! என்னை விட்டிட்டு அவரால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது என்று பச்சைப் பொய்யை உற்ற தோழியிடமே சொல்லி அசடு வழிய வேண்டியிருக்கும் . அவர்களுக்கும் அது புரியும் ஏனெனில் அவர்களும் அதே சூழ்நிலைக் கைதிகள் தானே ?? ,,ஆனாலும் அவர்களில் ஓரிருவர் அந்த நிலையை சட்டை செய்யாதவர்களாகவோ அல்லது அதெல்லாம் வீட்ட போய் சமாளிக்கலாம் என்ற திடகாத்திரமான நிலைப்பாடுள்ளவர்களாக இருப்பார்களெனில் தங்களைப் போல் இவளும் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்வார்கள். உரிமை என்பதும் , கடமை என்பதும் , வாழ்கை என்பதும் நட்புக்கோ , தோழிக்கோ இல்லை என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியாது. நாம் மூன்றாம் இடத்திலோ அல்லது அதற்கும் கீழேயோ தள்ளப்பட்டவர்கள் தான் என்பதை தனது தோழிக்கு திருமணம் நடந்து முடிந்த பின் தான் ஒவ்வொரு பெண்ணும் உணர்வாள்.
என் தோழி சந்தோசமாக இருக்கிறாள், என் தோழி வாழ்கையில் நல்ல நிலையில் இருக்கிறாள் , என் தோழி உயர்ந்திருக்கிறாள் என்ற பூரிப்புடன் பார்ப்பதும், அல்லது அதற்கு நேர்மாறான வாழ்கையை வாழும் ஒரு தோழியைப் பார்த்து மனம் புழுங்கி அழுவதும் தான் நட்பு என்றளவில் தான் பெண்களின் நட்பு இருக்கும்.
அத்தைகைய சூழலில் தான் அவளது நட்பு வட்டமும் இருக்கிறது. அடிக்கடி தொலை பேசியில் நலம் விசாரிக்க முடிகிறது. கவலைகளையும் சந்தோஷங்களையும் , கிண்டல் கேலிகளையும் பகிரமுடிகிறது. ஆனாலும் ஒரு எல்லைக்குள் நின்று கொள்கிறோம். ஒருத்தி இலங்கையில், இன்னொருத்தி நோர்வேயில், மற்ற இரண்டு பேர் கனடாவில், இன்னும் இரண்டு பேர் லண்டனில் என்று இண்டர்நேஷனல் லெவலில் எனது நட்பின் விஸ்தாரணம் பரந்து விரிந்திருக்கிறது என்ற தம்பட்டத்தின் அடியில் சந்திக்கவியலாத சோகம் இருக்கிறது. பார்க்க முடியுமா என்ற ஏக்கம் இருக்கிறது. பார்க்காமலே போய் சேர்ந்துவிடுவோமா என்ற பயம் இருக்கிறது.
இத்தனை வருடங்களுக்கும் மேலான பிரிவின் பின்னான சந்திப்பு ஒன்று நிகழுமாயிருந்தால் கூட அது இரண்டு கிழமையோ 10 நாளோ என்ற நிபந்தனைகளுடன் தான் நிகழும். அதுவும் தனித் தனியாக தான் சந்திப்போம். பள்ளி நாட்களில் ஆறு பேரும் ஒன்றாக சந்தித்து , சுற்றித் திரிந்தது போல் இனிமேல் நம்மால் சந்திக்கவோ திரியவோ முடியாது. பழைய வாழ்கையின் எந்த சுவடும் கிடையாத ஒரு சூழலில் உற்ற தோழியர் கூட இன்னொருவர் போல் நின்று நலம் விசாரித்துவிட்டு விலகிப் போவோமோ என்ற பரிதவிப்பைப் பார்க்கிலும் சந்திக்காமலே இப்படியே இருந்துவிடுவது மேல் என்று தோன்றுகிறது.
சந்திக்கிறோமோ இல்லையோ ஒருத்தரை ஒருத்தர் செல்லமாக சீண்டி , பொய்யாக சண்டை போட்டு, ஓயாமல் சிரித்துக் கொண்டு இருக்க கிடைத்திருக்கும் இந்த வாய்ப்புடன் இப்படியே காலங்கள் போய்க் கொண்டிருந்தாலே போதும் இன்னொரு தடவை காணாமல் மட்டும் போய்விடதீர்கள். உங்களையெல்லாம் திரும்ப தேடுமளவுக்கு உடம்பிலும் மனதிலும் எனக்கு தெம்பில்லை……!
இனிய தோழியர் தின நல்வாழ்த்துகள் !!
மனதிலிருந்ததை எல்லாம் எழுதிவிட்டாளா என்று திரும்ப படித்துப் பார்க்கிறாள் சாந்தி. விடிந்தால் சர்வதே நண்பர்கள் தினம். ஒவ்வொரு வருசமும் இந்த நாளில் தன்னுடைய பள்ளிக்கால தோழிகளை நினைத்து நண்பர்கள் தின வாழ்த்துகளை ஃபேஸ்புக்கில் போட்டுக் கொண்டிருந்தவள் இன்று முதல் முதலாக தன் தோழிகளுக்கென்றே வாழ்த்து எழுதிக் கொண்டிருக்கிறாள்/
தனக்குள் புன்னகைத்துக் கொண்டே தான் எழுதிய நண்பர்கள் தின பதிவை அவர்கள் ஆறு பேரையும் டாக் பண்ணி ஃபேஸ்புக்கில் பதிவேற்றினாள். விடிந்ததும் நாலு பேரும் திட்டுவதற்கென்றே வந்து போன் எடுப்பார்கள் என்று அவளுக்கு தெரியும்…
புன்னகைத்துக் கொண்டாள்…!! அவர்களிடம் திட்டு வாங்குவது கூட சந்தோசம் தான்.
நம்ப முடியவில்லை… 37 வருடங்களாக அந்த ஆறு பேரையும் தேடி தேடி அவள் அலைந்து கொண்டிருக்க அவளையும் அவர்களில் யாராவது ஒருத்தியாவது உலகத்தின் இன்னொரு மூலையிலிருந்து தேடுவார்களா என்று அடிக்கடி நினைத்து நினைத்து புழுங்கியிருக்கிறாள்… ஆனால் ஒரு நாள் ஃபேஸ்புக் மெசஞ்சரில் என்னை ஞாபகமிருக்கிறதா நான் உங்களோடு ஏ எல் படிச்சனான் என்று ஒரு வரியில் அவளுடைய அத்தனை வருட தேடல்களுக்கும் விடையாக அந்த அவளுடைய தோழிகளில் ஒருத்தியின் மடல் !!
அன்று அவளடைந்த சந்தோசத்தை குதூகலத்தை இன்ப அதிர்ச்சியை விவரிக்க முடியாது. கணவரும் பிள்ளைகளும் காதை மூடிக் கொள்ளுமளவுக்கு அந்த தோழியைப் பற்றியே பேசி பேசி உறங்கிப் போனாள்…!
அவர்கள் இருவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு பேசிக் கொள்ளும் போதெல்லாம் மற்றவர்களையும் எப்படியாவது கண்டு பிடித்துவிட வேண்டுமென்ற ஆதாங்கமும் , வேட்கையுமாய் தான் உரையாடல்கள் பெரும்பாலும் இருக்கும்.
கொஞ்ச நாளில் கனடாவில் இரண்டு தோழிகள் இருப்பது தெரிந்து அவர்களை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் இலங்கையிலிருக்கும் இன்னொரு தோழியையும் தொடர்பு கொண்டாகிவிட்டது. மிச்சம் 2 பேர். அதில் ஒருத்தி இந்திய இராணுவ தாக்குதலில் இறந்து போனதாக பலர் சொல்லியும் கூட இல்லை அது அவளாக இருக்காது என்று உறுதியுடன் தேடி கடைசியில் அவளையும் அவள் மூலமாக மற்றவளையும் தொடர்பு கொண்டு…..யப்பா எத்தனையோ இடர்களுக்கு பின் அறுந்து போயிருந்த நட்பு வலையை இதோ பழையபடி கண்டு பிடித்து நெய்து விட்டாள்..
இப்போதெல்லாம் நினைத்தவுடன் தனது தோழிகளுடன் போனில் பேசுகிறாள். ஞாயிற்றுக் கிழமையானால் போதும்…குளித்து முடித்து வீடியோ சாட்டில் தோழிகள் அத்தனை பேரும் ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணி சிரித்து கும்மாளமடித்து …..அந்த பதின்ம வயதிலேயே தக்க வைத்துக் கொண்டார்கள். தலை முடி நெற்றியடியில் நரை போடத்தொடங்கியிருந்தது… தோழிகள் இப்போது அவளைப் போலவே கண்னாடி போடுகிறார்கள். சுகர், பிரஷர் , வெயிட் போட்டது என்று அவ்வபோது சகஜ நிலைக்கு வந்தாலும் பெரும்பாலும் விழுந்து விழுந்து சிரித்து கதைக் கொண்டிருக்கிறார்கள் …. அவர்கள் பிள்ளைகளுக்கு கூட விநோதமாக இருந்தது அம்மாமார் இத்தனை வெள்ளையாய் , சிரித்தோ , இத்தனை குறும்பும் , நகைச்சுவையுமாய் பேசிக் கொள்வதெல்லாம் அவர்களுக்கு அதிசயமான விசயமாயிருந்தது. பொருட்காட்சியைப் பார்ப்பது போல் பார்ப்பார்கள். அவர்கள் கணவர்மார்களுக்கு சில நேரம் சலிப்பே வந்துவிடும். சில நேரம் அவர்களுக்கு கேட்கும் படி நக்கல் அடிப்பார்கள்…ஆனால் அவர்களோ அந்த தொலைபேசி உரையாடல் முடியும் வரை கணவர்கள் என்பவர்களை ஏதோ வேற்றுக்கிரக வாசிகள் போல் பார்ப்பார்கள். அங்கால போறீங்களா என்று ஒரு அதட்டலில் கணவர்மாரின் சப்தத்தை ஒடுக்கி விரட்டிவிடுவார்கள்.
ஒன்றேயொன்று தான் பாக்கியிருந்தது…நேரில் சந்திக்க வேண்டும்…!
இது தான் அவர்களுடைய பேசு பொருளாய் சில நாட்களாக இருந்து கொண்டிருக்கிறது. எல்லா தோழிகளும் ஆர்வமாய் ஒவ்வொரு பிளான் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் இவள் மட்டும் மௌனமாக இருந்தாள்.
அவர்களுக்கு அது ஆச்சரியமாகத் தான் இருந்தது. எத்தனை கஷ்டப்பட்டு தங்களை தேடி தேடி அலைந்து தொடர்பு கொண்டவள் சந்திப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மௌனமாக இருக்கிறாள் என்று…!!
இவள் மிகவும் பேராசைக்காரி ! தனது தோழிகள் தன்னுடையவர்கள் என்ற பொஸஸ்ஸிவ்னஸ் கொண்டவள். ,,சந்திப்பு என்பது எப்போதும் பிரிவின் முன்னறிவித்தல் என்பதை உணர்ந்தவள். ஒரு தடவை பிரிந்து இத்தனை வருடங்கள் அவள் மனதளவில் சோர்ந்து தொய்ந்து போனவள். இன்னொரு சந்திப்பின் பின்னான பிரிவை தாங்கிக் கொள்ளும் பக்குவமோ , சக்தியோ அவளிடம் இல்லை என்பதை நன்றாக உணர்ந்தவள். அதனாலேயே சந்திப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
அமுக்கமாக இருந்த அவளின் போக்கு அவர்களுக்கு எரிச்சல் மூட்ட கிண்டலில் ஆரம்பித்து வாக்கு வாதமாக மாற திரும்ப உங்களை சந்திச்சு திரும்பவும் பிரியிற அளவுக்கு என்னட்டை திராணியில்லை என்று குரல் கமர கத்தி விட்டு போனை வைத்துவிட்டாள்.… அந்த ஞாயிற்றுக்கிழமை போன் உரையாடல் அப்படி உடைந்து போனது.
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வெளிநாட்டில் குடிபெயர்ந்து வாழ்கையின் இன்னொரு அத்தியாயம் புது உறவுகளும் நட்புகளுமாய் தொடங்க வேண்டிய நிபந்தனைகளோடு நாட்கள் ஆண்டுகளை விழுங்கிக் கொண்டிருந்தாலும் மனதின் ஒரு கோடியில் பள்ளிக் காலங்களும் அந்த நாட்களில் ஒன்றாய் சுற்றித் திரிந்த அந்த ஐந்து சிநேகிதிகளின் நினைவுகளும் புதைந்து போய் கிடந்தன. அவ்வப்போது ஏதோ ஒரு பாட்டுக் கேட்கும் போதோ , ஏதாவது புத்தகங்களை பிரட்டும் போதோ டிவியில் யாராவது ஒரு நடிகையோ , எந்தக் குழந்தையின் விளையாட்டுத்தனமோ சிரிப்போ எதுவோ ஒன்று அந்த ஐந்து பேரில் யாராவது ஒருத்தியையாவது நினைவூட்ட சங்கிலித் தொடராய் பழைய நினைவுகள் நீர்குமிழி போல் அடைந்து கிடந்த ஞாபகங்களிலிருந்து ஒவ்வொருத்தியாக மனதின் அடியிலிருந்து மேலே எழுந்து வந்து சிரிப்பு மூட்டவோ அழவோ வைப்பாள்…..ஒரு சில நிமிடங்களில் கணவருக்கு தேநீர் போடவோ பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்கவோ வேண்டும் என்று மூளை அலாரம் அடிக்க தோழிகள் யாவரும் திரும்பவும் மனதின் கோடிக்குள் போய்விடுவார்கள்…
வாழ்கையில் சலித்துக் கொள்ளுமளவுக்கு எதுவும் பாரதூரமானதாயில்லை . வாழ்கை என்னவோ சுமுகமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது. பதினொருவருடமாய் காதலித்து காத்திருந்து கல்யாணம் பண்ணிய கணவன்..கண்ணுக்கு நிறைவாக இரண்டு பிள்ளைகள் என்று வாழ்கை அழகாக தான் இருந்தது, வாழ்கை பயணப்பட்ட வழியில் வந்த புதிய நட்புகளிலும் , உறவுகளும் சரி இயல்பான இனிமையான அனுபவங்களைத் தான் தந்து கொண்டிருந்தார்கள்…ஆனாலும் அந்த ஐந்து பேர் இல்லாத இந்த அத்தியாயம் நிறைவானதாக தெரியவில்லை.
அப்பாவின் மறைவின் போதும் , கல்யாணத்தின் போதும் பிள்ளைகளை சுமந்த போதும், பிள்ளைகள் பிறந்த போதும் அவர்களுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஐந்து பேரில் ஒருத்தியாவது எனக்கு பக்கத்தில் இந்த நேரம் இருந்திருக்கக் கூடாதா என்ற ஒரு கேவல் மனதுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது…. அது ஏன் என்று அவளுக்கு இன்னமும் தான் விளங்கவில்லை.
அவர்கள் அருகில்லாத நாட்களில் கூட அவர்கள் நினைவுகளாய் வந்து தொட்டுவிட்டு போகுமளவுக்கு அப்படியென்ன புதினமான விசேசம் அவர்களிடம் இருக்கிறது என்று அவளுக்கு இன்றும் தான் புரியவில்லை…!!
ஒரு மாதிரி மூன்று பேரின் தொடர்பு கிடைத்த பின் நான்காவது தோழி…!! உயிரோடு இருக்கிறாளா அல்லது இராணுவ தாக்குதலில் இறந்துவிட்டாள் என்பது தான் உண்மையா என்று தெரியாமலேயே மூளைக்குள் ஒரு உணர்வு இல்லை அவள் உயிரோடு எங்கேயோ , ஒரு அழகான குடும்பத்தின் தலைவியாக இருப்பாள் என்ற நம்பிக்கை கீற்று ஒளிர்ந்து கொண்டு தான் இருந்தது. ஃபேஸ்புக் முதற்கொண்டு எல்லா சமூக வலைத்தளங்களிலும் அவளுக்கென்று கடிதங்கள் எழுதி போஸ்ட் போட்டாள். ஏதாவது ஒரு கடிதம் அவள் கண்ணிலோ அல்லது அவளுடைய குடும்பத்தினர் கண்ணிலேயோ படாதா என்ற நப்பாசையுடன் பதிவேற்றினாள். ம்கூம்….. கடைசியில் தேவதை போல் ஒரு பள்ளிக்கூட தோழி அவள் இத்தனை காலமும் தேடியவளின் தொலை பேசி இலக்கத்தோடு தொடர்பு கொண்டாள். தலை கால் புரியவில்லை இவளுக்கு . குதூகலத்தில் குதித்தாள்.அதே நேரம் தயங்கினாள். இத்தனை வருசம் தேடிவிட்டு ஏன் போனில் கதைக்காமல் இருக்கிறாய் என்று கணவர் புரியாமல் கேட்டார்.
அவருடைய உலகமே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின் சொந்தக்காரர்களுடன் போன் பேசுவது , தொடர்பில்லாமல் போன நண்பர்களின் இலக்கம் கிடைத்துவிட்டால் உடனே அவர்களை அழைத்து பேசுவது… ஒவ்வொரு நாளும் லங்காஸ்ரீ.காமின் துயர் பகிர்வு பக்கத்தில் தனது ஊரை சேர்ந்தவர்கள் யாராவது இறந்து போயிருக்கிறார்களா என்று பார்த்து அவர்கள் குடும்பத்தினர் தொலை பேசி நம்பரை எடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்றிருக்கும். அப்படி இருக்கும் அவருக்கு 37 வருசமா தேடிய சிநேகிதியின் போன் நம்பர் கிடைத்து பேசுவதா வேண்டாமா என்று யோசிக்கும் மனைவியை புரிந்து கொள்ள முடியவில்லை.
இரவு வேலைக்கு போன மனுசன் காலமை வீட்டுக்கு வரும் போதே போன் கார்ட் வாங்கிக் கொண்டு வந்து ”எழும்பு வா உன்ர லண்டன் ஃபிரண்டுக்கு போன் எடு ” என்று விடிகாலையிலேயே நித்திரையில் கிடந்தவளை எழுப்பிவிட்டார்.
பிறகு கதைப்பம் என்று சாக்கு சொன்னவளை உலுப்பி எழுப்பி “எத்தினை வருசமாய் தேடினனீர்?? ஆர் என்றே தெரியாதவை கிளிநொச்சிக்காரர் , பரந்தன்காரர் என்றவுடன் ஓடிப்போய் அவவை பற்றி விசாரிச்சு ஏமாந்தனீரெல்லே ??? இப்ப என்ன வந்தது???
இவருக்கென்ன தெரியும்?? அவளுடன் கதைக்க போனால் எத்தனை விசயம் இருக்கு சொல்லி அழ?? எத்தனை விசயமிருக்கு ஷேர் பண்ண?? அதே மனநிலையில் அவள் இருப்பாளா?? இல்லை தன்னை விசரி என்று நினைப்பாளா ? என்னோடு பேச வேண்டுமென்ற ஆர்வம் அவளுக்கு இருக்குமா?? அவளுடைய கணவரும் இவர் போல் ஆதரவா இருப்பாரா அல்லது கொண்டு போய் போடு அங்கால உன்ர ஃபிரண்டை என்று தூக்கி எறிவாரா ?/ இத்தனை நாள் தேடலில் இல்லாமல் இருந்த கசடுகள் இப்போது அவள் மனதுக்குள் குழப்பத்தை தர….அவள் கண்ணில் கண்ணீர்.
சரி விடு நான் முதலில் கதைக்கிறன்… பிறகு நீ கதை ..
அவருக்கு அவ்வளவு ஆர்வம் ஏனென்றால் இந்த 37 வருட தேடலில் 22 வருடமாக அவரும் இந்த தேடலில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். இங்கே கிடைத்த அத்தனை சிநேகிதியரும் பக்கத்தில் இருந்தும் முகவரி முதல் முழு விபரங்களும் தொலைந்து போன தோழிமாரை தேடிக் கொண்டிருந்துவிட்டு இண்டைக்கு எல்லாரையும் கண்டு பிடிச்சும் கதைக்க தயங்கிறாளே என்று ஒரு சின்ன கோவமும் எழும்பியது.
அவரே டயல் பண்ணி ஸ்ப்பீக்கர் போனில் போட எடுத்தது அவள் தான்…!
ஹலோ என்ற அவளுடைய குரலை கேட்ட போது அப்பிடியே இருக்கிறது அவளுடைய குரல் என்று நினைத்துக் கொண்டாள் இவள்.
யார் சிவசோதியா கதைக்கிறீங்கள் ? என்ற இவரின் குரல் அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும்.
ஓஒம்….நீங்கள் யார் ??
நான் தேவன். உங்கட ஃபிரண்ட் சாந்தாவின்ர ஹஸ்பெண்ட்…இந்தாங்கோ கதையுங்கோ என்று விட்டு இவளிடம் ”இந்தா பிடி ..கதை” என்று போனை கொடுத்தார்.
ஹலோ…
ஆர் சாந்தாவா?? எப்பிடி இருக்கிறாய்??
ஓம்…. நல்லா இருக்கிறன்,,,நீ,,,,
மனதுக்குள் வேறு என்னனென்னாவோ எல்லாம் எழும்பினாலும் உரையாடல் என்னவோ வெகு சாதாரணமானதாக இருந்தது,,,
அம்மா எப்பிடி இருக்கிறாடி?? அப்பா எங்க ? அப்பாட்ட குடு என்றாள் அவள்..
பள்ளி நாட்களில் அவளுடைய வீட்டில் தான் சிவசோதி கொஞ்சக் காலம் தங்கியிருந்தாள். இருவரும் ஒன்றாக பாடசாலை போவதும் வருவதும்…கண்ணுக்குள் வந்து போனது. அப்பாவிடம் ஒரு ஜமஹா மோட்டார் சைக்கிள் இருந்தது. படம் பார்க்க போவதென்றால் அப்பா அதில் தான் எல்லாரையும் ஏற்றி இறக்குவார். ஓ லெவல் கணித பரீட்சைக்கு முதல் நாள் எக்ஸாம் டென்ஷன் குறையும் என்று சொல்லி அப்பா இவளையும் ஜோதியையும், வேறு சில நண்பிகளையும் அம்மாவுடன் நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு கூட்டிக் கொண்டு போனது ஞாபகம் வந்தது. அப்போதும் எப்போதும் அப்பா இவளையும் சிவசோதியையும் மோட்டார் சைக்கிளில் ட்ரிபிள் ஏற்றி கொண்டு தான் போவார்.
அவளுடைய அப்பா நல்லா வரைவார். பெண்களே தோற்றுப் போகுமளவுக்கு சமையல் மற்றும் தையலில் என்று கை தேர்ந்தவர். தச்சு வேலை, மேசன் வேலை என்று அவளுடைய தம்பிமாரை உதவிக்கு வைத்து கொண்டு ஏதாவது ச்ய்து கொண்டிருப்பது தான் அவருடைய பொழுது போக்கு . எப்போதும் அவள் கேட்கும் டிசைனில் அவளுக்கு உடை தைத்துக் கொடுப்பார். சிவசோதி வந்த பின் இருவருக்கும் ஒரே மாதிரி டிசைனில் சட்டை தைத்து தருவார். அதே போல் இவளும் ஊருக்கு போய்விட்டு திரும்ப வரும் போது தனக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி சட்டை எடுத்து வந்திருக்கிறாள். அப்பா முல்லைத்தீவில் வேலை பார்த்துவந்தார். வார இறுதியில் வீட்டுக்கு வருவார். திரும்ப திங்கட்கிழமை காலையில் போவார். வழியில் பரந்தனில் சிவசோதியின் வீட்டில் நின்று விட்டு தான் போவார்.
அப்பாவை பற்றி கேட்டதும் இருவருக்குமே அதெல்லாம் தான் நினைவுக்கு வந்தது…
ம்..
அப்பா இல்லையடி.. 91 லேயே மோசம் போய்ட்டார்..
சடாரென்று மறுமுனையில் அவளிடம் ஒரு கனத்த மௌனம். அந்த மௌனத்தின் கனமும் காரணமும் அவர்களிருவருக்குமே புரிந்த ஒன்று தான். தோழியாக இருந்தாலும் குடும்பத்தில் ஒருத்தியாக வாழ்ந்த அந்த நாட்கள் இப்போது நினைவுகளிலும் உணர்வுகளிலும் மட்டுமே…
இப்படி தேடி தேடி தொலைந்த முகவரிகளை புதுப்பித்து ஒரு மாலையாய் கோர்க்க அவர்களுக்கு 37 வருசங்கள் எடுத்திருந்தது. எப்ப சந்திக்கலாம் என்ற அவர்களின் ஆர்வத்தில் எந்த பிழையுமில்லை. அவளுக்கும் அவர்களைப் பார்க்க வேண்டும்…கட்டிப் பிடித்து சந்தோசமாக அழ வேண்டும். பழைய மாதிரி ஒரு பிளேட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட வேண்டும். அடிச்சு நுள்ளி ஓடி …ஓடுறதா ?? இந்த முழங்கால் வலியோடா ?? என்று நினைத்தவுடன் சிரிப்பும் வந்துவிட்டது. எப்பிடியாவது ஒரு நாள் சந்தித்தால் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி கண்டீன்ல வாங்கி சாப்பிட்ட அந்த பிங் கலர் பொரி உருண்டையும், பள்ளிக்கூடத்துக்கு வெளியில கச்சான் ஆச்சி விற்ற கச்சான் , சோளமும், பட்டுப்புளியும், மாங்காயும் நினைவாக அதெல்லாம் கொண்டு போய் ஒன்று கூடி சாப்பிட வேணும் என்ற ஆசை அவளுக்குள்ளும் இருந்தது.
அத்தனை வருசங்களுக்கு பிறகு தொலை பேசியில் சிவசோதியுடன் பேச எப்பிடி தயங்கினாளோ அது மாதிரி தான் சந்தித்த பின்னான பிரிதலின் கொடுமையை நினைத்து கவலைப்பட்டாள் அவள். பாடசாலை நாட்களில் பிரிவு என்பது விடு முறை முடிஞ்ச பிறகு திரும்ப சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை தந்துவிட்டு போனது. ஆனால் உள் நாட்டுப் போர் எல்லாவற்றையும் தலைகீழாக தூக்கி அடித்துவிட்டது. பறவைகளின் இறகுகளை வெட்டிப் போட்டு திக்குக்கு ஒன்றாக தூக்கி எறிந்தது அந்த போர்ச்சூழல்.
மரணங்களும் பறிகொடுத்த புனிதங்களும் உயிர்களும் உறவுகளும் நாட்களை நகர்த்தினால் போதுமென்ற கையறு மனநிலையை தந்துவிட்டது. எப்பிடியாவது உயிர் தப்பி போனால் போதுமென்று நாடு விட்டு நாடு போனோமே தவிர …போன இடத்தில் ஆசுவாசமாக மூச்சுவிட்டு எழும்புவதற்குள் பாதி ஆயுள் போய்விட்டது. பிறகு கலியாணம், குடும்பம், குழந்தைகள் என்ற வலையை கச்சிதமாக பின்னிக் கொண்ட போது சிநேகிதிகள் நினைவுகளில் மட்டும் ஒட்டிக் கொண்டு நின்றுவிட்டார்கள்.
அவ்வப்போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அட இந்தப் பாட்டு அவளுக்கு பிடிக்குமே என்று ஒரு தோழியை நினைத்துக் கொள்வாள். ஏதாவது ஒரு வெளிக்கள தடகள மைதானத்தில் ஓடுபவர்களை பார்த்தால் சுகந்தி ஜே யும் ஜனனியும், சாந்தி கணேஷும், ஏன் என்ர சிவசோதியும் கேசாவும் கூட என்ன மாதிரி ஓடுவார்கள் என்று நினைத்துக் கொள்வாள். டைமிங்காக யாராவது ஜோக் அடித்தால் அலட்சியமாக சிரிப்பாள். கேட்டால் இதெல்லாம் ஒரு ஜோக்கா..என்ர சுகந்தி சிவபாதம் ஜோக் அடிச்சு கேட்டதில்லையே நீங்கள் என்று கணவரை நக்கலடிச்சுக் கொண்டு போவாள். பழைய கல்கி புத்தகங்கள் கையில் அம்பிட்டால் போதும் அதில் வெளிவந்த சிவகாமியின் செல்வன் தொடரில் வந்த ஓவியங்களில் நாயகன் நாயகியின் ஓவியக்களை பார்த்து வரைந்து அதை அவளது சிநேகிதி கேசாவுக்கு கொடுத்தது நினைவுக்கு வரும். இங்கேயும் வந்த புதிதில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கிடைத்த இலவச வகுப்புகளுக்கு இன்னொரு சிநேகிதியுடன் போவாள். போகும் போது நல்லூரில் ஐயர் மாஸ்டரின் ஆங்கில வகுப்புகளுக்கு ரஜனியுன் சைக்கிளில் போய் வந்த நாட்கள் நினைவுக்கு வரும். அவர்களை அவளால் எங்கேயும் எப்போதுமே மறக்கமுடியவில்லை. அவர்கள் கிடைக்காத பொழுதுகளில் இவர்களை மறந்திருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைத்திருக்கிறாள். ஆனால் கிடைத்த பின் சந்திக்க பயந்தாள். என்னத்தை சொல்ல …என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டாள்.
தனக்குள் புன்னகைத்துக் கொண்டே தான் எழுதிய நண்பர்கள் தின பதிவை அவர்கள் எல்லாரும் வாசித்துவிட்டு காலையில் விடிந்ததும் தொலை பேசி அழைப்பில் தனக்கு கிடைக்க போகும் அர்ச்சனையை நினைத்து சிரித்துக் கொண்டாள்.
அவள் எதிர்பார்த்த படியே விடிந்ததும் அவர்களின் வாட்சம் குரூப் சிநேகிதியே…! லிருந்து அழைப்பு வந்தது. இவள் எடுக்கும் போது மற்றவர்கள் ஏற்கனவே தொடர்பில் வந்திருந்தார்கள்.…
பாத்தீயோ அவவிண்ட பதிவை என்று கேசா தொடங்க வழமை போல் சுகந்தி அதற்கு ஒரு நக்கல் அடிக்க சிவசோதி ஏண்டி இவள் எப்பவும் நெகட்டீவ்வாவே யோசிக்கிறாள்…பாஸிட்டீவ் எனர்ஜியை வைபிரேட் பண்ணடி…மெடிட்டேசன் பண்ணு என்று சொல்ல இவளுக்கும் வழமை போல் எரிச்சல் வர…. ஹப்பி ஃபிரண்ட்ஷிப் டே என்று துஷித்தா சூழலை மாற்ற…எல்லாரும் ஆளுக்கு ஒரு விஷ் சொல்ல நிலமை கொஞ்சம் சந்தோசமாக சம்பாஷணை தொடர்ந்தது.
எல்லாரும் ஒரே நேரம் ஒரு இடத்தில் சந்திக்க வேண்டும் என்று திடகாத்திரமாக அவர்கள் இருந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பது தான் இப்ப சந்திக்க பிரச்சினையாக இருந்தது எல்லா வகையிலும். விமான டிக்கெட் செலவிலிருந்து தங்குமிடம் வரை...அவற்றைக் கூட சமாளித்துவிடலாம் ஆனால் ஆறு பேரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சந்திப்பதென்றால் 12 பேரின் நேரமும் வேலையும் விரயமாகும். தனியா பிரயாணம் செய்ய முடியுமா ? புருசன்மார் விடுவினமா?? அவர்களும் வர சம்மதிக்க வேண்டாமா ??? இப்படி பல பல..விசயங்கள் அலசப்பட .
அப்ப சாந்தா சொன்னது சரி தானே என்று ரஜனி சொன்னாள்.
உண்மை தான் ஆனால் அதுக்காக சந்திக்காமல் இருக்கேலாது. சந்திக்க தான் வேணும்..எப்பிடியெண்டாலும் என்ற கேசாவின் கூற்றை எல்லோருமே ஆமோதித்தார்கள்.
அவ்ள் மௌனமாக இருந்தால் எங்களை சந்திக்க உனக்கு விருப்பமில்லையாடி என்று ஏகே 47னால சுடுற மாதிரி கேள்வி வரும் என்ற பயத்தில் இவள் வாயை திறக்க நல்ல வேளை... இவளுடைய கணவர் அங்கே வந்தார்..
யாரோட இப்பிடி சத்தமா கதைக்கிறாய்? கதைக்கிறியா சண்டை போடுறீயா என்று கொண்டு அவர் .
ஆர் தேவனா….? என்று கேசா கேட்டாள்.
தேவனை சுகம் கேட்டன் எண்டு சொல்லடி என்று சிவசோதி சொல்ல மற்றவர்களும் அதில் பங்கெடுக்க ..இவள் “ அப்பா எல்லாரும் கொஞ்சம் சுகம் கேட்கினம்….” என்று சொல்லி சிரிக்க…. ”எங்க விக்குதாம் எண்டு கேட்டு சொல்லு வாங்கி அனுப்பிவிடுவம்” “என்றார் இவர் …
ஏதோ பெரிய ஜோக் கேட்ட மாதிரி எல்லாரும் சிரித்தார்கள். இவளும் சிரித்தாள்.
வழமைக்கு மாறாக இவளுடைய சிரிப்பு இவளுக்கே விநோதமாக இருந்தது…!!
அப்படியே சிரித்தபடியே இவர்கள் பேசிக் கொண்டிருக்க இவளுடைய சத்தம் கேட்கவில்லை என்று சில விநாடிகளுக்கு பின்னால் தான் அவர்கள் உணர்ந்தார்கள்…!
என்னடி சாந்தா லைனை கட் பண்ணிட்டாளா ? ஒரு பை கூட சொல்லவில்லை - கேசா
இல்லை இல்லை லைனில் தான் இருக்கிறாள் என்று சுகந்தி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மறுமுனையில் அம்மா அம்மா Are you ok?? அப்பா அப்பா..call the ambulance அம்மா suddenly got collapsed என்று சாந்தாவின் மகனின் அலறல் சத்தம் கேட்டது இவர்களுக்கு.
அப்படியே திக்கித்துப் போனார்கள் மற்ற ஐந்து முனைகளிலும் .. என்னடி நடக்குது என்று கேசா தான் முனகினாள்..அவள் குரலில் துக்கமும் பயமும் கமறியது.
தெரியேலையடி.. மயங்கிவிழுந்திட்டாள் போல இருக்கு…என்று சுகந்தி…சொல்கிறாள்.
அம்மா அம்மா என்று மகன்மாரும், இஞ்சரப்பா சாந்தா என்னை பாரும் என்று கணவரின் குரலும்்ஒலித்த விதம் நிலமை சரியில்லை என்னமோ பாரதூரமா நடக்கிறது என்று இவர்களுக்கு புரிய….வைத்தது.
அம்மா Stay with us..Stay with us என்று மகனின் குரலைக் கேட்க இவர்களுக்கு அடி வயிற்றை ஏதோ ஒரு இராட்சச கை பிசைந்து கிழிப்பது போல் திகிலாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது…சாந்தா என்ற தோழியின் கதையில் முற்றுப் புள்ளி வைத்தாகிவிட்டது என்று அவ்ர்களுக்கு புரிந்துவிட்டது மகன்மாரின் அம்மா என்ற கதறல். ஒவ்வொரு முனையிலும் விசும்பல் சத்தங்களுடன் போன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
அதன் பின் எந்த ஞாயிற்றுக் கிழமைகளிலும் சிநேகிதியே வாட்சப் அழைப்பு வரவில்லை. அவர்களுடைய சம்பாஷணைகள் மௌனித்துப் போயின. யாராவது போன் எடுப்பார்களா என்று ஒருவரை ஒருவர் எதிர்பார்த்திருந்தாலும் அவள் இல்லாமல் ஒரு சம்பாஷணையை தொடக்க அவர்களில் யாருக்கும் மனம் வரவில்லை .
அவள் சொன்னது தான் சரி. இனி ஒரு பிரிவை தாங்கும் வல்லமையும் சக்தியும் அவர்களுக்கு இல்லை. எங்கே இருந்தாலும் அவர்கள் எல்லாரும் உயிரோடு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்ற நினைவோடு நாங்கள் சாகலாம்….!!